செறிவூட்டப்பட்ட அரிசி..! – கொஞ்சம் விளக்கம்!
இந்தியாவில் ஊட்டசத்துக் குறைப்பாட்டை ஒழிப்பதற்காக ரேஷன் கடைகளிலும் மதிய உணவுத் திட்டங்களிலும் 2024ம் ஆண்டுமுதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படும் என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். பல மாநிலங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. உணவு பொது விநியோகம் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இதுபோன்ற செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதலுக்கான விதிகளை சமீபத்தில் அறிவித்தது. பொது விநியோகத்துக்காகக் கொள்முதல் செய்யப்படும் அரிசியில் 1% செறிவூட்டப்பட்ட அரிசியாக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காரிஃப் பருவத்தில் கொள்முதல் நடக்கும் என்பதை மனதில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.”இதுபற்றிய விரிவான விழிப்புணர்வு பிரசாரங்களை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளிடமிருந்து வரும் நெல்லை மறுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது,” என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதை அடுத்துதமிழகத்தின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ”அடுத்த வருடம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், வழக்கமான அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசியைக் கலந்து விற்பனை செய்யப்படும்” என்று தகவல் தெரிவித்துள்ளார்.
இச்சூழலில் செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். இயற்கையாகவே அரிசி, எண்ணெயில் இருக்கும் ஊட்டச்சத்தைத் தொழில்நுட்பம் மூலம் பிரித்தெடுத்துவிட்டு, செயற்கையாகச் சத்துகள் சேர்க்கப்படுவதே ‘செயற்கை ஊட்டமேற்றம்’ எனப்படுகிறது. அதாவது இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் சேர்க்கப்பட்ட அரிசிதான் செறிவூட்டப்பட்ட அரிசி. வழக்கமான அரிசியில் இந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால், அவை சேர்க்கப்படும் விதம் பல உள்ளன.
அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் எக்ஸ்ட்ரூட்டர் என்ற கருவியைப் பயன்படுத்தி செறிவூட்டப்பட்ட அரிசி உருவாக்கப்படுகிறது. இவை வழக்கமான அரிசியுடன் சேர்க்கப்பட்டு வழங்கப்படும். இந்த அரசியின் பைகளில் (+F) என்று எழுதப்பட்டிருக்கும். இத்துடன் Fortified with Iron, Folic Acid, and Vitamin B12 என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருக்கும்.
செறிவூட்டப்பட்ட அரிசியின் அவசியம் என்ன? –
இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் மத்தியில் பரவலாக ஊட்டச்சத்து குறைபாடு நிலவுகிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ளவே மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கு அரிசியை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கும் நம் உணவுப் பழக்கவழக்கத்திலேயே உதாரணம் உள்ளது. அரிசி இந்தியர்களின் முக்கிய உணவு. இந்தியாவில் தனிநபர் ஒருவர் ஒரு மாதத்திற்கு சராசரியாக 6.8 கிலோ அரிசியை உண்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, அரிசியை நுண்ணூட்டச் சத்துக்களுடன் செறிவூட்டுவது ஏழைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க உதவும் என மத்திய அரசு கணித்துள்ளது. இதற்கான அளவை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வகுத்துள்ளது. அதன்படி 1 கிலோ அரிசியில் 10 கிராம் செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்படும். இதில் இரும்புச் சத்து 28 mg-42.5 மில்லி கிராம், ஃபோலிக் அமிலம் 75-125 மைக்ரோகிராம், மற்றும் வைட்டமின் B-12 0.75-1.25 மைக்ரோகிராம் இருக்கும். அதே அரிசியில் துத்தநாகம் 10 mg-15 mg, வைட்டமின் A 500-750 மைக்ரோகிராம் RE, வைட்டமின் B-1, 1-1.5 மி.கிராம், வைட்டமின் B-2 (1.25 mg-1.75 மி.கிராம்), வைட்டமின் B-3 (12.5 மி.கிராம் -20 மி.கிராம்) மற்றும் வைட்டமின் B-6 (1.5-2.5 மி.கிராம்) இருக்கும். இந்த அரிசியை வழக்கமான அரிசியை சமைப்பது போல்தான் சமைக்க வேண்டும். சமைத்தபின்னர் இதில் எந்த வித்தியாசமும் இருக்காது..
“உப்பில் அயோடின் கட்டாயம் சேர்க்கப்படவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டபோது சிறு உப்பு நிறுவனங்கள் கடைகளை இழுத்து மூடவேண்டிய நிலை வந்தது. இரத்தசோகை, இரும்பு மற்றும் வைட்டமின் குறைபாட்டிற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காணவேண்டும்.
ஒரு செயற்கையான செயல்முறையைக் கட்டாயம் என்று அறிவிக்கக் கூடாது. உணவு நொதிகள் மூலம் சத்துக்களைக் கொண்டு சேர்க்கலாம். பட்டை தீட்டப்பட்ட அரிசியால் வரும் பிரச்சனைகளைத் தீர்க்க இன்னொரு மோசமான முறையைக் கையாளக்கூடாது. ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்குக் காரணம் பொருளாதாரப் பிரச்சனைதான். அதை செறிவூட்டப்பட்ட அரிசியால் தீர்க்க முடியாது. மக்களின் பொருளாதாரப் பிரச்சனைகளை சரி செய்யவேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாட்டை செறிவூட்டுவதால் மட்டும் முழுமையாக வென்றுவிட முடியாது” என்றும் சிலர் சொல்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!
நிலவளம் ரெங்கராஜன்