இலங்கைத்;தீவின் புவிசார் அரசியலில் ஈழத் தமிழ் மக்கள் பங்காளராக வேண்டும் – வி. ருத்திரகுமாரன்
2023 ஆம் ஆண்டு மூன்றாவது தமிழீழத் தேசியக்கொடி நாளை முன்னிட்டு நா.த.அ பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கைத் தீவின் புவிசார் அரசியலில் ஈழத் தமிழ் மக்கள் பங்காளராக, தீவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஒரு தரப்பாக மாற வேண்டும். இதற்கு தேவையான அரசியல், பொருளாதார இராஜதந்திர நகர்வுகளை நன்கு வடிவமைக்கப்பட்ட வியூகத்துடன் நாம் மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது செய்தியில் உலகில் புதிய அரசுகள் உலகளாவிய ரீதியிலும், பிராந்திய ரீதியிலும் அமைந்திருக்கும் வலுவுள்ள அரசுகளின் நலன்களின் அடிப்படையிலும், அரசுக்காக போராடும் தேசிய இனங்களின் பலத்தின் அடிப்படையிலுமே உருவாக்கப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஈழத்தமிழ் மக்களின் தாயகம் இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கின்றது என்றும், ஈழத்தாயகத்திற்கு அருகில் 7 கோடிக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் தாயகமான தமிழ் நாடு அமைந்திருக்கின்றது எனவும், வலுவான புலம்பெயர்ந்த (diaspora) ஈழத்தமிழர்கள் உலகெங்கும் பரந்துள்ளனர் எனவும், உலகின் பல பாகங்களில் வாழும் தமிழ் மக்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு உறவுகளாக உள்ளனர் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
வளமுள்ள வலுவான நாடுகடந்த தேசமாக அமைந்திருக்கும் தமிழீழ தேசம், சுயநிர்ணய அடிப்படையிலும், மீண்ட இறைமையின் அடிப்படையிலும், ஈடுசெய் நீதியின் அடிப்படையிலும் தமக்கென ஒரு நாடு அமைக்க உரித்துடையவர்கள் எனவும், வரலாற்றுப் பெருநகர்வில் தமிழீழ தேசத்திற்கான கதவுகள் திறக்கும் வாய்ப்புகள் உள்ளது எனவும் இவ் விடயத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், தமிழ்நாடும் சுதந்திரமான பங்கை ஆற்ற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேசியக்கொடிநாள் பிரகடனத்தில், தமிழீழத் தேசியக்கொடி, தமிழீழத்தின் இறைமையையும், சுயநிர்ணயஉரிமையையும் குறிக்கின்றது எனவும் மற்றும் இக்கொடி உலகம் முழுவதிலும் உள்ள தமிழீழ தேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும்பிரதிநிதித்துவப்படுத்துகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதையும், மேலும் இப் பிரகடனத்தில் தமிழீழத் தேசியக்கொடி, தமிழீழ தேசம் அந்நிய ஆட்சியிலிருந்தும், சிங்கள பௌத்த மேலாதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்கும் தமிழீழ தேசம் செய்த அளவிட முடியாத உன்னத தியாகத்தை நினைவூட்டுகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக நாம் நமக்கென்ற அரசை அமைக்கும் போதுதான் நமது தேசியக்கொடிக்கு அனைத்துலக அங்கீகாரம் கிடைக்கும் எனவும், அப்போதுதான் அனைத்துலக அரங்கில் நம் தேசியக்கொடி பட்டொளி வீசிப்பறப்பதற்கான நாள் வரும் எனவும் கூறியுள்ளார்.
** விசுவநாதன் ருத்திரகுமாரனின் முழுமையான செய்தி இதோ:
நவம்பர் 21. தமிழீழத் தேசியக்கொடி நாள். 1990 ஆம் ஆண்டு இரண்டாவது தமிழீழத் தேசிய மாவீரர் நாளையொட்டி நமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, நவம்பர் மாதம் 21 ஆம் நாள் முதன்முதலில் தமிழீழத் தேசியக்கொடி தேசியத் தலைவர் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.
