சொர்க்கவாசல்- விமர்சனம்!

சொர்க்கவாசல்- விமர்சனம்!

சிறைச்சாலை என்பது கைதிகள் தாங்கள் செய்த தவறுக்காக தண்டனை அனுபவிக்கும் இடமாக மட்டுமின்றி, வெளியே வந்ததும் சமூகத்துடன் இணைந்து பொறுப்புணர்வுடன் வாழ அவர்களை மாற்றக்கூடிய இடமாக இருக்க வேண்டும். ஆனால் உண்மை நிலைமை வேறு. அப்படி நிலைமை தவறாக இருந்தக் காரணத்தால் 1999 -ல் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் இருந்த மத்திய சிறை சாலையில் கைதிகள் – சிறை காவலர்கள் உடன் நடந்த மோதலை மையமாக வைத்து ஒரு சினிமாவை உருவாக்கி இருக்கிறார்கள் – சொர்க்கவாசல் என்ற நாமகரணத்தில்.

அதாவது ரோட்டில் தள்ளு வண்டியில் சாப்பாட்டுக் கடை நடத்தி வருகிறார் பார்த்திபன் என்ற பெயரில் நாயகன் RJ பாலாஜி. அந்த ஏரியாவில் நடந்த ஒரு கொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதி சேர்க்கப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார். சில மாதங்கள் கழித்து பெயில் கிடைக்கும் சூழ்நிலை உருவாகிறது. பெயில் கிடைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சிறை அதிகாரி ஒருவர், பாலாஜியை அழைத்து, பிரபல தாதா சிகா (செல்வ ராகவன்) உணவில் பேதி மருந்து கலக்க சொல்கிறார். கட்டாயத்தின் பேரில் அந்த மருந்தை உணவில் கலப்பதற்கு முன்பே தாதா செல்வராகவன் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். இதன் காரணமாக சிறை கைதிகள் – காவலர்களுக்குள் பெரும் மோதல் வெடிக்கிறது. இந்த மோதலால் பாலாஜிக்கு கிடைக்க வேண்டிய பெயில் கிடைக்காமல் போகிறது. அதே சமயம் கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் பாலாஜிதான் தாதா சாவுக்கு காரணம் என்றெண்ணி பாலாஜியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். இந்த கலவரத்திலிருந்து ஹீரோ பாலாஜி தப்பித்தாரா? பெயில் கிடைத்ததா? என்பதை ரத்தம் தெறிக்க சொல்வதுதான் சொர்க்கவாசல் படக் கதை.

வாய் மட்டுமே மூலதனமாகக் கொண்ட ஆர்.ஜே பாலாஜி அழுவாச்சி, அப்பாவி மற்றும் அதிரடி கேரக்டரில் கமிட் ஆகி இருக்கிறார்.ஆனால், அவரின் கேரக்டர் வெவ்வேறு பரிணாமங்களை எடுக்கும்போது கொடுக்க வேண்டிய ஃபர்பாமென்ஸ் முழுக்க மிஸ்ஸிங். அதே சமயம் இந்த ரோலுக்காக புதுப்பேட்டை படத்தை பலமுறைப் பார்த்ததாலோ என்னவோ தனுஷ்-ஸை நினைவூட்டுவதில் ஜெயித்து விடுகிறார் பாலாசி !ஒரு ரிட்டயர்டு டானாகவும், சிறையையே கைக்குள் வைத்திருக்கும் கைதியாகவும் கனமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் செல்வராகவன் தன் ரோலுக்கு கொஞ்சமாவது நியாயம் சேர்க்க முயன்று இருக்கலாம். கார்டூனில் சொல்லப்பட்ட பில்ட் அப் வீணாகி போயுள்ளது.

சில காட்சிகள் என்றாலும், தனக்கென தனி முத்திரையாக, அதில் என்ன வித்தியாசம் காட்ட முடியுமோ காட்டி விட்டுச் சென்றிருக்கிரார் நட்டி. கருணாஸ் தனது அனுபவத்தால் படு கேஷூவலான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். இப்படத்தில் இவருக்கான கேரக்டர் வெயிட் ஜாஸ்திதான்.மேலும், அதிகாரியாக நடித்த ஷாரப், அம்மாவாக நடித்தவர், நாயகியாக நடித்த சானியா ஐயப்பன், டைகர் மணியாக நடித்தவர் என படத்தில் தோன்றிய மற்ற கதாபாத்திரங்கள் சொல்லிக் கொடுத்ததை சரியாக செய்திருக்கிறார்கள். திருநங்கை நடித்த அந்த காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது முகத்தை சுளிக்க வைக்கிறது.

தமிழ் பிரபா, அஷ்வின் ரவிச்சந்திரன், சித்தார்த் விஸ்வநாத் கூட்டணியில் வசனங்கள் எல்லாம் ரசிக்கக் கூடியவைதான். ஆனால், ஜெயிலில் உள்ள எல்லா கேரக்டர்களையும் நவீன ஓஷோ பாணியில் பேசவிட்டிருப்பது கவனச்சிதறலை ஏற்படுத்தி விடுகிறது. இப்படியா தத்துவ மழையை பொழிய வைப்பார்க்கள்..ச்சை..!

மியூசிக் டைரக்டர் கிறிஸ்டோ சேவியர் இசை பர்ஃபெக்ட் அது போல் கேமராமேன் பிரின்ஸ் ஆன்டர்சனின் ஒளிப்பதிவும் அபாரம்.படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனையும் சிறைக்குள்ளிருக்கும் உணர்வை ஏற்படுத்தி விடுகிறார். எடிட்டர் ல்வா ஆர்.கேவின் நேர்த்தியான கட்ஸ் கோர்வையான திரைமொழிக்கு பெரிதும் உதவுகின்றன. ஆர்ட் டைரக்டர்எஸ்.ஜெயசந்திரனின் பங்களிப்பு அடடே சொல்ல வைக்கிறது .

முழுக்க முழுக்க, நிஜ சம்பங்களை வைத்து, கதை, திரைக்கதை எழுதப்பட்டிருப்பதால் ஒரு டாக்குமெண்ட்ரித் தனம் இருந்து கொண்டே இருக்கிறது. இங்கு ஜாதிய அரசியலை, அதிகாரத்தை எதிர்த்து எதுவும் நடக்காது, எளியவனுக்கு அத்தனை எளிதில் எல்லாம் தீர்வு கிடைத்து விடாது என்பது உண்மை. ஆனால் இந்த உண்மையைப் படத்தில் சொன்னால் ஏற்றுக்கொள்ள மறுக்கவே தோன்றுகிறது.மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஹீரோ எதுவுமே புத்திசாலித்தனமாக செய்யாததும் அயர்ச்சியைக் கொடுக்கிறது, தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ஹீரோ எதிர்த்து ஜெயிக்க வேண்டும், ஏதாவது செய்ய வேண்டும் ஆனால் அது இப்படத்தில் இல்லை. இதை எல்லாம் தாண்டி வன்முறையும், ரத்தமும் ஒவ்வாமையை தருவதுடன் கதையின் கருவையே மறக்கடித்து அனுப்புகிறது.

மொத்தத்தில் – சொர்க்கவாசல்- டம்மி கேட்

மார்க் 2..5/5

error: Content is protected !!