அட்சயத் திருதியை என்னும் நகை வியாபாரிகளின் கூட்டுக் கொள்ளை நாள்!

அட்சயத் திருதியை என்னும் நகை வியாபாரிகளின் கூட்டுக் கொள்ளை நாள்!

நம்மை காலம் காலமாக ஏமாற்றி வணிகம் செய்யும் கூட்டத்திற்கு ஒரு check mate ஆக நமக்குக் கிடைத்த ஒரு ஆயுதம் சமூக வலைத் தளம். நாம் எவ்வளவு சுரண்டப் பட்டு, வணிகர்கள் நம்மை ஏய்க்கிறார்கள் என்பதற்கான விழிப்புணர்வு பதிவு இது. தினசரி வாழ்க்கையில் நாம் வணிகத்தால் இழக்கும் பணம் நம்மிடம் இருந்தால் நம் சேமிப்பு எத்தனை உயர்ந்திருக்கும் என எடுத்துக் காட்டும் பதிவு இது.

அட்சயத் திருதியை என்னும் நகை வியாபாரிகளின் கூட்டுக் கொள்ளை நாள். ….இதோ அந்த கொள்ளைக்கான நாள் நெருங்கி விட்டது. தினசரி பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டன. அவர்கள் மக்களின் அறியாமையை உபயோகித்தும், மக்களின் பணத்தாசையை குறி வைத்தும், உழைக்காமலேயே பணம் கிடைக்கும் என்று கடவுளின் பெயரைச் சொல்லி கொள்ளை அடிக்கப் போகும் நாளை குறித்து வைத்து விட்டனர்.

இனி, மக்களே! நீங்கள் மட்டுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மாரியம்மனின் தாலி கீழே அறுந்து விழுந்துவிட்டது. ஆகவே ஒவ்வொரு ஆடவனும் தனது சகோதரிக்கு பச்சைக் கலரில் புடவை தானம் செய்ய வேண்டும், இல்லை என்றால் அவர்கள் தாலிக்கு ஆபத்து என்று ஒரு பயங்கர பீதியை இரண்டு வருடம் முன்பு கிளப்பி விட்டு, பச்சை புடவை மட்டும் அல்ல அனைத்து கிழிந்த, கந்தலான, கழிசடையான புடவைகள் அனைத்தையும் விற்றுத் தீர்த்து தாகம் தீர்த்துக் கொண்டது இந்த வியாபாரக் கொள்ளைக் கும்பல்.

அட்சயத் திருதியை பற்றி முதலில் பார்ப்போம்.

வருடம்தோறும் சித்திரை மாதம் அமாவசை கழிந்த மூன்றாம் நாள் திருதியை என்று சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் மூன்றாம் நாள்.

இந்து மார்க்கத்தில் சில விஷயங்கள் இந்த நாளில் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

1. பரசுராமர் அவதாரம் எடுத்தது
2. திரௌபதி வஸ்திராபரணம் நிகழ்ந்த நாள்.
3. பாற்கடல் அமுதுடன் வந்த மஹாலக்ஷ்மி விஷ்ணுவிடம் சேர்ந்தது
4. அன்ன பூரணியிடம் பிச்சாண்டார் பிச்சை பெற்றது
5. வனவாசத்தின் போது தருமருக்கு அட்சயப் பாத்திரம் கிடைத்தது
6. குசேலன் கிருட்டினனுக்கு அவல் கொடுத்த நாள்

இந்த நிகழ்வுகளில் எதுவுமே தங்கம் குறித்தோ அல்லது அன்றைய தினம் வாங்குவது குறித்தோ சொல்லப் படவில்லை.

ஒரு சில வழிகாட்டுதல்களில் அட்சய திருதியை தினம் ‘உணவு தினமாக அனுசரிக்க வேண்டும்’ என்றுதான் சொல்லப் பட்டுள்ளது.

காரணம் அன்றைய தினம் உணவு சம்மந்தமான நிகழ்வுகளே அதிகம் நிகழ்ந்துள்ளது . குசேலன் அவல் கொடுத்தது, சிவன் அரிசி பிச்சை பெற்றது, ஒற்றை சோற்றுப் பருக்கையுடன் அள்ள அள்ளக் குறையாத அட்சயப் (அழியாத) பாத்திரம் கிடைக்கப் பெற்றது.

இது தவிர வேறு எதுவும் கிடையாது. ஆகவே, அட்சயத் திருதியை அன்று தங்கம் வாங்க, இந்துக்களின் மத நம்பிக்கைகளை உபயோகிக்கும் அயோக்கியர்களுக்கு நீங்கள்தான் பாடம் புகட்ட வேண்டும்.