இந் நாளை நினைவிற் கொணடு, 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் நாள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையின் விசேட அமர்வு நவம்பர் மாதம் 21 ஆம் நாளை தமிழீழத் தேசியக்கொடி நாளாக பிரகடனம் செய்தது.
தேசியக்கொடிக்கு மதிப்பளித்து அதனைக் கொண்டாடும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை மேற்கொண்ட பிரகடனத்தின் அடிப்படையில் இவ் ஆண்டு மூன்றாவது தடவையாகத் தமிழீழத் தேசியக்கொடி நாள் கொண்டாடப்படுகிறது. நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்த காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமக்கான கொடியை இழந்த தமிழர் தேசத்துக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உரிமை முரசறைந்து ஈழத் தமிழர் தேசத்துக்கான கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
உலகில் முதன்முதலின் 1219ஆம் ஆண்டு டென்மார்க் நாடு தனக்கான கொடியை அறிமுகம் செய்திருந்தது. இந் நாளில் இருந்து சுதந்திரமடைந்த பல நாடுகள் தமக்கான தேசியக் கொடியை அறிமுகம் செய்து தேசியக்கொடி நாளைக் கொண்டாடி வருகின்றன. உலகில் இதுவரை அரசமைத்துக் கொள்ளாத தேசங்களும் தமக்கான தேசியக்கொடிகளை பிரகடகனம் செய்துள்ளமையினை நாம் காண முடியும்.
தமிழீழ தேசத்தின் தேசியக்கொடியும் அரசமைக்க விரும்பும் ஒரு தேசிய இனத்தின் அரசியல் பெருவிருப்பை முரசறைந்து சொல்லும் குறியீடாக நிலைத்து நிற்கிறது. தமிழீழ மக்களின் ஒருமைப்பாட்டின் சின்னமாகவும், மாவீர்களின் தியாகங்களின் சாட்சியாகவும். தமிழீழ மக்களின தேசப்பற்றின் வெளிப்பாடகவும் அமைந்து பட்டொளி வீசிப் பறக்கிறது.
1990 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியக்கொடி அறிமுகம் செய்யப்பட்ட போது தமிழீழத் தேசியக்கொடி குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விடுத்த உத்தியோகபூர்வப் பிரகடனத்தையும் நாம் இத் தருணத்தில் நோக்குதல் பொருத்தம் மிகுந்ததாகும். இதனை நான் கடந்த வருட கொடிநாள் உரையிலும் உள்ளடக்கியிருந்தேன். இதன் முக்கியத்துவம் கருதி இவ் வருட உரையிலும் நான் இதனைக் குறிப்பிடுகிறேன்.
’’தேசிய சுதந்திரத்தை வேண்டி நிற்கும் ஒரு மக்கள் சமுதாயத்துக்கு ஒரு தேசியக்கொடி இன்றியமையாதது. தேசிய தனித்துவத்தையும், ஒருமைப்பாட்டையும், இறைமையையும் ஒரு தேசியக்கொடி சித்தரித்துக் காட்டுகிறது. தேசாபிமானத்தின் சின்னமாகவும் அது திகழ்கிறது. அரசியல் சுதந்திரத்தின் ஆணிவேரான குறியீடாகவும் தேசியக்கொடி அமைகிறது’’ எனத் தமிழீழத் தேசியக் கொடி அறிமுகம் செய்யப்பட்டமை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்திருந்தது.
மேலும், தேசியக்கொடியின் நிறங்களாக மஞ்சள், சிவப்பு கறுப்பு, வெள்ளை நிறங்கள் அமைந்திருப்பதற்கான காரணங்கள் குறித்தும் விடுதலைப்பலிகள் அமைப்பு மக்களுக்கு விளக்கம் அளித்திருந்தது.
தமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு. அந்தத் தாயகம் அவர்களது சொத்துரிமை. தமிழீழ மக்கள் தனியானதொரு தேசிய இனம் என்பதால் அவர்களுக்கு தன்னாட்சி உரிமை உண்டு. இந்தத் தன்னாட்சி உரிமை அவர்களின் அடிப்பமையான அரசியல் உரிமை. தமது தாயகத்தை மீட்டெடுத்து. தன்னாட்சி உரிமையினை நிலைநிறுத்தவதற்காக தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் அறத்தின்பாற்பட்டது. மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதனை மஞ்சள் நிறம் சுட்டி நிற்கிறது எனவும், தேசிய சுதந்திரம் பெற்று தமிழீழத் தனியரசை அமைத்து விட்டாற்போல நாம் முழுமையான சுதந்திரம் பெற்றதாகக் கொள்ள முடியாது. தமிழீழ சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும். வர்க்க சாதிய முரண்பாடுகள் அகற்றப்பட வேண்டும்.
பெண்அடிமைத்தனம் நீக்கப்பட வேண்டும. அதற்கு சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமத்துவமும் சமதர்மமும் சமூகநீதியும் நிலைநாட்டப்பட வேண்டும். இப்படியான புரட்சிகரமான மாற்றத்தை வேண்டிய அரசியல் இலட்சியத்தை சிவப்பு நிறம் குறியீடு செய்கிறது எனவும், விடுதலைப்பாதை கரடுமுரடானது. சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது.
இத்தனையையும் தாங்கிக் கொள்ள இரும்பு போன்ற இதயம் வேண்டும். அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். என்றும் தளராத உறுதி வேண்டும். கறுப்பு நிறம் மக்களின் மனஉறுதியினைக் குறித்துக் காட்டுகிறது எனவும், விடுதலை அமைப்பும், மக்களும், தலைவர்களும் தூய்மையையும், நேர்மையையும் க டைப்பிடிக்க வேண்டும்என்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கின்றது எனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மக்களுக்கு விளக்கம் அளித்திருந்தது.
தமிழர்கள் ஒரு தொன்மையான வரலாற்றைக் கொண்ட மக்கள். குறைந்தது 70 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட நீண்ட வரலாறு தமிழ் மக்களுக்கு உண்டு. இந்த நீண்ட நெடும் வரலாற்றுக்காலத்தில் தமிழ் மக்களிடம் அரசுகள் இருந்தன. இந்த அரசுகள் பல்வேறு கொடிகளைக் கொண்டவையாக அமைந்திருந்தன. இதில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சோழப் பேரரசின் கொடியாக புலிக்கொடி அமைந்திருந்தது. தமிழர்களின் வீரத்தையும் மாண்பையும் பிரதிபலிப்பதாக இப் புலிக்கொடி அமைந்திருந்தது. இப் புலிக்கொடியினை அடையாளமாகக் கொண்டு ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தினைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியினையையும், தமிழீழத் தேசியக்கொடியினையும் வடிவமைக்கச் செய்தார்.
சோழர் ஆட்சிக்காலத்தில் பறந்த புலிக்கொடியின் வரலாற்றுநீட்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியையும் தமிழீழத் தேசியக் கொடியையும் நாம் பார்க்க முடியும். தமிழீழத் தேசியக்கொடி தமிழீழ மக்களின் உணர்வுகளோடு கலந்திருக்கிறது. களத்தில் நின்று விடுதலை வேட்கையுடன் களமாடி மண்ணில் விதையாய் வீழ்ந்த மாவீர்களின் நினைவுகளை என்றும் நிலைத்து நிற்கும் வகையில் மக்கள் மனங்களின் அசைந்து கொண்டிருக்கிறது.
நாம் நமக்கென்று சுதந்தரமும் இறைமையும் கொண்ட அரசினை அமைக்கும் வேணவாவுடன் உள்ள மக்கள் என்பதனை உலகுக்கு முரசறைந்து சொல்லி நிற்கிறது நமது தேசியக்கொடி. உலகில் புதிய அரசுகள் உலகளாவிய ரீதியிலும், பிராந்திய ரீதியிலும் அமைந்திருக்கும் வலுவுள்ள அரசுகளின் நலன்களின் அடிப்படையிலும், அரசுக்காக போராடும் தேசிய இனங்களின் பலத்தின் அடிப்படையிலுமே உருவாக்கப்படுகின்றன. ஈழத் தமிழ் மக்கள் ஒரு வலுவான தேசம். இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் ஈழத் தமிழ் மக்களின் தாயகம் அமைந்திருக்கிறது. ஈழத் தாயகத்துக்கு அருகில் 7 கோடிக்கும் மேற்பட்ட தமிழ்மக்களின் தாயகமாக தமிழ்நாடு அமைந்திருக்கிறது.
