ஃபைட் கிளப் – விமர்சனம்!

ஃபைட் கிளப் – விமர்சனம்!

புது முக டைரக்டரான அபாஸ் அ ரஹமத் தனது முதலாவது படத்திலேயே வித்தியாசமான பாணியிலான கதை சொல்லல் மூலம் கவனம் ஈர்க்க முயன்றிருக்கிறார். இத்தனைக்கும் ஏகப்பட்ட படங்களில் பார்த்து சலித்த கதை, அதையும் பெரிய ஈர்ப்பில்லாத திரைக்கதையாக்கி இருந்தாலும் அதை பிரசண்ட் பண்ணிய விதத்தில் தானொரு தனித்துவமான கிரியேட்டர் என்பதை நிரூபிக்க இசையையும் எடிட்டிங் யுக்திகளையும் கதை சொல்லும் பாணிக்கு பயன்படுத்தி பாராட்டுதலுக்குரியவராகி விட்டார். அதிலும் இம்புட்டு வன்முறை தேவையா என்று யாரும் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே ஃபைட் கிளப் என்று டைட்டிலை வைத்திருப்பதில்யேயே பாஸ் மார்க் வாங்கி விட்டார் என்று சொல்லலாம்

கதை என்னவென்றால் பாக்ஸிங் சேம்பியனான கார்த்திகேயன் சந்தானம், தான் வாழும் பகுதியில் உள்ள இளைஞர்களையும், சிறுவர்களையும் விளையாட்டு வீரர்களாக்க ஆசைப்படுகிறார். அ, நாயகன் விஜய் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திகேயன் சந்தானத்தின் பாதையில் பயணிக்கிறார்கள். ஆனால், அதற்கு எதிராக சிறுவர்களையும், இளைஞர்களையும் கஞ்சாப் பழக்கத்திற்கு அடிமையாக்கி, அவர்களை வைத்து போதை விற்பனையை செய்து வரும் சங்கர் தாஸ், தனது தொழிலுக்கு எதிராக இருக்கும் கார்த்திகேயன் சந்தானத்தை அழிக்க திட்டம் போடுகிறார். இதற்கிடையே, சங்கர் தாஷுடன் இணைந்து கஞ்சா தொழிலில் ஈடுபடும் கார்த்திகேயன் சந்தானத்தின் தம்பி அவினாஷ், சங்கர் தாஷுடன் சேர்ந்து கார்த்திகேயன் சந்தானத்தை கொலை செய்து விடுகிறார். அந்தக் கொலை பழியை ஏற்றுஅவினாஷ் சிறைக்கு போக, மறுபக்கம் சங்கர் தாஷ் லோக்கல் அரசியல்வாதியாக வளர்ந்து அந்த பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். சங்கர் தாஸால் ஏமாற்றப்பட்ட அவினாஷ், சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவரை பழிவாங்க நினைக்கிறார். அதற்காக நாயகன் விஜய் குமாரை பகடை காயாக பயன்படுத்த, அதன் பிறகு என்ன நடந்தது?, விளையாட்டு வீரராக நினைத்த நாயகன் விஜய் குமாரின் வாழ்க்கை திசை மாறியதா?, இல்லையா? என்பதை அடிதடி, ரத்தம், வன்முறையுடன் சொல்லி இருப்பதே‘ஃபைட் கிளப்’.

இதில் நாயகன் செல்வா-வாக வரும் உறியடி விஜயகுமார். தன்னை ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரனாக முன் நிறுத்த போராடும் முனைப்பு மிக்க கதாபாத்திரம். அந்தக் கனவு முடியாமல் தோற்கும் போது அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் விட்டேத்தித்தனமாக திரிவதும், தனக்குள் பொதிந்திருந்த வன்மத்திற்கு தீனி கிடைத்ததும் தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களைப் பற்றியோ சற்றும் எண்ணிப் பார்க்காமல் கவலை கொள்ளாமல் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கும் இடத்தில், அந்த வாழ்க்கையின் வலிகளையும், விரோதமும் கோபமும் புத்தியை மழுங்கடிக்கச் செய்வதையும் கண் முன் நிறுத்துகிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உதவும் உடல் வாகு உருவாக்கிக் கொண்டவர் அந்த உடல் மொழியும் கண்களும், எமோஷனல் காட்சிகளுக்கு பெரிதாக ஒத்துழைக்காதது ஒரு குறை. மற்றபடி ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