கோடி, கோடியாக பணம் கொட்டி, மாட மாளிகை, கூட கோபுரங்கள் அமைத்து, தளம் வாரியாக விற்பனை செய்யும் இந்த நகை வியாபாரிகள், எப்படி இந்த 20 ஆண்டுகளில் இத்தனை அமோக வளர்ச்சி அடைந்தார்கள் என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களின் தகிடு தத்தங்கள் கீழ்க் கண்டவாறு:

1. மக்கள் வாங்கும் நகைகளுக்கு உண்டான சரியான GST ரசீது கொடுப்பதில்லை. அவர்கள் நிர்பந்தித்து கொடுத்திருக்க வேண்டும். ஆனால் மக்களிடம் GST ரசீது கொடுத்தால் 3% வரி கட்ட வேண்டும் என்பதை மட்டும் கூறி, மக்களின் மனோ நிலைமையை அளந்து அவர்களே வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு செலுத்துகிறார்கள். கடைசியில் ‘ நீங்கதானே வேண்டாம்னு சொன்னீங்க’ என்று மக்கள் மீதே பழி போடுகிறார்கள். வரியில்லாமல் விற்பனை செய்ய மாட்டோம் என்று சொன்னால் ஏன் மக்கள் தங்கமே வாங்க மாட்டார்களா? நீங்கள் வரி போடாமல் வாங்கிய நகையினால் அவர்களுக்கு மேலும் கூடுதல் இலாபம் 3% என்பது நினைவில் இருக்கட்டும். இது கறுப்புப் பணம். அடுத்த முறை அவர்கள் இன்னொரு கிளை தொடங்கினால், பாதாள அறையில் இருந்து இந்தப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டுவார்கள்.

2. செய்கூலி மற்றும் சேதாரம்! சேதாரம் எனும் ஒரு மகத்தான கண்டுபிடிப்பை இவர்கள் வைத்துக் கொண்டு இஷ்டம் போல 10 முதல் 20% சதவீதத்தை மக்கள் தலையில் கட்டுகிறார்கள். 10% சேதாரம் என்றால், ஒரு நகை வாங்கும் நபரிடம் இந்த சேதார தங்கத் துகளை ஏன் திருப்பிப் கொடுப்பதில்லை? ஒரு நகை வியாபாரியிடம் ‘துபாய் மற்றும் எந்த ஒரு வெளிநாட்டிலும் சேதாரம் எனும் வழக்கமே இல்லையே, நீங்கள் மட்டும் ஏன் மக்களை சேதாரம் என்ற பெயரில் ஏமாற்றுகிறீர்கள்?’ என்றபோது அவர் சொன்ன விஷயம், ‘ துபாயில் நகைகளை இயந்திரங்கள் கொண்டு செய்கிறார்கள் ஆகவே சேதாரம் இல்லை’ என்றார். நான் ‘அப்படி என்றால் நீங்களும் இயந்திரம் கொண்டு நகை செய்து, சேதாரம் என்று எதுவும் போடாமல் விற்றால், உங்கள் நிறுவனம் அல்லவா வியாபாரத்தில் முதலிடம் பிடிக்கும்?’ என்ற போது. ‘போங்க தம்பி தமாஷ் பண்றீங்க. காலம் காலமா சேதாரம் சேர்க்காம வியாபாரம் யாருமே பண்ணது இல்லை. ஜனங்க கிட்டே சேதாரம் இல்லாம விக்கிறோம்னு சொன்னா, மத்த கடைக்காரங்க, நாங்க பித்தளையை வைத்து நகை செய்கிறோம்னு கிளப்பி விடுவாங்க. பாருங்க தம்பி.. எது சவுகரியமா நமக்கு இருக்கோ, அதை நான் ஏன் மாற்ற வேண்டும்?’ என்றார். மக்களின் அறியாமையை பணயம் வைத்து இவர்கள் நடத்தும் சூதாட்டத்திற்கு யார் மணி கட்டுவார்கள் என்று தெரியவில்லை.

ஆனாலும் சில கூடுதல் தகவல்களை உங்களுக்கு கீழ்க்கண்டவாறு அளிக்கிறேன்.

1. அடுத்த முறை நகை வாங்கும்போது, சேதாரத்திற்கான பணத்தை நீங்கள் ஏற்கனவே கொடுத்து விட்டதால், அந்த தங்கத் துகள்களை ஒரு பொட்டலத்தில் கட்டித் தருமாறு கேளுங்கள். ஏனெனில் அதன் உரிமையாளர் நீங்கள்தான்.

