சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியல்! – போர்ப்ஸ் ரிலீஸ்

சர்வதேச அளவில் அரசியல், தொழில், நிர்வாகம் என பல துறைகளில், சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவின், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்த ஆண்டும் முதலிடத்தில் நீடிக்கிறார். தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் அவர் முதலிடம் வகிக்கிறார். 13 ஆண்டுகளாக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்று வருகிறார். அவரைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் தெரஸா மே 2-வது இடத்திலும், பில்கேட்ஸ் பவுண்டேஷன் தலைவர் மெலிண்டா கேட்ஸ் 3-வது இடத்திலும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஷெரீல் சாண்ட்பெர்க் 4-வது இடத்திலும், ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர். இதேபோல் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் 19-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதே சமயம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமைச் செயலதிகாரியான சாந்தா கோச்சர் (55) இப்பட்டியலில் 32ஆம் இடத்தில் இருக்கிறார். இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்து பெப்சிகோ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாகப் பணியாற்றிவரும் இந்திரா நூயி (62) பட்டியலில் 11ஆவது இடத்தில் இருக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் ஹெ.சி.எல். நிறுவனருமான ஷிவ் நாடாரின் மகளும் ஹெச்.சி.எல். நிறுவனச் செயலதிகாரியுமான ரோஷினி நாடார் (36) சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் 57ஆவது இடத்தில் இருக்கிறார். மருந்துத் துறையில் சுயமாக நிறுவனம் தொடங்கி நடத்தி வரும் கிரண் மசூம்தார் ஷா (64) பட்டியலில் 71ஆவது இடத்தில் உள்ளார். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும் முன்னாள் உலகழகியுமான பிரியங்கா சோப்ராவுக்கு இப்பட்டியலில் 97ஆவது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.