June 2, 2023

கூகுள் நிறுவனத்தில் அதிகரிக்கும் மீ டு சர்ச்சைகள் ; கண்டுகொள்ளாத சுந்தர் பிச்சை!

மீ டு சர்ச்சைக்கு இடம் கொடுக்காத நிறுவனம் என்று பெயரெடுத்த கூகுள் பெயர் இப்போது நாறுகிறது. கூகுளில் ஊழியர்களுக்கு இப்போதெல்ல்லாம் பாதுகாப்பு இல்லையென்றும் பாலியல் வன்முறைகள் அதிகம் இருப்பதாகவும் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. இது பற்றி விரிவாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று 1,378 ஊழியர்கள் திறந்த மடல் ஒன்றை சிஇஓ சுந்தர் பிச்சைக்கு அனுப்பியுள்ள விவகாரம் வெளியே தெரிந்த நிலையில் கூகுள் சர்ச்சைக்குரிய மேனேஜ்மெண்டாகி விட்டது.

கூகுள் நிறுவனம் தன் ஊழியர்கள் ஒவ்வொருக்கும் நல்ல சம்பளம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. அதே சமயம், சமீப காலமாக பெண் ஊழியர்கள் பாலியல் பாதிப்புக்கு உள்ளாவதாக அடிக்கடி புகார் எழுவது கூகுளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில், கூகுள் நிறுவன முன்னாள் பெண் பொறியாளர் எமி நியட்பெல்ட் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், ‘நான் பாலியல் புகார் கொடுத்த நபருடனே என்னை நேருக்கு நேர் மீட்டிங்கில் பங்கேற்க கூகுள் நிறுவனம் நிர்பந்தித்தது. அந்த நபர் என் பக்கத்து சீட்டிலேயே அமர்ந்து தொடர்ந்து பணி செய்தார். எனவே, தர்மசங்கடத்தில் வேலைவிட்டு வெளியேறினேன்,’ என்று தெரிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தை சேர்ந்த 500 ஊழியர்கள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு திறந்த கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘ஆல்பாபெட் (கூகுளின் தாய் நிறுவனம்) பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு பதிலாக புகாருக்கு உள்ளானவரை காப்பாற்றுகிறது. புகார் கொடுத்தவர் மீது சுமை ஏற்றப்பட்டு, அவர் வேலையை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறது. அதே சமயம் புகாருக்கு உள்ளானவருக்கு வெகுமதிகள் அளிக்கப்படுகின்றன. பாலியல் தொந்தரவு குறித்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராடியும் ஆல்பாபெட் மாறவில்லை. தொல்லை தரும் நபர்கள் இல்லாத இடத்தில் பணிபுரிய கூகுள் ஊழியர்களுக்கு உரிமை உண்டு. கூகுள் நிறுவனம் அதற்கு முன்னுரிமை அளித்து பாதுகாக்க வேண்டும்,’ என கேட்டுக் கொண்டுள்ளனர்