கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள்- மதுரை நீதிமன்றம் அறிவிப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள்- மதுரை நீதிமன்றம் அறிவிப்பு

மிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் 8ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். கடந்த 2015-ம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 17 பேரை கைது செய்தனர்.

நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த வழக்கு விசாரணை, கோகுல்ராஜ் தாய் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.

இறுதிகட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு வழக்கின் தீர்ப்பு வெளியானது. தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. முதல் குற்றவாளியான யுவராஜ் மீது அனைத்து குற்றங்களும் நிரூபணம் ஆகியுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். அதேவேளையில் சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை மற்றும் சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 8ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!