விண்வெளிச் சந்தையில் எலான் மஸ்க்கின் 1.75 ட்ரில்லியன் டாலர் விஸ்வரூபம்!
உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), உலக நிதிச் சந்தை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப் பிரம்மாண்டமான பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) ஆயத்தமாகி வருகிறது. சுமார் 1.75 ட்ரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் பல லட்சம் கோடி ரூபாய்) மதிப்பீட்டுடன் களமிறங்கவிருக்கும் இந்த ஐபிஓ-வின் வெற்றி, அதன் அடுத்த தலைமுறை ராக்கெட்டான ‘ஸ்டார்ஷிப்’ (Starship) வெற்றியைச் சார்ந்தே இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் 12-வது சோதனை ஓட்டம், முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் அதே நேரத்தில் சில விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
முதலீட்டாளர்களைக் கவர்ந்த ஸ்டார்ஷிப் V3 சோதனை
2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்பட்ட ஸ்டார்ஷிப் முன்மாதிரியின் 12-வது சோதனை மற்றும் அதன் ‘V3’ புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பின் முதல் சோதனை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தச் சோதனை ஓட்டம் முழுமையான வெற்றியை அடையவில்லை என்றாலும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சரியான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை முதலீட்டாளர்களுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளது.

இந்தச் சோதனையின் போது, விண்கலம் திட்டமிட்டபடி மாதிரி செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியதுடன், இந்தியப் பெருங்கடலில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெற்றிகரமாக விழுந்து (Splashdown) சாதனை படைத்தது. “இந்தச் சோதனையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 100% துல்லியமான வெற்றியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. தங்களின் மேம்படுத்தப்பட்ட வாகனம் அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது என்பதற்கான ஆதாரம் மட்டுமே முதலீட்டாளர்களுக்குத் தேவைப்பட்டது. அதை இந்தச் சோதனை ஓட்டம் பூர்த்தி செய்துள்ளது” என்கிறார் ஸ்மார்ட்டெக் ரிசர்ச் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் வெனா.
மீள் பயன்பாட்டு சவாலும் பூஸ்டர் வீழ்ச்சியும்
விண்கலம் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்கிய போதிலும், அதன் கீழ் பகுதியான ‘சூப்பர் ஹெவி பூஸ்டரை’ (Super Heavy booster) மெக்சிகோ வளைகுடாவில் திட்டமிட்டபடி கட்டுப்படுத்தப்பட்ட முறையில் தரை இறக்க முடியாமல் போனது. அது நிலைதடுமாறி கடலில் விழுந்து நொறுங்கியது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் நூறு சதவீதம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய (Fully Reusable) நிலையை எட்டுவது இன்னும் சவாலான காரியமாகவே இருப்பதை இது உணர்த்துகிறது.
ராக்கெட்டின் பாகங்களை முழுமையாக மீண்டும் பயன்படுத்தும்போது மட்டுமே விண்வெளி ஏவுதலுக்கான செலவுகளைக் பெருமளவு குறைக்க முடியும். இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இதுவரை 15 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளது. தற்போதைய சோதனை ஓட்டம் குறைபாடுகளுடன் இருந்தாலும், அடுத்தடுத்த சோதனைகளில் இது சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் உத்வேகத்துடன் உள்ளனர்.
பண மழையைக் பொழியும் ஸ்டார்லிங்க் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதன்மையான வருவாய் எஞ்சினாக விளங்குவது அதன் ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவையாகும். இந்த ஸ்டார்லிங்க் வலையமைப்பை உலகளவில் விரிவுபடுத்தவும், ஏவுதல் செலவுகளைக் குறைக்கவும் ஸ்டார்ஷிப் ராக்கெட் மிகவும் அவசியமானது.
இதுமட்டுமல்லாமல், விண்வெளியை மையமாகக் கொண்ட கம்ப்யூட்டிங் (Space-based computing), விண்வெளிப் பாதையிலேயே இயங்கும் ஏஐ தரவு மையங்கள் (Orbital AI data-center satellites), மற்றும் மனிதர்களை மீண்டும் நிலவுக்கும், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கும் அனுப்பும் மஸ்க்கின் கனவுத் திட்டங்கள் அனைத்திற்கும் இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டே அஸ்திவாரம்.
வரலாறு காணாத ஐபிஓ: காத்திருக்கும் ஜூன் 4 ரோட்ஷோ
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இந்த மாபெரும் ஐபிஓ-விற்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு (Roadshow) ஜூன் 4-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த வெளியீடு வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், இதன் மூலம் மட்டுமே சுமார் 80 பில்லியன் டாலர் வரை நிதி திரட்டப்படலாம் எனத் தெரிகிறது. இது உலகிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வாக உருவெடுக்கும்.
முதலீட்டாளர்கள் மற்றும் நிதி மேலாளர்கள் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை வெறும் ராக்கெட் ஏவும் நிறுவனமாகவோ அல்லது செயற்கைக்கோள் நிறுவனமாகவோ மட்டும் பார்க்கவில்லை. மாறாக, எதிர்காலத்தின் விண்வெளி சார்ந்த செயற்கை நுண்ணறிவு (AI Infrastructure) உள்கட்டமைப்பைத் தீர்மானிக்கும் சக்தியாகவே பார்க்கிறார்கள். எலான் மஸ்க் தனது ‘xAI’ நிறுவனத்தின் மூலம் ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் ஆந்த்ரோபிக் (Anthropic) போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாகப் புதிய மாடல்களை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான வெற்றியை நோக்கி நீளும்Execution Risk
மார்க்கெட்வெக்டர் இண்டெக்ஸ் அமைப்பின் ஆய்வாளர் ஜெஸ்ஸி நாச்ட் கூறும்போது, “இந்த ஸ்டார்ஷிப் ஏவுதல் மூலம், இந்தத் திட்டம் தொடர் தோல்விகளுக்குள் சிக்கிக் கொள்ளும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் விலகியுள்ளது. ஆனால், திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் (Execution Risk) இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை” என்று எச்சரிக்கிறார்.
ஏனெனில், எதிர்காலத்தில் விண்வெளி ஏஐ தரவு மையங்களையும், மெகா விண்வெளி கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டுமானால், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ராக்கெட்டை ஏவுவது, செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவது, பின்னர் பூஸ்டர் மற்றும் விண்கலத்தை பத்திரமாகத் தரை இறக்குவது என அனைத்து நிலைகளையும் நூறு சதவீதம் வணிக ரீதியாகச் சாத்தியப்படுத்திக் காட்ட வேண்டும். அதுவரை, இந்த 1.75 ட்ரில்லியன் டாலர் பந்தயத்தின் மீதான எதிர்பார்ப்பும் சுவாரசியமும் உலக சந்தையில் தொடர்ந்து நீடிக்கவே செய்யும்.


