கல்விச் சர்ச்சை! என்னதான் நடக்கிறது?

ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்குப் பள்ளிக் கல்விக்காகத் தர வேண்டிய பணத்தைத் தர மறுக்கிறது என்பதுதான் இப்போதைய சர்ச்சையின் தொடக்கம்.ஒன்றிய அமைச்சர் என்ன சொல்கிறார்? – தேசிய கல்விக் கொள்கைப்படி மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் தருவோம் என்கிறார்.தமிழ்நாடு அரசு இதை ஏற்க முடியாது என்கிறது.ஏற்கெனவே ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்ன தமிழ்நாடு அரசு இப்போது மறுக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார் ஒன்றிய அமைச்சர். அதற்கான ஒரு கடிதத்தையும் காட்டுகிறார். ஏற்கெனவே ஏற்றுக் கொண்ட நீங்கள், தேசியக் கல்விக் கொள்கை குறித்த பததியை மட்டும் நீக்கி விட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயார் செய்திருக்கிறீர்கள் என்கிறார்.இரண்டு கடிதங்களும் பேஸ்புக்கில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவரவர் அவரவருடைய அரசியல் சார்பு நிலைக்கேற்ப ஒன்றிய அமைச்சரை / திமுக அரசை சாடுகிறார்கள்.
இந்த விஷயத்தைக் கொஞ்சம் பின்னோக்கியும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.ஒரு காலத்தில் சர்வ சிக்ஷா அபியான் என்று ஒன்று இருந்தது தெரியும் இல்லையா? பிறகு நடுநிலைக் கல்விக்காக மத்யமிக் சிக்ஷா அபியான் வந்தது. ஆசிரியர் கல்விக்காக ஒரு திட்டமும் இருந்தது.இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக சமக்ர சிக்ஷா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது ஒன்றிய அரசு. அதாவது, மதலையர் முதல் ப்ளஸ்டூ வரையான எல்லாவற்றுக்கும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டம். இது 2018இல் அறிமுகமானது. இதற்கான நிதி ஒன்றியம் – மாநிலம் இரண்டும் 60 : 40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும்.இந்த சமக்ர சிக்ஷா திட்டத்தின்படியான பணம்தான் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்குத் தந்து கொண்டிருந்தது. 2022இல் புதிதாக தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறது ஒன்றிய அரசு. சமக்ர சிக்ஷா திட்டத்தில் பி எம் ஸ்ரீ என்றொரு திட்டத்தை அறிவிக்கிறது. அதாவது, PM ScHools for Rising India. (மதலையர் பருவத்திலிருந்தே பள்ளி மாணவர்கள் மனங்களில் மோடியின் படத்தை திணிப்பதற்காகத்தான் பி எம் என்ற பெயர். அது இருக்கட்டும்)
பி எம் ஸ்ரீ திட்டம் என்பது என்ன?
ஒன்றிய அரசின்கீழ் / மாநில அரசின்கீழ் / யூனியன் பிரதேச அரசுகளின்கீழ் / உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் – என எல்லா வகைகளிலும் இயங்கிக் கொண்டிருக்கிற பள்ளிகளிலிருந்து 14500 பள்ளிகள் தேர்வு செய்யப்படும். அந்தப் பள்ளிகளில் எல்லா வசதிகளும் செய்யப்படும்.ஆமாம்… ஏற்கெனவே கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா என்றெல்லாம் பள்ளிகள் இருக்கின்றனவே… பிறகு எதற்கு இப்படி புதிதாக பள்ளிகள் என்று நீங்கள் கேட்கக்கூடாது. ஏனென்றால், இவர்களுடைய வழக்கமே ஏற்கெனவே இருப்பதை ஆட்டையைப் போட்டு பெயர் மாற்றுவது. பல மாநிலங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு பிஎம் ஸ்ரீ முன்னொட்டு சேர்க்கப்பட்டு விட்டது. சரி அதுவும் இருக்கட்டும்.
சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் வந்து கொண்டிருந்த பணம்தான் தமிழ்நாடு அரசுக்குச் சேர வேண்டியது என்பதைப் பார்த்தோம். பி எம் ஸ்ரீ திட்டம் வந்ததும், தமிழ்நாடு அரசு ஒரு கடிதம் எழுதுகிறது. State of Tamil Nadu is very keen to sign the MoU for establishing the PM Shri Schools in the state. In this regard, a State Level Committee headed by School education secretary ha been constituted. Based on the recommendations of the committee, the MoU for establishing PM Shri schools will be signed by the State.
