ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்!

ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்!

ட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாக கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தேனி மாவட்ட ஆவின் தலைவரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ.ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “கட்சியின் கொள்ளை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ.ராஜா, இன்று(நேற்று) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் “என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா திருச்செந்தூரில் தங்கியிருந்த போது அவரை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரின் சகோதரரும், தேனி மாவட்ட ஆவின் தலைவருமான ஓ.ராஜா சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஓ.ராஜா தேனியில் செய்தியாளர்களை சந்தித்து, “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிதான் காரணம். எனது விருப்பப்படியே சசிகலாவை சந்தித்தேன். சந்திப்பு பற்றி ஓ.பன்னீர்செல்வதிடம் தெரியப்படுத்தவில்லை. தற்போதைய நிலையே நீடித்தால் அ.தி.மு.க. ஒன்றுமில்லாமல் போய்விடும். கட்சியில் இருந்து என்னை நீக்கியது செல்லாது. என்னை பொறுத்தவரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாதான். அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்க சசிகலாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்” என்று கூறினார்.

இந்நிலையில் தென்மாவட்டங்களில் உள்ள தொண்டர்கள் சந்திப்பதற்காக சசிகலா நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, ”அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தொண்டர்கள் என்னை சந்திப்பார்கள். பிள்ளைகளைச் சந்திக்க போகிறேன்” என்று குறிப்பிட்டார்.

error: Content is protected !!