கவிஞர் அஹ்னாஃப் விடுதலை: ஐரோப்பிய அரசுகளின் அழுத்தத்தால் கடும் சிக்கலில் இலங்கை அரசு! – சிவா பரமேஸ்வரன்!

கவிஞர் அஹ்னாஃப் விடுதலை: ஐரோப்பிய அரசுகளின் அழுத்தத்தால் கடும் சிக்கலில் இலங்கை அரசு! – சிவா பரமேஸ்வரன்!

லங்கையில் கொடூரங்களுக்குப் பெயர்போன பொலிஸ் பிரிவு ஒன்றால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டாகியும் அவரை இன்னும் நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தாதற்குச் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஒரு வருடத்திற்கும் மேலாகச் சிறை வைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாப் ஜஸீமை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐரோப்பிய நாடுகளின் ஒரு குழு, இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் மற்றும் ஆசிரியரான அஹ்னாஃப் ஜஸீம் விடுதலை செய்யப்பட வேண்டுமென, கடந்த மாதம் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து ஒன்பது நாடுகளை தூதர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அவரை விரைவாக விடுவிக்க வேண்டும், அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட அந்த 9 முன்னணி ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அந்த விசாரணை கண்துடைப்பாக இல்லாமல், சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு அமைவாக இருக்க வேண்டும் என்று ஐ நாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் கோரியுள்ளனர்.

அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று கடந்த மாதம் பல மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கைக்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று அந்த ஒன்பது நாடுகளின் தூதர்கள் கூறுகிறார்கள்.

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி ஒடுக்குவதற்கே பரவலாகப் பயன்படுகிறது என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுகின்றன. தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அஹ்னாஃப் ஜஸீம், `மன்னாரமுது` என்ற புனைப் பெயரில் கவிதைகளை எழுதி வருகிறார்.

அவர் எழுதிய `நவரசம்` எனும் கவிதை தொகுப்பின் சில பகுதிகள் தீவிரவாத கருத்துக்களை பரப்பும் வகையில் இருந்தன என்று காவல்துறை கூறுகிறது. ஆனால் அவரைக் கைது செய்த தமிழ் தெரியாக பொலிஸ் அதிகாரிகளால் அந்த கவிதை தொகுப்பிலிருந்த ஒரு வரியைக் கூட படிக்க இயலவில்லை என்று மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் மொழியியல் பேராசிரியர் மக்பூல் அலி முகமது நுஹ்மான் அந்த கவிதைத் தொகுப்பில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் எந்தக் கருத்துக்களும் இல்லை என்று கூறுகிறார். அவரது கருத்துக்கு சிங்கள மொழிப் பேராசிரியர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

`நவரசம்` கவிதை தொகுப்பை வாசித்தவர்கள், அதில் அவர் பயங்கரவாத கொள்கைகளுக்கு எதிரான கருத்தையே முன்வைத்துள்ளார், பயங்கரவாதத்தின் கோர முகத்தைக் காட்டுவதற்காக ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் படத்தை குறியீடாக வெளியிட்டிருந்தார் என்று கூறுகிறார்கள். அவர் தன்னை ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் செயற்பாட்டாளர் என்று ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளிக்கும் வரை அவரை நீதிமன்றத்தில் இலங்கை அரசு நிறுத்தாது என்று அறியப்படுகிறது.

“பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக இலங்கை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான சட்டங்கள் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு அமைவாக இருக்க வேண்டும்“ என்று அந்த தூதர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!