32°C
விளம்பரம்
Advertisement

ஜெயிலர் 2 -விமர்சனம்!

admin சேலம் Published: October 15, 2026 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



வெள்ளித்திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 75 வயது நாயகன் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்துவிட்டது என்றே சொல்லலாம். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மீண்டும் தனது தனித்துவமான டார்க் ஹியூமர் மற்றும் ஸ்டைலான ஆக்ஷன் கலவையுடன் இப்படத்தை வழங்கி ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார். முதல் நாள் முதல் காட்சி (FDFS) திரையரங்குகளில் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. முதல் பாதி முழுக்க கலகலப்பான காட்சிகளால் நகரும் நிலையில், இரண்டாம் பாதியில் சில இடங்களில் வேகம் குறைந்தாலும், கிளைமாக்ஸ் நெருங்கும் போது பதற்றத்தை மெல்ல அதிகரித்து வழங்கப்படும் அந்த ஃபைனல் மாஸ் தருணம் திரையரங்கை அதிர வைக்கிறது.

கதைக்களமும் திரைக்கதைப்போக்கும்

ஜெயிலர் முதல் பாகத்தில் தனது குடும்பத்தையே கொலை செய்யத் துணிந்த வர்மனை ரஜினிகாந்த் தீர்த்துக்கட்டுவதுடன் கதை முடிவடைந்தது. ஆனால், இறப்பதற்கு முன்னதாக “என்னை முடித்துவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்காதே… எனக்குப் பின்னால் மிகப்பெரிய நெட்வொர்க்கே இருக்கிறது!” என்று அவன் விடுத்த எச்சரிக்கையிலிருந்து இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. வர்மனை வீழ்த்திய பிறகு தன் குடும்பத்துடன் கோவையில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். அதே சமயம், வர்மனின் மரணத்திற்குப் பழிவாங்கத் துடிக்கிறார் சுராஜ் வெஞ்சரமூடு. இதற்கிடையே, எதிரிகளின் கூண்டுக்குள் புகுந்து அவர்களின் சதித்திட்டங்களை அறிய முயற்சி செய்கிறார் ரஜினிகாந்த். அந்தப் பின்னணி நெட்வொர்க்கை இயக்கும் எஸ்.ஜே. சூர்யாவை நெருங்குவதும் அவரது முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஒருபுறம் எதிரிகளின் சதிவலை; மறுபுறம் ஆபத்தில் சிக்கும் குடும்பம்! மீண்டும் ரஜினியின் குடும்பத்தைக் குறிவைத்து ஒரு கும்பல் களமிறங்குகிறது. இந்தச் சதிகளுக்குப் பின்னால் இருப்பது யார்? எஸ்.ஜே. சூர்யாவை ரஜினி நெருங்கினாரா, இல்லையா? கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் என்னவானது? எதிரிகளின் பிடியில் சிக்காமல் குடும்பத்தை ரஜினி எப்படிக் காப்பாற்றினார்? போன்ற கேள்விகளுக்கு அதிரடித் திருப்பங்களுடன் விடை சொல்வதுதான் இப்படத்தின் கதை.

