நடிகை வனிதா விஜயகுமார் எழுதி,இயக்கி,நடித்த மிஸஸ் & மிஸ்டர் பட இசை & முன்னோட்ட வெளியீட்டு விழாத்துளிகள்!
வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. ராஜபாண்டி – விஷ்ணு ராமகிருஷ்ணன் – டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாலகுரு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.ஜூனில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நடிகர் அன்பு மயில்சாமி, நடிகை ஃபாத்திமா பாபு, கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், அம்பிகா, பிரவீண் லால் வாணி, ஷகீலா, தனஞ்ஜெயன், வசந்தபாலன், ஸ்ரீகாந்த் தேவா, வனிதா விஜயகுமார், ஜோவிகா விஜயகுமார், தயாரிப்பாளர் மதியழகன், கிரண், ஷார்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில்,”வனிதா மேடம் நடிப்பதற்கு வருகை தந்த தருணத்தில் இருந்து தொடர்ந்து அவர்களை பார்த்து வருகிறேன். அவர்களுடைய போராட்டம் மிகப்பெரியது. ஒரு பெண்ணாக அவர் எதிர்கொள்ளும் சவால்களும் பெரியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த சமூகம் அவர் மீதான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. இதையும் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஒரு ஆண் பத்தாயிரம் மனைவிகளை கூட திருமணம் செய்து கொள்ளலாம். அது தொடர்பாக பெருமிதமாகவும் பேசலாம். இதனை பெருமிதமாக கருதும் சமூகத்தில் இருந்து ஒரு பெண் இதனை செய்யும் போது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கி, அவரை கேலிக்குரிய பொருளாக மாற்றி பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில், இவற்றையெல்லாம் துணிச்சலாக எதிர்கொண்டு அவர் போராடிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. நான் ஒரு இயக்குநராக இருக்கிறேனோ இல்லையோ, ஒரு பெண்ணாக அவர் செய்யும் அனைத்து செயல்களுக்கும் ஒரு ஆணாக ஆதரவு தர விரும்புகிறேன்.
ஷகிலாவிடம் கதை கேட்டால், இதுவரை உலகத்தில் யாரும் சொல்லாத கதை இருக்கும். அந்த கதையை அவரால் சொல்ல முடியும். ஷகிலாவை காமத்துடன் தொடர்பு படுத்தி நாம் பார்க்கும் போது அவரிடம் சொல்வதற்கு அழுத்தமான கண்ணீர் கதைகள் இருக்கின்றன. அது போல் வனிதாவிற்கும் சொல்வதற்கு கதை இருக்கிறது. அந்த கதை தான் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக தெரிகிறது. இந்த படம் வெற்றி அடைய மனமார வாழ்த்துகிறேன்,”என்றார்.
நடிகை அம்பிகா பேசுகையில், ”இந்த திரைப்படத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். இயக்குநர் வசந்த பாலன் இப்படத்தின் டைட்டில் தனக்கு பிடித்திருப்பதாக சொன்னார். அந்த டைட்டிலை தேர்வு செய்தது நான்தான். இது தொடர்பாக வனிதா பேசிய போது ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் இருக்க வேண்டும்? மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஆக இருக்கக் கூடாதா..!? என்றேன். அதனால் ஒரு சந்தோஷம். இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தை பார்த்தேன். பொழுதுபோக்காக இருக்கிறது.இப்போது உள்ள சூழலில் ஒரு படத்தை தயாரிப்பது, இயக்குவது என்பதெல்லாம் கடினமானது. அதுவும் ஒரு பெண்மணி செய்ய வேண்டும் என்றால் அதைவிட கடினம் . அதிலும் இது போன்றதொரு கதையை எழுதி இயக்குவது என்பது அதைவிட கடினம். அதே சமயத்தில் இது போன்ற கதையை வனிதாவால் மட்டுமே இயக்க முடியும். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அனைவரும் தவறாமல் திரையரங்கத்திற்கு சென்று இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், ”இந்த மேடை கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. கவர்ச்சிகரமான பெண்களுக்கு மத்தியில் நானும் இருப்பதால் என்னுடைய கவர்ச்சியும் ஒரு சதவீதம் அதிகரிக்கும் என நினைக்கிறேன்.வனிதாவை பற்றி இயக்குநர் வசந்தபாலன் அழகாக குறிப்பிட்டார். வனிதாவின் செயல்பாடுகளிலும், பேச்சுகளிலும் அவரிடம் உள்ள தன்னம்பிக்கையை பார்க்கிறேன். நம்பிக்கையுடன் அவர் வாழ்வதையும் பார்க்கிறேன். அவர்கள் தனக்கு பிடித்தது போல் வாழ்கிறார்கள். சவால் மிகுந்த இந்த உலகத்தில் தனக்கு பிடித்தது போல் வாழ்வது என்பது கடினமானது. இந்த துணிச்சல் என்னை கவர்ந்திருக்கிறது. இதில் ஒரு கட்டமாக அவர் இயக்குநராக உருவெடுத்திருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ் சினிமாவில் 240 படங்கள் வெளியானால் அதில் இரண்டு பேர் மட்டுமே பெண் இயக்குநர்கள். இந்த தருணத்தில் நிறைய பெண் இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் அதிகமாக உருவாகும் போது வித்தியாசமான கதைகளை எதிர்பார்க்கலாம். அந்த வரிசையில் வனதா இயக்கி இருக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் நல்லதொரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தத் திரைப்படம் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தி வெற்றியை அளிக்கும் என நினைக்கிறேன்,” என்றார்.
