பீகாரில் உள்ள கயா நகரம் இனி ‘கயா ஜி’ என்று அழைக்கப்படும்!

பீகாரில் உள்ள கயா நகரம் இனி ‘கயா ஜி’ என்று அழைக்கப்படும்!

பீகாரின் கயாவில் உள்ள புத்தகயா, உலகின் மிக முக்கியமான மற்றும் புனிதமான புத்த யாத்திரை மையங்களில் ஒன்றாகும். இங்குதான் போதி மரத்தின் அடியில் கௌதமர் புத்தராக மாறுவதற்கான ஞானத்தை பெற்றார்.கயா நகரம் அதன் மத முக்கியத்துவத்திற்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ‘பித்ரபக்ஷ’ காலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களுக்கு ‘பிண்ட தானம்’ வழங்க கயாவிற்கு வருகிறார்கள்.

இந்த நிலையில் கயா நகரம் இனி ‘கயா ஜி’ என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். சித்தார்த், “உள்ளூர் உணர்வுகள், நகரத்தின் வரலாறு மற்றும் மத முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா, “பெயரை மாற்றும் இந்த முக்கியமான முடிவுக்காக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ‘கயாஜி’யில் வசிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று அவர் கூறினார்.

error: Content is protected !!