வலுவான ஈழத் தமிழர் டயாஸ்பொறா உலககெங்கும் பரந்துள்ளனர். உலகின் பலபாகங்களிலும் வாழும் தமிழ் மக்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு உறவுகளாக உள்ளனர். ஒரு வளமுள்ள வலுவான நாடு கடந்த தேசமாக அமைந்திருக்கும் தமிழீழ தேசம் தனக்கான அரசினை சுயநிர்ணய அடிப்படையிலும், மீண்ட இறைமையின் அடிப்படையிலும், ஈடுசெய் நீதியின் அடிப்படையிலும் தனது தாயகத்தில் அமைக்கும் அரசியல் பெருவிருப்பத்துடன்,அரசியல் கட்டாயத்துடன் வாழந்து கொண்டிருக்கிறது. வரலாற்றுப் பெருநகர்வில் தமிழீழ தேசத்துக்கான கதவுகள் திறக்கும் வாய்ப்புகள் நிறையவே உண்டு. இதற்காகச் செயற்பட வேண்டிய கடமையும் ஆற்றலும் ஈழத் தமிழர் தேசத்துக்கு உண்டு. ஈழத் தமிழ் டயாஸ்றாவும் தமிழ்நாடும் இவ் விடயத்தில் காத்திரமான பங்கை ஆற்ற முடியும்.
இலங்கதை;தீவின் புவிசார் அரசியலில் ஈழத் தமிழ் மக்களை பங்காளராக, தீவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் ஒரு தரப்பாக நாம் மாறவேண்டும். இதற்குத் தேலையான அரசியல், பொருளாதார, இராஜதந்திர நகர்வுகளை நன்கு வடிவமைக்கபட்ட வியூகத்துடன் நாம் மேற் கொள்ள வேண்டும். நாம் நமக்கென்ற அரசை அமைக்கும்போதுதான் நமது தேசியக்கொடிக்கு அனைத்துலக அங்கீகாரம் கிடைக்கும். அப்போதுதான் அனைத்துலக அரங்கில் நம் தேசியக்கொடி பட்டொளி வீசிப்பறக்கும் நாள் வரும்.
அதுவரை நமது தேசியக்கொடியை சுதந்திர வேட்கையுடன் நாம் ஏந்திக் கொள்வோம். சிங்கள பௌத்த இனவாத சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பில் இருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசொன்றை அமைப்பது மட்டும்தான் ஒரே வழி என்பதனை நாம் நமது தேசியக்கொடியினை எந்தியவாறு உலகுக்கு உரத்துச் சொல்வோம்.
நாம் ஏந்தும் தமிழீழத் தேசியக்கொடி இனவழிப்புக்கு எதிரான கொடி. சமத்துவத்துக்கான கொடி.. பெண் அடக்குமறைக்கு எதிரான கொடி.. சாதிய ஏற்றத்ழ்வுகளுக்கு எதிரான, சமூகநீதி நிலவும் சமூகம் அமைக்க அறைகூவல் விடுக்கும் கொடி.. சுற்றுப்புறச்சூழலுக்காக நீதி உலகெங்கும் சிலவ வேண்டும் என அவாவி நிற்கும் கொடி..
ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்கள் மத்தியலும் உலகெங்கும் முற்போக்கு மாற்றங்களை வேண்டி நிற்கும் கொடி. இத்தகைய நமது தேசியக்கொடியினை நாம் மனவெழுச்சியுடன் போற்றுவோம்.. கொடி உயர நம் தேசம் வாழ அயராது உழைப்போம்.
வாழ்க தமிழீழத் தேசியக்கொடி.
தமிழர் தலைவிதி தமிழர் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+ 16142023377
[email protected]