2. அட்சயத் திருதியை நாளில் தங்கமோ வைரமோ வாங்க வேண்டும் என்று எந்த சாஸ்த்திரமும் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் இந்த நகை வியாபாரிகள் அதற்க்கான, உரிய சம்ஸ்கிருத ஆதாரங்களை காட்டட்டும். சென்னையில் உள்ள சமஸ்க்ருதப் பண்டிதர்களைக் கொண்டு அவர்களிடம் சர்ச்சை செய்ய தயாராக இருக்கிறேன்.

3. குஜராத் மாநிலம் முழுவதும் விற்கப்படும் எந்த ஒரு நகைக்கும் சேதாரம் என்பதே போடப் படுவதில்லை. அப்புறம் ஏன் தமிழ் நாட்டில் மட்டும்?

4. எந்த ஒரு வெளிநாட்டில் வாங்கும் தங்கமும் சேதாரம் இல்லாமல் விற்கப் படுவதாகும்! அவர்கள் சேதாரம் இட்டால், அவர்கள் தலையை சேதாரம் செய்து விடும் அந்த அரசாங்கம்!. குறிப்பாக அரபு நாடுகள்.

5. அட்சயத்திருதியை அன்று அவல், பால் பாயாசம், அரிசி பிட்சை, ஆகியவைகளைக் கொண்டு இறைவனுக்கு நிவேதனம் செய்தால் போதும். கொளுத்தும் வெயிலில் பிரின்ஸ், ஜாய் ஆலுக்காஸ், ஜோஸ் ஆலுக்காஸ், முஸ்தஃபா ஜுவெல்ரி, ஃபாத்திமா ஜுவெல்ரி என்று இந்து மத நம்பிக்கைக்கு சம்மந்தமே இல்லாத நகைக் கடைகள், மற்றும் இந்து மதத்தின் பெயரை வைத்துக் கொள்ளை அடிக்கும் இந்துக் கடைகளிலும் சென்று நகை வாங்க வேண்டிய அவசியமே இல்லை. (இந்த விஷயத்தில் எல்லா மதத்தை சேர்ந்த நகைக் கடைக்காரர்களும் கூட்டுக் களவாணிகள். ஏமாறுவது யாராக இருந்தாலும் வியாபாரம் அவர்களுக்குத்தானே!) முடிவெடுங்கள்! இந்தமுறை அட்சயத் திருதியை அன்று நகை வாங்க மாடேன் என்று.

சென்ற வருடம் நகை நகை வாங்கியவர்களிடம் விபரம் கோருங்கள். அவர்களில் யாராவது திடீர் பணக்காரர் ஆகி விட்டார்களா, இல்லை அவர்கள் கூரையில் இருந்து பணம் கொட்டியதா, இல்லை லாட்டரியில் பணம் விழுந்ததா, இல்லை குப்பைத் தொட்டியில் தங்கக் கட்டி கொண்ட பெட்டி கிடைத்ததா என்று. இதில் எது ஒன்று அவர்களுக்கு நடந்திருந்தாலும், அட்சயத் திருதியை அன்று தங்கம் வாங்கும் முதல் ஆள் நானாக இருப்பேன்…….

வேரறுங்கள்! இந்துக்களின் மூட நம்பிக்கையையே முதலாக்கி கொள்ளை இலாபம் காணும் நகை வியாபாரக் கொள்ளை கும்பலை…

இந்த அட்சய திருதியை அன்று எல்லோரும் ஒரு மூட்டை அரிசி வாங்குங்கள். ₹1250/- ருபாய். ஆனால் ஒரு கிராம் தங்கள் 4500/- ருபாய். அரிசி வாங்கினால் விவசாயிகள் நலம் பெறுவர்.

நம் வீட்டிலும் வருடம் முழுவதும் சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது..

தங்கம் வாங்கினால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். இவர்கள் பணக்காரர்கள் ஆவதால் ஒரு பலனும் இல்லை….. வரி கூட ஒழுங்காகக் கட்டுவதில்லை!

விவசாயிக்குப் பணம் கிடைத்தால் விவசாயம் செழிக்கும். நமக்கும் உணவு கிடைக்கும். திட்டமிட்டுப் பரப்பப் படும் செய்தியை நம்பி தங்கம் வாங்குவதை விட்டு விட்டு நெல்லோ அரிசியோ வாங்குங்கள்.

விவசாயம் காப்போம்….

Related Posts