அதாவது, பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு ஆவலாக இருக்கிறது. இது குறித்து பரிசீலிக்க கல்வித் துறைச் செயலர் தலைமையில் ஒரு கமிட்டி நிறுவப்பட்டுள்ளது. அந்தக் கமிட்டியின் பரிந்துரைப்படி, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். எனவே, 2023-24க்கு சேர வேண்டிய பணத்தை அனுப்பவும்.திமுக அரசை குற்றம் சொல்கிறவர்கள் இதைத்தான் கையில் எடுக்கிறார்கள். கையெழுத்துப் போடுகிறேன் என்று சொல்லிவிட்டு, பிறகு மாட்டேன் என்று சொல்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.ஒன்றிய அமைச்சரும் இதைத்தான் சொல்கிறார். மார்ச் 15ஆம் தேதி எழுதிய கடிதத்தில் பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுகிறேன் என்று சொன்னது தமிழ்நாடு அரசு. அதன்படி ஒன்றிய கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்த வரைவை அனுப்பியது. தமிழ்நாடு அரசு, அதில் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துவோம் என்கிற பத்தியை நீக்கிவிட்டு வரைவை அனுப்பியிருக்கிறது. இதுதான் ஒன்றிய அமைச்சரும் பாஜகவினரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இங்கேதான் கவனமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.
– தமிழ்நாடு அரசு பி எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று சொல்லவே இல்லை.
– அதற்காக ஒரு கமிட்டி போடுகிறோம். அந்தக் கமிட்டி என்ன சொல்கிறதோ அதன்படி ஒப்பந்தம் போடுகிறோம் என்றது.
– அதன்படி, பி எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்கிறோம். ஆனால் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திருத்தி அனுப்புகிறது.
– ஒன்றிய அரசு அனுப்பிய புரிந்துணர்வு ஒப்பந்தம் வரைவு ஒப்பந்தம்தான். வரைவு என்றாலே அது பரிசீலிக்கப்பட்டு மாற்றப்படக்கூடியது.
– ஆக, தமிழ்நாடு அரசு அந்த வரைவைப் பரிசீலித்து, தேசியக் கல்விக் கொள்கை பத்தியை நீக்கி விட்டு வரைவைத் திருப்பி அனுபபுகிறது.இதில் எந்தத் தவறோ குழப்பமோ இல்லையே? பி எம் ஸ்ரீ திட்டம் என்பதை தேசிய கல்விக் கொளகையின்படித்தான் நடத்தியாக வேண்டும் என்று ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்?
தேசிய கல்விக் கொள்கை மாநிலக் கல்விக் கொள்கையைவிட சிறப்பானதா? சிறப்பாகப் பயன் தந்திருக்கிறதா? தமிழ் நாடு அரசு பின் பற்றுகிற கல்விக் கொள்கையினால் தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களைவிட பின்தங்கி விட்டதா? இல்லையே?
இன்னும் சொல்லப்போனால், கல்வி உள்பட பல துறைகளிலும் – ஏன், அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு அரசு முன்னிலைதானே வகிக்கிறது?பிறகு எதற்கு நாம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும்? ஏன் ஏற்கச் சொல்கிறார்கள் என்றால், இந்தியைத் திணிக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வித்திட்டம் என்ற ஏகபோகத்தைத் திணிக்கவே இந்த முயற்சி. பள்ளிக் கல்வியை மாநில அரசுப் பட்டியலிலிருந்து ஒன்றிய அரசுப் பட்டியலுக்கு மாற்றிக் கொள்வதற்கான முதல் படி இது.தமிழ்நாடு அரசின் 2024 மார்ச் மாதக் கடிதத்தில் we are keen to sign என்பதை சற்றே மாற்றி எழுதியிருக்கலாம்தான். ஆனாலும் அதில் அப்படி ஏதும் பெரிய சறுக்கலோ தவறோ கிடையாது.
பி எம் ஸ்ரீ திட்டத்தின்படி பள்ளிகளை அமைப்பதை ஏற்கிறோம் – ஆனால் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் – மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம் – இதுதான் தமிழ்நாடு அரசின் நிலைபாடு. பி எம் ஸ்ரீ திட்டம் எமக்குத் தேவையில்லை. சமக்ர சிக்ஷா திட்டத்தின்படி மாநில அரசுக்கு சேர வேண்டிய பணத்தைக் கொடு என்று கேட்க வேண்டும். மாநிலப் பட்டியலில் உள்ள விஷயம் குறித்து மாநிலங்களை நிர்ப்ந்திக்க ஒன்றிய அரசுக்கு உரிமை கிடையாது என்று வழக்குத் தொடுக்க வேண்டும்.