ஸ்டேட் பேங்க் ஊழியர்கள் ஏப்பம் விட தடை! – புதிய கட்டுப்பாடுகள்

ஸ்டேட் பேங்க் ஊழியர்கள் ஏப்பம் விட தடை! – புதிய கட்டுப்பாடுகள்

பாரத ஸ்டேட் பாங்கு (SBI) வங்கிக்கு நீங்கள் போயிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் நிச்சயம் கோபபட்டிருப்பீர்கள் அல்லது புலம்பியாவது இருப்பீர்கள். உண்மையா? இல்லையா? நம் இந்தியாவின் முன்ணணி வங்கிகள் எல்லாம் வாடிக்கையாளர் சேவையில் எரிச்சல் தான் ஊட்டுகின்றன. அதிலும் இந்த எஸ்.பி.ஐ – அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் வழங்குவது என அரசினுடைய பல்வேறு தேவைகளை நிறைவேற்றுகிறது. மேலும், இந்தியாவில் நிறைய கிளைகள், நிறைய ஏடிஎம் மையங்கள் அதிகம் வைத்திருப்பது எஸ்.பி.ஐ தான். இதனால் எப்பொழுமே கூட்டம் நிரம்பி வழிகிறது. பணம் கட்ட, டிடி எடுக்க என டோக்கன் வாங்கினால் குறைந்த பட்சம் நமக்கு முன்னால் 50 பேர் காத்திருக்கிறார்கள். விடுமுறை நாளுக்கு அடுத்த நாள் போனால்…. 100 க்கும் குறையாமல் காத்திருக்கிறார்கள். கிட்டதட்ட அந்த வேலையை முடிக்க அரை நாள் ஆகிவிடுகிறது. காத்திருக்கும் பொழுதில் அங்கு அமர்ந்திருக்கிற எல்லா வாடிக்கையாளர்களுமே புலம்பித்தள்ளுவார்கள். டென்சனுடன் அமர்ந்திருப்பார்கள்.

மிச்சம் பிடிக்கிறேன் பேர்வழி என தேவையான ஆட்களை நியமிக்காமல், வங்கிக்கு வருகிற எல்லா வாடிக்கையாளர்களையும் காக்க வைப்பது மக்களின் நேரத்தை மதிக்காத போக்குதான். எஸ்.பி.ஐ மட்டுமில்லை ஐ.சி.ஐசிஐ, இந்தியன் வங்கி, கனரா வங்கி என எல்லா வங்கிகளும் வாடிக்கையாளர்களை பல்வேறு வேலைகளில் அலைகழிக்கிறார்கள்.

இந்நிலையில்தான் இந்தியாவின் முதல் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தன்னுடைய ஊழியர்களுக்கு உடை மற்றும் நடத்தை குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக கடந்த ஜனவரி 6 நடந்த கூட்டத்தில் ஸ்டேட் வங்கியின் மனிதவளத்துறை சார்பில் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ‘’பணி இடத்தில் நல்லொழுக்கத்தைப் பேணுவதை உறுதி செய்ய, உரிய ஆடை நெறிகளைப் பின்பற்ற வேண்டும். வங்கியின் ஒவ்வோர் ஊழியரும் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களே. இதனால் இருபாலின ஊழியர்களின் தோற்றம் வங்கியின் மீதான பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால் வங்கி ஊழியர்கள் அனைவரும் செருப்புகளுக்குப் பதிலாக ஷூக்கள் அணிந்துவர வேண்டும். டி-சர்ட்டுகள், ஜீன்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. மூத்த ஆண் பணியாளர்கள் ஃபார்மல் ஆடைகளில் மட்டுமே வாடிக்கையாளர்களைச் சந்திக்க வேண்டும். அதேபோல மூத்த பெண் ஊழியர்கள், ஃபார்மலான இந்திய அல்லது மேற்கத்திய ஆடைகளையே அணிய வேண்டும்.

சவரம் செய்யப்படாத, தலை வாரப்படாத பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். உடலில் துர்நாற்றம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். காலணிகளை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஷூக்கள் மற்றும் பெல்ட் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும். கட்டம் போட்ட சட்டைகளுக்கு ஒரே நிறத்திலான டையும், ஒரே நிற சட்டைக்கு வடிவமைப்புகள் நிறைந்த டையையும் அணியவேண்டும்.

மேலும் வாடிக்கையாளர்களுடனான சந்திப்பின்போதும் மற்றவர்களுடன் இருக்கும்போதும் ஏப்பம் விடுவதை அறவே தவிர்க்க வேண்டும். இது அடுத்தவர்களுக்கு உச்சபட்ச எரிச்சலை ஏற்படுத்துகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனை அறிவுரை சொன்ன மேலிடம் வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெளிவுப்படுத்த வில்லை என்பதுதான் சோகம்!

error: Content is protected !!