நடிகை ஃபாத்திமா பாபு பேசுகையில், ”நடிகை வனிதா விஜயகுமாரை 18 வயதிற்கு முன்னதாகவே எனக்குத் தெரியும். நாங்கள் இருவரும் ஒரே உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள். இவர் எப்போதும் மற்றவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இந்த படத்தின் போஸ்டரை ஒட்டும் பணியை கூட நள்ளிரவு இரண்டு மணி அளவில் மேற்பார்வை செய்தவர் தான் வனிதா. இந்த அளவிற்கு கடும் உழைப்பாளியான வனிதாவிற்கு அவருடைய அம்மாவின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். ஷகிலாவை இந்த படத்தில் புதிய அவதாரத்தில் நீங்கள் பார்க்கலாம். அவர் காமெடி செய்திருக்கிறார். அவருடைய நகைச்சுவை திறமையை வனிதா இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
ஷகீலா பேசுகையில், ”வனிதா நன்றாக பேசுவார். அக்கா என்று அன்பாக பேசுவார். ஆனால் கோபம் வந்து விட்டால், குரலை உயர்த்துவார். இந்தப் படத்தைப் பற்றி நான்கு நாட்கள் என்னுடைய வீட்டில் விவாதித்தார். ஐந்தாவது நாள் இப்படத்தை தொடங்கினார். படப்பிடிப்பிற்காக பாங்காக் செல்கிறோம் என்றார். இதில் நான் மட்டுமல்ல, என்னுடைய குழுவினர் அனைவரும் சென்றோம். பாங்காக்கில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தோம். 30 ஆண்டுகளுக்கு முன் கடினமாக உழைத்த காலகட்டங்கள் இந்த படப்பிடிப்பின் போது நினைவுக்கு வந்தன. எனக்கு குடும்பம் இல்லை என்று இணையம் வழியாக நிறைய முறை அழுது புலம்பி இருக்கிறேன். வனிதாவால் எனக்கு மிகப் பெரிய குடும்பம் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். எங்களுடன் வந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் அன்புடன் பணியாற்றினார்கள். பாங்காக்கில் சுற்றிப் பார்க்க இரண்டு நாள் மட்டும் அனுமதி அளித்தார் வனிதா. அதன் பிறகு சென்னை வந்து இங்கும் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பு முடிவடைந்த பிறகும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்தார். இந்த தருணத்தில் தயாரிப்பாளர் மதியழகனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் படம் நன்றாக இருக்கிறது, நான் நடித்திருக்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான், வனிதா போன்றவர்கள் எல்லாம் உரிமைகளை கேட்பதில்லை எடுத்துக் கொள்வோம்,” என்றார்.