வில்லன் ரோலில் வரும் சங்கர் தாஸ் பொட்டலம் ஓட்டும் போது ஒரு உடல்மொழி. கவுன்சிலர் ஆனப் பின்பு வேறுவிதமான உடல்மொழி என்று நடிப்பில் வெரைட்டி காட்டி அசத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் தன் நோக்கமாக எதைக் கூறினாரோ அதை அச்சு அசலாக செய்து முடித்து தலை நிமிரும் கதாபாத்திரம், முன்னாள் விதைத்த வினைக்கு வீழ்ந்து போவது போல் படைக்கப்பட்ட பாத்திரப் படைப்பு சிறப்பு. அதற்கு தன் அற்புதமான இயல்பான நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார் , குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கும் கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கமிட் ஆன கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்களாக இருப்பதோடு, கச்சிதமான நடிப்பு மூலம் காட்சிக்கு காட்சி கவனம் பெறுகிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களை தாண்டி, படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் வருகிறார்கள், அனைவரும் புதியவர்கள் என்றாலும் நடிப்பில் அது தெரியவில்லை. அனைவரது நடிப்பும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரும் பலம் சேர்த்திருப்பதோடு, படத்தில் இருக்கும் அடிதடி பின்னணிக்கு வலு சேர்க்கும்படி பயணித்திருக்கிறார்கள்.கதாநாயகியாக நடித்திருக்கும் மோனிஷா மோகனும், அவரது கதாபாத்திரமும் தேவையில்லாத ஒன்றாக இருந்தாலும், அவரது காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

கேமராமேன் லியோன் பிரிட்டோவின் கைவண்ணத்தில் பார்த்து பழக்கப்பட்ட வடசென்னையை வேறு ஒரு ஒளிவண்ணத்தில் காட்டி கிடா விருந்தளிக்கிறார். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையால்தான் படமே பாஸ் மார்க் வாங்குகிறது. ஒவ்வொரு கொலைக்காட்சிகளில் கூட உள்ளத்தை கொள்ளை கொள்ள வைப்பதிலும். வன்மத்தின் மீதே காதல் உண்டாக்க ராஜா போட்ட ட்யூனை தன் இசையில் தடம் பிடித்து கோர்த்து அசத்தி இருக்கிறார் மனிதர். கத்திரி மன்னன் கிருபாகரணின் தனித்துவமான புதுமையான எடிட்டிங் யுக்திகள் புதுவிதமான கதை சொல்லலுக்கு டைரக்டருக்கே வழியமைத்துக் கொடுத்திருக்கின்றன.

டைரக்டரை பொறுத்தவரையில் வட சென்னை என்றாலே வழக்கம் போல் போதைப் பொருள், அடிதடி, கொலை என்ற வழக்கமான பாணியை மையப்படுத்தி போதைக் கலாச்சாமும் அரசியல் போக்கும் இப்போதைய இளைஞர்களை எப்படி சீரழிக்கிறது என்பதை சொல்லும் கதையை கையில் எடுத்து இருந்தாலும் ,முத்தாய்ப்பாக காலங்கள் மாறும், மனிதர்கள் மாறுவார்கள், மற்றபடி வேறு எதுவும் மாறாது, என்ற ரீதியில் படத்தை முடித்திருப்பது, ”இதற்காகாகவா இம்புட்டு ரணகளம்?” என்று வாய் விட்டு புலம்ப வைத்து விடுகிறார்..

ஆனாலும் வன்முறையைக் கூட அழகியலாகக் காட்சிப்படுத்தி, புதுவிதமான துள்ளலான பின்னணி இசை மற்றும் புதுமையான பர்ஃபெக்டான எடிட்டிங் யுக்திகளுக்காகவும் இந்த “ஃபைட் கிளப்”பை சினிமா ரசிகர்கள் நிச்சயமாகப் பார்க்கலாம்.

மார்க் 3/5

error: Content is protected !!