ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 26–ந் தேதி வரை நீட்டிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 26–ந் தேதி வரை நீட்டிப்பு!

மிழகத்தில் ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆண்டுதோறும் ஆசிரியர் தேர்வாணையத்தால் ( TRB) நடத்தப்பட வேண்டும். இந்த தகுதித் தேர்வில் முதல் தாள் தேர்வுக்கு ஆசிரியர் படிப்பில் டிப்ளோமோ பட்டமும், இரண்டாம் தாள் தேர்வுக்கு பி.எட் பட்டப்படிப்பும் முடித்திருக்க வேண்டும். பி.எட் படிப்பு இரண்டாம் வருடம் படிப்பவர்களும், முதல் வருட மதிப்பெண் சான்றிதழைக் காட்டி விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.கொரோனா பெருந்தொற்று காரணமாக, கல்வியியல் பல்கலைக்கழகத்தால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தன. கடந்த பிப்ரவரி மாதம் அனைத்துத் தேர்வுகளும் நடத்திமுடிக்கப்பட்டன. ஆனால், தேர்வின் முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மார்ச் 7–ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மார்ச் 14–ந் தேதி முதல் ஏப்ரல் 13–ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த காலங்களில் சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் இந்த ஆண்டு சுமார் 4 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். கடைசி நாளான 13–ந் தேதிக்கு ஓரீரு நாட்களுக்கு முன்னதாகவே இணையதள பிரச்சனை காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் ஏராளமானவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. இது குறித்து தேர்வு வாரியத்திற்கு பலர் புகார் அனுப்பினர். மேலும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலத்தை இன்று முதல் (18–ந் தேதி) 26–ந் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலத்தை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டதை அடுத்து இன்று முதல் 26–ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!