தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்பு ; தரவரிசை பட்டியல் ரிலீஸ்: கவுன்சிலிங் எப்போது?

தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்பு ; தரவரிசை பட்டியல் ரிலீஸ்: கவுன்சிலிங் எப்போது?

ண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள 450க்கும் மேற்பட்ட என்ஜினியரிங் கல்லுாரிகளில், 2024–25ம் கல்வியாண்டில் பி.இ. – பி.டெக். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ‘ஆன்லைன்’ கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6ம்தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஜூன்) 12ம்தேதியுடன் நிறைவு பெற்றது.இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனர். இதில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி இருந்தனர். இந்த நிலையில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண் கடந்த மாதம் 12ம்தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 13ம்தேதி முதல் 30ம்தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணைப்படி, விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக்கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் இன்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:–

www.tneaonline.org என்ற இணையதளத்தில் என்ஜினீயரிங் தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதல் 2 இடங்களை மாணவிகள் பிடித்துள்ளனர்.

விண்ணப்பத்தில் தகுதி பெற்ற 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 பேருக்கு என்ஜினீயரிங் கலந்தாய்வு வருகிற 22–ந்தேதி தொடங்கி செப்டம்பர் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. விண்ணப்பத்தவர்களில் 9,777 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில் பயின்ற சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பொதுப்பிரிவில் சிறப்பு இட ஒதுக்கீடான மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர் பிரிவினருக்கான கலந்தாய்வு 25–ந்தேதி முதல் 27–ந்தேதி நடைபெறுகிறது.

பொதுக் கலந்தாய்வு ஜூலை 29ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. மேலும் துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 8ந்தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 11–ந்தேதியுடன் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.”இவ்வாறு அவர் கூறினார்.

200க்கு 200 மதிப்பெண் எடுத்து முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களின் விவரம் வருமாறு:–

1. தோஷிதா லட்சுமி (செங்கல்பட்டு)

2. நிலஞ்சனா (திருநெல்வேலி)

3. கோகுல் (நாமக்கல்)

4. அஸ்விதா (அரியலூர்)

5. சபிக் ரகுமான் (அரியலூர்)

6. சிபன் ஆஷி (கோவை)

7. பாவ்யாஸ்ரீ (விழுப்புரம்)

8. நவீனா (அரியலூர்)

9. அட்சயா (தஞ்சாவூர்)

10. கார்த்தி விஜய் (கிருஷ்ணகிரி)

இதேபோல 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேலம் வீரபாண்டியை சேர்ந்த ராவணி 199.50 கட் ஆப் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். 2,267 தொழிற்கல்வி மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 199 மதிப்பெண் எடுத்து ஈரோடு அஸ்வந்த் முதலிடம் பிடித்துள்ளார்.

error: Content is protected !!