‘நரகாசூரன்’ இயக்குநர் சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கெளதம் மேனன்!

‘நரகாசூரன்’ இயக்குநர் சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கெளதம் மேனன்!

ரகுமானின் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரெடியாகி வரும் படம் ‘நரகாசூரன்’. இதனை ‘ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கிறார். இதில் ஹீரோவாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ‘மாநகரம்’ சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கார்த்திக் நரேன் நேற்று (மார்ச் 27-ஆம் தேதி) தனது ட்வீட்டர் பக்கத்தில் “சில சமயங்களில் நாம் ஒருவர் மீது வைக்கும் தவறான நம்பிக்கை, நம்மை கொன்றுவிடும். ஆகையால், ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன்பு ஒன்றுக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லையெனில் செய்யாத ஒரு தவறுக்காக நம் கனவு சிதைந்து போவதை காண நேரிடும்” என்று ஸ்டேட்டஸ் தட்டியிருந்தார். இந்த ட்வீட் மூலம் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கெளதம் மேனனை பற்றி தான் கார்த்திக் நரேன் கூறியிருந்தார். இதனையடுத்து கெளதம் மேனனும் கார்த்திக் நரேனின் பெயரை குறிப்பிடாமல் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

இதையடுத்து கார்த்திக் நரேன் பேசுகையில் “இந்த படத்திற்கு கெளதம் மேனன் பணமே இன்வெஸ்ட் பண்ணல. நாங்க எங்க சொந்த பணத்தை போட்டுதான் படத்தையே முடிச்சோம். நான் கெளதம் மேனன் சாரை நம்பி இந்த படத்துக்கான வேலைகளை துவங்கினேன். படத்தின் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வேறு ஒரு தயாரிப்பாளரிடம் லிங்க் செய்துவிட்டு கெளதம் மேனன் விலகி கொண்டார். ‘நரகாசூரன்’ படத்துக்கு பாதி பணம் போட்டதே இன்னொரு தயாரிப்பாளர் பத்ரி சார் தான். இன்னும் இப்படத்தில் பணியாற்றிய பலருக்கு சம்பள பாக்கி இருக்கு. இதுக்காக வாங்குன பணத்துல தான் கௌதம் மேனன் சாரோட மற்ற படங்களின் செலவுக்கு பயன்படுத்தியுள்ளதாக கேள்விபட்டேன். சீக்கிரமா கெளதம் மேனன் சார் இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வந்து படத்தையும் ரிலீஸ் செய்யணும்” என்று கார்த்திக் நரேன் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக கெளதம் மேனன் பேசுகையில் “இப்படத்திற்காக நான் ரூ.9 கோடி செலவு பண்ணியிருக்கேன். இந்த படத்தை எந்த சமயத்துல ரிலீஸ் பண்ணா சரியா இருக்கும்னு தோணுதோ அப்போ தான் வெளியிடுவோம். இன்னும் 10 நாட்களில் படத்தோட ரிலீஸ் தேதியின் அறிவிப்பு வெளியாகும்” என்று கெளதம் மேனன் கூறியிருந்தார்.

மேலும் இச்சர்ச்சை குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் “நரகாசூரன் படம் தொடர்பாக கார்த்திக் நரேன் போட்ட ட்வீட் எனக்கு வருத்தத்தை அளித்தது. இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே நான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். நான் தவறாக ஏதும் நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். எனினும் நான் கார்த்திக் நரேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ‘நரகாசூரன்’ படம் சம்பந்தமான எந்த ஒரு பணியிலும் நான் ஒரு இயக்குநராக தலையிடவே இல்லை. கார்த்திக் நரேன் கேட்டதற்காகவே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களை கமிட் செய்தோம்.

இப்படத்திற்கு செலவு செய்யும் பணத்தை எனது மற்ற படத்திற்காக செலவிடவே முடியாது. ஏனெனில், இந்த படத்தை விட ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பட்ஜெட் 7 மடங்கு அதிகம். அந்த படத்தை வேறொரு தயாரிப்பாளர் தான் தயாரிக்கிறார். ‘நரகாசூரன்’ டீமில் இருந்து விலக வேண்டும் என்று கார்த்திக் நரேன் ஆசைப்பட்டால், நான் மகிழ்ச்சியுடன் வெளியேறுவேன்.
ஏனெனில், இந்த படம் என்னுடைய பொறுப்பு அல்ல. சில தகவல் தொடர்பின்மையாலேயே கார்த்திக்கின் கோபம் வெளிப்பட்டிருக்கிறது. யாராலும் இத்திரைப்படத்தின் வெளியீட்டை நிறுத்த முடியாது.

எனது ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய 2 படங்களுமே ஹீரோக்களின் கால்ஷீட்டை வைத்தே தயாராகி வருகிறது. இதுவரை ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ஷூட்டிங் 70 நாட்களும், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வின் ஷூட்டிங் 45 நாட்களும் நடத்தப்பட்டது. இரண்டு பெரிய நடிகர்கள் நடித்து வரும் இவ்விரு பெரிய படங்களுமே இந்த ஆண்டு (2018) வெளியாகும். இவ்விரு படங்களுமே வேறு வேறு 2 தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படங்களில் எந்த ஒரு பிரச்சனையுமே இல்லை. அதேபோல், இயக்குநர் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திலும் நான் சம்பந்தப்படவில்லை. கார்த்திக் நரேனுக்கும், எனக்குமான கருத்து வேறுபாடு பேசி தீர்க்கப்பட்டது. ‘நரகாசூரன்’ படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. வெகு விரைவில் படம் ரிலீஸாகும்” என்று கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Related Posts