கலைஞர் தி.மு.க-வின் தலைவராகப் பொறுப்பேற்ற நாளின்று!
ஜூலை 27 – தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். பேரறிஞர் அண்ணா மறைந்த பிறகு, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை தனது தோள்களில் சுமந்து, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் வழிநடத்திச் சென்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற நாள் இன்று.
அண்ணாவின் மறைவும் தலைமைப் போட்டியும்:
தி.மு.க-வை நிறுவி, தமிழக அரசியலில் பெரும் புரட்சிகளை நிகழ்த்தி, ஆட்சிப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா, 1969 பிப்ரவரி 3 அன்று மறைந்தார். அண்ணாவின் மறைவு, தி.மு.க தொண்டர்களிடையே ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அந்தக் காலகட்டத்தில், தி.மு.க-வின் பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த அண்ணா மறைந்த பிறகு, கட்சியின் அடுத்த சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் சிக்கல் உண்டானது.
நாவலர் நெடுஞ்செழியனுக்கும், கலைஞருக்குமான பனிப்போர் காலம் அது. ‘போட்டிவழியே தலைவரைத் தேர்ந்தெடுப்போம்’ என்ற நிலைப்பாட்டை நெடுஞ்செழியன் எடுத்தார். கட்சியினர் இருவேறு தரப்பாகப் பிரிந்து இருவருக்கும் ஆதரவு அளித்தனர். கலைஞரை ஒருதரப்பும், நெடுஞ்செழியனை மற்றொரு தரப்பும் முன்மொழிந்தார்கள்.

கலைஞருக்கு பெரும்பான்மை கிடைக்கும் சூழல் உருவான நிலையில், நெடுஞ்செழியன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் யாரைச் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்ற சிக்கலான சூழல் ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் பெரியாரைச் சந்திக்கச் சென்றார் கலைஞர். ஆனால், அதற்கு முன்பே கலைஞரை சட்டமன்றக் குழுத் தலைவராகப் பரிந்துரைத்த அறிக்கை விடுதலை இதழில் பிரசுரிக்கப்பட்டது. ‘சட்டமன்றக் குழுத் தலைவர் பதவி கலைஞருக்கு’ என்று முடிவானது.
ஒற்றுமையின் முதல் அடியும் கலைஞரின் தலைமைப் பொறுப்பும்:
சட்டமன்றக் குழுத் தலைவராக கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், ‘கட்சியில் மூத்த உறுப்பினர்’ என்கிற அடிப்படையில் நெடுஞ்செழியனுக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்று கலைஞர்தான் முடிவெடுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் கலைஞருடனான கருத்து முரண்பாட்டால் நெடுஞ்செழியன் அதனை மறுத்தார். அந்தக் காலகட்டத்தில், அண்ணாவின் நினைவுநாள் கூட்டம், கலைஞர் தலைமையில் சென்னை தியாகராய நகரிலும், நெடுஞ்செழியன் தலைமையில் திருவல்லிக்கேணி தொகுதியிலும் என இருவேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.
அண்ணா உருவாக்கிய கட்சியில் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கலைஞர் சுதாரித்துக் கொண்டார். இருவருக்குமிடையே தொடர்ந்த கருத்து வேறுபாடுகளைக் களைய, நெடுஞ்செழியனை கட்சியின் பொதுச்செயலாளராக இருக்க அழைப்பு விடுத்தார். அதையடுத்து, சென்னையில் இருந்த ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில், ஐம்பது வருடங்களுக்கு முன்பு, 1969 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று, தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஆனார் நெடுஞ்செழியன்.
கருத்து முரண்பாடு ஏற்பட்ட கலைஞரைக் கட்சியின் தலைவராக முன்மொழிந்தவர் நெடுஞ்செழியன். இருவரும் அதே மேடையில் கட்டியணைத்துக் கொண்டனர். கட்சியின் ஒற்றுமைக்காக, கலைஞர் எடுத்த முதல் மற்றும் மிக முக்கியமான நடவடிக்கை அது. இந்தப் புரிதல், தி.மு.க-வை ஒரு குடும்பமாக வழிநடத்திச் செல்வதற்கான ஒரு வலிமையான அடித்தளத்தை இட்டது.

அரை நூற்றாண்டு தலைமைத்துவம்:
இந்திய அரசியலில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தின் மிக நீண்டகாலத் தலைவராக, தி.மு.க-வை சுமார் 50 ஆண்டுகள் தோளில் ஏந்தி வழிநடத்தியவர் கலைஞர். அவர் மறைந்த பிறகும், அவரால் வளர்க்கப்பட்ட தி.மு.க இன்று ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது என்பது மிகையில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல சவால்களையும், நெருப்பாறுகளையும் கடந்து கழகத்தை ஒரு ஆலமரமாக வளர்த்தெடுத்த பெருமை கலைஞரையே சாரும்.
கலைஞரின் பொதுவாழ்வுப் பயணம்:
கலைஞரின் பொதுவாழ்வு 80 ஆண்டுகளையும், ‘முரசொலி’ பத்திரிகை நிறுவனராக 75 ஆண்டுகளையும், கலைத்துறையில் 70 ஆண்டுகளையும், சட்டமன்றப் பணிகளில் 60 ஆண்டுகளையும் கடந்து, இறுதியாக தி.மு.க தலைவராகவும் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பின்னரே மறைந்தார்.
அவர் “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..!” என்று தன் கம்பீரக் குரலால் விளித்து, அத்தனை ஆண்டு காலமும் தொண்டர்களைக் கட்டிப் போட்டிருந்த தலைவராக விளங்கினார். தி.மு.க எனும் பேரியக்கத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்ற இந்த நாளை, இன்றைய தலைமுறையும் நினைவுகூர்வது அவரது தொலைநோக்கு பார்வையையும், அளப்பரிய உழைப்பையும், அசைக்க முடியாத தலைமைப் பண்பையும் போற்றுவதாகும்.
நிலவளம் ரங்கராஜன்


