செய்தியைக் கேட்க / Listen to News
சமீபகாலமாக இந்திய அளவிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் மேடைச் சிரிப்புக் கலையான ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ மிகப்பரிய கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கார்த்திக் குமார், அரவிந்த் எஸ்.ஏ, பிரவீன் குமார், அலெக்சாண்டர் பாபு போன்ற முன்னணி ஆண் கலைஞர்களின் தொடர் வெற்றிகளால் இத்துறை மிகப் பெரிய உயரத்தைத் தொட்டது. மேடை நகைச்சுவை என்பது வெறும் கேளிக்கையாக மட்டுமல்லாமல், சமூகத்தின் பலதரப்பட்ட அம்சங்களை நையாண்டி செய்யும் முக்கியக் களமாகவும் உருவெடுத்தது. எனினும், இத்துறையில் பெண் கலைஞர்களின் பங்கேற்பு மற்றும் அவர்களின் தனித்துவமான பார்வைகளுக்கான மேடைகள் மிகக் குறைவாகவே இருந்தன. அந்தச் சூழலில்தான், பெண்களின் அனுபவங்களையும் அவர்களின் குரலையும் மையமாகக் கொண்டு மேடை நகைச்சுவை புதிய வடிவம் பெறத் தொடங்கியது.
இந்தச் சூழலில், நடிகை, கூத்துக் கலைஞர், மேடை நாடகக் கலைஞர் மற்றும் யூடியூப் பிரபலம் எனப் பன்முகத் திறமையுடன் வலம் வரும் மாயா எஸ். கிருஷ்ணன், தமிழ் ஸ்டாண்ட் அப் காமெடி உலகில் நுழைந்து மிகக் குறுகிய காலத்தில் தவிர்க்க முடியாத முக்கியப் புள்ளியாக உருவெடுத்துள்ளார். பாரம்பரியக் கூத்து மற்றும் மேடை நாடகங்களில் தான் பெற்ற அனுபவத்தை நவீன நகைச்சுவையுடன் இணைத்து, தமிழ் மேடை நகைச்சுவைத் துறைக்கே ஒரு புதிய பரிமாணத்தை இவர் அளித்துள்ளார். ஆண் மையச் சூழலாக இருந்த ஸ்டாண்ட் அப் காமெடி களத்தில், தனது ‘பொம்ப்ளேள்’ நிகழ்ச்சி மூலம் அரங்கம் நிறைந்த சாதனைகளைப் படைத்து, பெண் கலைஞர்களும் இத்துறையில் வரலாறு படைக்க முடியும் என்பதை நிரூபித்து முன்னணியில் நிற்கிறார். ஆம்.. சென்னை மியூசிக் அகாடமியில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை நடைபெற்ற அவரது ‘பொம்ப்ளேள்’ ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ, இதற்குச் சிறந்த சான்றாக அமைந்தது. குறிப்பாக, 1,500 இருக்கைகள் கொண்ட அரங்கம் நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாக விற்றுத் தீர்ந்த நிலையில், மியூசிக் அகாடமி வரலாற்றிலேயே ஒரு புதிய மைல்கல்லை மாயா எஸ். கிருஷ்ணன் எட்டியுள்ளார். நிகழ்ச்சி நாளன்று அரங்கம் முழுவதும் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

‘மஞ்சுளா டீச்சர்’ என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாகுபாடு, பாரபட்சம், வெறுப்பு பிரச்சாரம் மற்றும் ஆதிக்க மனப்பான்மை போன்றவற்றை நையாண்டி கலந்து பேசும் அவரது டிஜிட்டல் வீடியோக்கள் இணையத்தில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை 7 மணிக்கு சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற ‘பொம்ப்ளேள்’ நிகழ்ச்சியில், மாயா எஸ். கிருஷ்ணன் தனி ஆளாக மேடையை ஆக்கிரமித்து பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.
நடிப்பு மற்றும் திரை அனுபவங்களுடன், கூத்து மற்றும் மேடை நிகழ்த்துக் கலைகளில் பெற்ற அனுபவத்தையும் தனது நகைச்சுவை நிகழ்த்தலில் திறம்படப் பயன்படுத்தி வரும் மாயா, பார்வையாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடும் தனித்துவமான மேடை மொழியை உருவாக்கியுள்ளார்.ஒரு தருணத்தில் அரங்கமே சிரிப்பால் அதிர, அடுத்த கணமே மாயாவின் எதிர்பாராத நையாண்டி வசனத்தில் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் மூச்சை இழுக்கும் நிலை; அதன் பின்னர் மஞ்சுளா டீச்சருடன் இணைந்து பாடி, ஆடி ரசிகர்கள் கொண்டாடும் தருணம் என நிகழ்ச்சி முழுவதும் ஒரே மாதிரியாக இல்லாமல், தொடர்ந்து புதுப்புது உணர்வுகளை பார்வையாளர்களுக்கு வழங்கியது.
சிரிப்பு முதல் அதிர்ச்சி வரை, அதிர்ச்சியிலிருந்து கொண்டாட்டம் வரை — ‘பொம்ப்ளேள்’ பார்வையாளர்களை வெறுமனே அமர வைத்து பார்த்த நிகழ்ச்சி அல்ல; அவர்களையும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாற்றிய மேடை அனுபவம். மஞ்சுளா டீச்சருடன் பார்வையாளர்கள் இணைந்து பாடியதும், ஆடியதும், அரங்கமே ஒரு கட்டத்தில் காமெடி ஷோவைத் தாண்டி ஒரு கொண்டாட்டக் களமாக மாறியதும் நிகழ்ச்சியின் மறக்க முடியாத தருணங்களாக அமைந்தன.
இதனால், சிரிக்கவும், அதிர்ச்சியடையவும், சிந்திக்கவும், பாடவும், ஆடவும் வைத்த ஒரு முழுமையான ‘கூத்து’ அனுபவமாகவே ‘பொம்ப்ளேள்’ அமைந்தது. ரசிகர்களிடம் பேராதரவைப் பெற்ற இந்த ‘பொம்ப்ளேள்’ நிகழ்ச்சியை, மாயா எஸ். கிருஷ்ணன் இனி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்று அரங்கேற்றத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