நடிப்பும் கதாபாத்திரங்களும்

டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் தனது தனித்துவமான ஸ்டைல், கம்பீரமான உடல்மொழி மற்றும் கூர்மையான வசன உச்சரிப்பால் திரையை முழுமையாக ஆக்கிரமிக்கிறார். சில காட்சிகளில் வயதுக்கேற்ற முதிர்ச்சியையும், இயல்பான உணர்ச்சிப்பூர்வமான நடிப்பையும், ஆக்ஷன் காட்சிகளில் அசுர வேகத்தையும் காட்டி ரசிகர்களைக் கவர்கிறார். குறிப்பாக சில இடங்களில் மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்து, தான் சற்று பின்வாங்கி நின்றிருப்பது ரசிக்க வைக்கிறது. இப்படத்தின் மிகப்பெரிய பலம் இதன் நட்சத்திரப் பட்டாளம்தான். வில்லத்தனமும் மிரட்டலுமாக வந்து செல்லும் எஸ்.ஜே. சூர்யா தனது மாஸான நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். வித்யா பாலன் பலே சொல்ல வைக்கிறார். மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் இயல்பான நடிப்பு கதைக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. வழக்கம்போல் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரின் மாஸ் கேமியோ காட்சிகள் திரையரங்கில் ரசிகர்களைக் கொண்டாட்டத்தின் உச்சத்திற்குச் செல்ல வைக்கின்றன. நகைச்சுவை பகுதியில் நமோ நாராயணா மற்றும் யோகி பாபு கூட்டணி வழக்கத்திற்கு மாறாகச் நல்ல சிரிப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ரம்யா கிருஷ்ணன் குடும்ப உணர்வுக் காட்சிகளுக்குத் தேவையான எமோஷனல் எடையைக் கூட்டியுள்ளார்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு

பல்வேறு தளங்களைக் கடந்து செல்லும் இந்தக் கதையின் துடிப்பை, ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் தனது கேமராவின் வழியாக மிரட்டலாகக் கண்முன்னே நிறுத்தியுள்ளார். வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டு முன்னேறும் துல்லியமான லென்ஸ் கோணங்கள், வாகனங்கள் தீப்பற்றித் தகரும் உக்கிரமான தருணங்கள், மற்றும் ரத்தமும் வியர்வையும் சிந்துமளவுக்கு ஆக்ரோஷத்தின் வேகத்தைக் காட்டும் ஸ்லோ-மோஷன் காட்சிகள் என ஒவ்வொரு ஃபிரேமிலும் அவர் காட்டியுள்ள உழைப்பு, ரசிகர்களுக்குப் பரிபூரணமான ஒரு விஷுவல் விருந்தாக அமைந்துள்ளது. முதல் பாதியின் வேகமான திரைக்கதை ஓட்டத்திற்குப் பலம் சேர்த்துள்ளார் படத்தொகுப்பாளர் ஆர்.நிர்மல். ஆனால், இரண்டாம் பாதியில் தேங்கும் சில காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு இன்னும் அதிகரித்திருக்கும். இசையைப் பொறுத்தவரை, அனிருத் தன் வழக்கமான உழைப்பைக் கொட்டாமல் சுலபமான வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார். ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் பயன்படுத்திய அதே பின்னணி இசையை இதிலும் அப்படியே மறுசுழற்சி செய்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. அதோடு, திரையின் விறுவிறுப்பைக் கூட்டும் என்று எதிர்பார்த்த பாடல்கள் இரண்டாம் பாதியின் வேகத்திற்குப் பெரிய வேகத்தடைகளாக அமைந்து சோர்வூட்டுகின்றன.

நிறை குறைகள்

நெல்சனின் டார்க் ஹியூமர், ரஜினியின் மாஸ் ஸ்டைல், மிரட்டலான நட்சத்திரங்களின் கேமியோ மற்றும் தரமான ஒளிப்பதிவு உழைப்பு ஆகியவை படத்தின் பெரிய பலங்கள். அதேவேளையில், இரண்டாம் பாதியில் ஏற்படும் திரைக்கதைத் தொய்வு அடுத்தடுத்து வரும் பிரபலங்களுக்கு உரிய பங்களிப்பு இல்லாமை மற்றும் இசையில் புதுமையின்மை ஆகியவை படத்திற்குச் சிறு பலவீனமாக அமைகின்றன.

ஒட்டுமொத்தமாக, ஆரம்ப பேராவில் சொன்னது போல் சில தொய்வுகள் இருந்தாலும் திரையரங்கில் கொண்டாட்டமாகப் பார்க்கக்கூடிய ஒரு மாஸ் என்டர்டெய்னராக ‘ஜெயிலர் 2’ அமைந்துள்ளது என்பதுதான் உண்மை.

ரேங்க்: 4 / 5

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்