ஜோவிகா விஜயகுமார் பேசுகையில்,”இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்க வைத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவர்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இப்படம் நிறைவடைந்து இருக்காது. இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தந்து, மனமார்ந்த ஆதரவை அளித்து வருவதால் தான் நாங்கள் தனியாக இல்லை என்று உணர்வு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் வருகிறது. நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். இதற்காக விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டார்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், ”தம்பிகள் பாலா & சதீஷ் இருவரும் இணைந்து ஸ்ரீனிக் ப்ரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு ஆலோசகராக நான் பணியாற்றுகிறேன். அவர்கள் மாதத்திற்கு ஒரு படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் முதல் படம் தான் வனிதா விஜயகுமாரின் மிஸஸ் & மிஸ்டர். இவர்கள் ஒரு கோடியில் இருந்து ஐந்து கோடி ரூபாய்க்குள் தயாராக படங்களை தான் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தையும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட முடியாத நிலை தான் இருக்கிறது. ஜோவிகாவிற்காக தான் இப்படத்தில் இணைந்தோம். நாங்கள் அனைவரும் ஜோவிகாவிற்கு சகோதரர்கள். நான் இந்தத் திரைப்படத்தை மூன்று முறை பார்த்து விட்டேன். படம் நன்றாக இருக்கிறது. கடைசி இருபது நிமிடம் சுந்தர் சி படம் போல் காமெடியாக இருக்கும்.இப்படத்தில் நாயகன் ராபர்ட் மாஸ்டர் தற்போது கோவாவில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இப்படத்திற்குப் பிறகு அவர் மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், ”இதுவரை 125 திரைப்படங்களுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறேன். ஆனால் வனிதா விஜயகுமாருடன் இணைந்து பணியாற்றியது சவாலானதாக இருந்தது, மறக்க முடியாததாகவும் இருந்தது. இந்த திரைப்படத்தில் ராபர்ட் , மாஸ்டர் வனிதா விஜயகுமார், ஜோவிகா என மூன்று டான்கள் இருக்கிறார்கள். இதில் ஜோவிகா தேர்வுதான் இறுதியானதாக இருக்கும். இந்த சிறிய வயதில் அவருக்குள் அபார இசைத்திறமை இருக்கிறது. இதற்கு அவருடைய தாத்தா, பாட்டி தான் காரணம். அவர்களுடைய ஆசி இவருக்கு இருக்கிறது. ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் இணைந்த ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சங்கி மங்கி..’ எனும் பாடல் 50 மில்லியனை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்களும் அதனை கடந்து புதிய சாதனையை படைக்கும். இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன. கிளைமாக்ஸில் சாமி பாட்டு ஒன்றும் இருக்கிறது. இந்தப் படத்தில் நான் பாடல்களை எழுதியும் இருக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் 40 வயதிற்கு மேற்பட்ட கணவன் – மனைவி என்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்பதை சொல்லி இருக்கிறார்கள். தற்போதைய தலைமுறையினருக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் ராபர்ட் மான்ஸ்டர் நடனத்தை விட நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் அவருடைய நடிப்பு பேசப்படும். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்,” என்றார்.
சதீஷ்-பாலா பேசுகையில், ”நாங்கள் இரட்டையர்கள் அல்ல, மூவர். மதியழகன் சொல்வதை செய்கிறோம். தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கும் ஜோவிகா விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவார்கள் என எதிர்பார்க்கிறேன். அதற்கும் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.
இயக்குநர் வனிதா விஜயகுமார் பேசுகையில்,”இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘பிதா’ படத்தில் மதியழகனுடன் நடித்து வருகிறேன். அந்தப் படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் தான் பாலாவும், சதீஷும். அனைவரும் சினிமாவை நேசிப்பதால் இப்போது நாங்கள் நண்பர்களாகி விட்டோம். அம்மாவிற்கு பிறகு அம்பிகா – ஷகிலா ஆகிய இருவரை தான் அம்மாவிற்கு நிகராக பார்க்கிறேன். ஷகிலா இந்த படத்தில் நடித்திருக்கிறார். என்னை இயக்குவது அம்பிகா தான். இந்த படம் தொடர்பான பணிகள் எதுவாக இருந்தாலும் அம்பிகா அக்காவிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் செய்தேன். இன்று வரை பல தருணங்களில் எனக்கு ஆதரவாக செயல்படுபவர் அம்பிகா அக்கா தான். வெளிநாட்டில் அனைவரும் ஒரே இடத்தில் தங்கி பணியாற்றினோம், இந்த அனுபவம் மறக்க முடியாதது.
இயக்குநர் பி. வாசு சாரிடம் ‘பொண்ணு வீட்டுக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். அந்தத் தருணத்திலேயே என்னிடம் திறமை இருக்கிறது என்று கண்டுபிடித்து பாராட்டியவர் பாத்திமா பாபு அக்கா. அவர்களுக்கும் நன்றி. சமூக வலைதளங்களில் என்னை பற்றிய விமர்சனங்களை படிப்பேன். ஆனால் கண்டுகொள்ள மாட்டேன்.இந்தப் படத்தில் ஷகிலா பேசுவது போல் ஒரு டயலாக் இருக்கும். ‘ஒரு பொண்ணு கர்ப்பமாக இருக்கும் போது அம்மாவை விட புருஷன் கூட இருக்கணும் ‘ என பேசுவார். இது என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த விஷயம்.ஜோவிகாவின் தயாரிப்பில் நான் ஒரு திரைப்படத்தை இயக்குவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஜோவிகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவர் இரண்டு படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த சுமந்த் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம் எஸ் ராஜூ ஜோவிகாவை அறிமுகப்படுத்துகிறார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. வனிதாவின் குழந்தை யார் என்பதை ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வருகை தந்து தெரிந்து கொள்ளுங்கள்,” என்றார்.


