EIA சட்டத் திருத்த வரைவிற்கு எதிர்ப்பு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி!

EIA சட்டத் திருத்த வரைவிற்கு எதிர்ப்பு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி!

பரிணாம வளர்ச்சி என்பது ஒன்றை அழித்து அதன் மறைவால் புதியதாக ஒன்று தோன்ற வேண்டும்..இயற்கை உணவை மட்டுமே நம்பி நம் வாழ்வியல் இருக்குமேயானால் EIA amendment தேவையில்லை என்று சொல்வது சரியாக இருக்கும்…. அதற்கு உரம் வேண்டாம், ட்ராக்டர் வேண்டாம், அறுவடை மிஷின் வேண்டாம், நீர் புகா மூட்டைகள் வேண்டாம், சந்தைக்குக் கொண்டு செல்ல மாட்டு வண்டி போதும்……!

ஆனால் பம்பு செட், அம்மோனியம் பாஸ்பேட், மின்சாரம், மின் கம்பி செம்பு, மோட்டார், அது செய்ய இரும்பு, கரியமில வாயு, உஷ்ணத்தை வெளியிடும் குளிர்சாதனப் பெட்டி, வீட்டு முகப்பில் ஜப்பானிய கார், மோட்டார் சைக்கிள், தலைக்கு மேல் சுற்றும் ஃபேன், சமையல் எரிவாயு, குக்கர், மைக்ரோ, எலக்ட்ரிக் மாவு அரைவை இயந்திரம், மிக்சி….இவை அனைத்தும் இல்லாமல் வாழ உங்களால் முடியுமா?

இதை உபயோகிக்காதவர்கள் காட்டை அழிக்காதே என்று சொல்வதில் அர்த்தம் உள்ளது.

ஒன்றை அழித்துதான் ஒன்று வாழ வேண்டும்…

தொழில் வளம் பெருக வேண்டுமானால் தொழிற்சாலைகள் கூடுதலாக வேண்டும்… மரத்தை வெட்டாமல், நிலத்தை கையகப் படுத்தாமல் எப்படி வேலை வாய்ப்பை உருவாக்குவீர்கள்? மரத்தை வெட்டினால் மீண்டும் வேறு இடத்தில் இரண்டு மடங்காக நடுங்கள்…..

பசிக்கு சோறு மட்டுமே உண்டு, நெல் விளைவித்த பழைய காலம் போதுமா?

மாறி வரும் ஏறி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாழ்வாதாரத்தை விஸ்தரிக்க வேண்டாமா? அதை அரசு செய்தால் தவறா?

பொருளாதார முன்னேற்றம் வந்ததால்தான் இன்றைக்கு விமானப் பயணம் ₹2000 க்கு சாத்திய மாகி உள்ளது, சாலைகளில் பல வெளிநாட்டுக் கார்களும் விதவிதமான டிவிக்களும் வந்து உள்ளது. EIA சட்டத் திருத்த வரைவிற்கு எதிர்ப்பு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏற்படுவது.

எதிர்ப்பவர்கள் யார் யார்?

இதை 2004 ல் முன் மொழிந்து முதலில் கொண்டு வந்த காங்கிரஸ், மக்களையும் தொழிலையும் வாழ விடாமல் முடக்கிப் போடும் கம்யூனிஸ்ட்கள், சுற்றுப் புற போராளி என்ற பெயரில் மூங்கில் காட்டைத் திருடும் கும்பல், ஆளும் கட்சிக்கு எதிராக அரசியல் போராட்டம் செய்தால் மட்டுமே தங்கள் கட்சி அடுத்த ஆட்சியைப் பிடிக்க முடியும் என நினைக்கும் எதிர்கட்சிகள்…..

தன் வீட்டின் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்துக் கூட குப்பைத் தொட்டியில் போடாதவர்கள் இங்கே EIA பற்றி பேசி வருகிறார்கள்…..

நேற்று வரை முக அலங்காரம் செய்ய யூட்யூப்பில் அழகு சாதன குறிப்பு தந்த பெண்ணிற்கு ஏனோ தெரியவில்லை, அவள் சிபாரிசு செய்த பொருட்கள் சுற்றுப் புறத்தைப் பாழாக்கும் பெரிய பெரிய இரசானயனத் தொழிற்சாலைகளில்தான் உருவானது என்று……

இத்தனை சதிகளுக்கும் நடுவில் நாடு வளர்ச்சியின் நலனிலும், எல்லையைக் காப்பதிலும் இன்றைய மத்திய அரசைப் பாராட்டுகிறேன்….நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சட்ட வரைவு ஏற்கப் பட்டு நாடு நலம் பெறும்…..!

error: Content is protected !!