வங்கதேசத்தில் பற்றியெரியும் பல்கலைகள்!
வங்க தேசத்தின் பல்கலைகள் பற்றியெரிந்து கொண்டிருக்கின்றன. வங்க தேசத்தின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்ற வேண்டுமாம், நம் நாட்டில் இருப்பது போன்ற ஒதுக்கீடல்ல! வங்க தேசத்தில் இருப்பது அந்நாட்டின் விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசின் வேலை வாய்ப்பில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்த போராட்டங்களைச் சாக்காக வைத்துக்கொண்டு இட ஒதுக்கீட்டு முறையை அரசு ஒழித்து ஆணை வெளியிட்டது.இந்த ஆணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் வங்க தேச உச்ச நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தது. அவ்வளவுதான். மெல்லத் துவங்கிய போராட்டம் தீவிரமடைந்து பல்கலைக் கழகங்களில் புகைமூட்டம் !

வங்க தேசத்தின் தோற்றமே மேற்கு பாகிஸ்தானின் உருது மொழி ஆதிக்கத்துக்கு எதிரான வங்காள மொழி உணர்வுதான். பிரிவினைக்குப் பின் ஏழு முறை நடைபெற்ற உருது மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டம், எட்டாவது முறையாக 1971ல் உருது திணிக்கப்பட்டபோது விடுதலைப் போராட்டமாகப் பரிணாமம் கொண்டது. அதில் வெற்றியும் பெற்றது. வங்க தேசம் உலக வரை படத்திலும் இடம் பிடித்தது. இந்த மொழிப் போராட்டத்தை விடுதலைப் போராட்டமாக மாற்றியவை வங்க தேசத்தின் பல்கலைக் கழகங்கள்! மக்கள் இஸ்லாமியர்களாக இருக்கிறார்களே தவிர, அவர்கள் முழுக்க முழுக்க வங்காளிகள். வங்க மொழிக்காகவும் அதன் உள்ளார்ந்த பண்பாட்டுக்காகவும் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயங்காதவர்கள். ஒன்றுபட்ட இந்தியாவின் ஆகச் சிறந்த அறிஞர்கள் அனைவரும் இன்றைய வங்க தேச எல்லைக்குள் பிறந்தவர்கள். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களில் எதிர்த்து முன் நின்றவர்கள்.
அவர்களால் தங்கள் மொழியையும் பண்பாட்டையும் எக்காரணங்களைக் கொண்டும் விட்டுத் தர இயலாது.. எனவே விடுதலைப் போராட்டமாக மாறிய மொழிப் போராட்டம் பல்கலைகளைக் கவ்வியது. மேற்கு பாகிஸ்தானின் இராணுவம் குறி வைத்துத் தாக்கியது பல்கலைக் கழகங்களைத் தான். குறிப்பாக தாக்கா பல்கலை வேட்டையாடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்களும் மாணவர்களும் குவியல் குவிலாகக் கொன்று அழிக்கப்பட்டனர். அவர்களைத் தனித் தனியாகப் புதைக்க இடமின்றியும் நேரமின்றியும் இராணுவ ட்ரக்குகளில் ஏற்றப்பட்ட மனித உடல்கள் தலைநகர் தாக்காவுக்கு வெளியே சுமார் 20 கி.மீ தொலைவுக்குக் கொண்டு செல்லப்பட்டு எவ்வித அடையாளங்களும் இன்றி சடங்குகள் ஏதுமின்றி ஒரேயடியாகக் கொட்டிப் புதைக்கப்பட்டனர்.
ஏறக்குறைய ஒரு கோடி மக்கள் இந்தியாவுக்குள் அடைக்கலமாகி இந்தியப் பொருளாதாரத்துக்குப் பெரும் சுமையாக மாறியதைக் காரணம் காட்டி இந்திய இராணுவம் வங்க எல்லைக்குள் நுழைந்தது. எஞ்சிய மக்கள் தப்பித்தார்கள். வங்க தேசம் பிறந்தது. போராட்டத்தின் தளபதி முஜிபுர் ரஹ்மான் அதிகாரத்துக்கு வந்தார். போராட்டத்தின்போது சொல்லொணாத் துயர்களை எதிர் கொண்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை வழங்கினார். இது தியாகிகளின் குடும்பத்தினருக்கான ஒதுக்கீடு. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகச் சாதியாக ஒடுக்கப்பட்டு நின்ற மக்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு அல்ல!ஆனால், நவீன பொருளாதாரம் உருவாக்கியுள்ள சீர்கேடுகளில் ஒன்றான வேலையின்மைக்கு எதிரான போராட்டமாக இதை மாற்றாமல், வங்க தேச வலதுசாரிகள் எந்தப் பல்கலைகள் விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினவோ, அதே வளாகங்களை தங்களின் முன்னேற்றத்துக்கு எதிரான போராட்டங்களாகத் துவங்கியுள்ளன.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இந்தப் போராட்டங்கள், மென்மேலும் வேலையின்மையைக் கூடுதலாக்கும். குறைந்த கூலிக்கு வேலை தேடி அலையும் நிலையை விரைவில் உண்டாக்கும். திரை மறைவில் நிதி மூலதனத்துக்குச் சேவகம் புரியும் சூழலை உண்டாக்கவே இந்தப் போராட்டங்கள் தூண்டி விடப்பட்டுள்ளன. இதுவே மாற்றத்துக்கான-முன்னேற்றத்துக்கான போராட்டங்களாக இருக்குமானால், “உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்ட பிறகு போராடலாமா? அது தேச விரோதமில்லையா?” என உருட்டத் தொடங்கி இருப்பார்கள். இதில் மிகப் பெரும் சோகம் என்னவெனில், ஷேக் முஜிபுர் ரஹ்மானால் துவங்கப்பட்ட திட்டம் அவருடைய மகள் ஷேக் ஹசீனா காலத்தில் காற்றில் பறக்க விடப்பட்டிருக்கிறது என்பதே!வங்க மக்கள் மட்டுமல்ல! இந்தியா உள்ளிட்ட உலக மக்கள் அனைவருக்கும் ஒரே தீர்வு உலக மயத்தின் கோரப் பிடியில் இருந்து விடுபடுவதே! இல்லையெனில் உயிரைக் கொடுத்துப் போராடிப் பெற்ற சுதந்திரம் வீணாகிப் போகும்!


