டிரைவர் ஜமுனா – விமர்சனம்!

டிரைவர் ஜமுனா – விமர்சனம்!

ழைய காலத்தை விட இப்போது பெண்கள் ஏகப்பட்ட தொழில்களில் ஈடுபடுகின்றனர். இதில் பல தொழில்துறைகள் இதுகாறும் ஆண்களுக்கேயானது எனக் கருதப்பட்டு வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபகாலமாக வாடகை வாகனங்கள் ஓட்டுவது, தொடர்வண்டி ஓட்டுநர், அறுவை சிகிச்சை நிபுணர், ஒலிம்பிக் வீரர் என்பதில் துவங்கி விமானங்கள் ஓட்டுவது வரை பெண்கள் ஈடுபடுகின்றனர். அதே சமயம் பெண்களைப் பொறுத்தவரை எல்லா நிலைகளிலும் குடும்ப வறுமையும் பல நேரங்களில் ஆதரவற்ற நிலையுமே இப்படி வெளியில் வேலைக்குச் செல்லும் நிர்ப்பந்தத்தை இவர்களுக்கு ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் வாழ்க்கையை ஓட்ட வெளியில் வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கு நேரு,ம் சிரமங்களை எவரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.. இப்படியான சூழலில் டாக்ஸி ஓட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் அவர் சந்தித்தது தொடங்கி, சாதித்தது வரையிலானவற்றை புதுமையாக சொல்ல முயன்றிருக்கிறார் வத்திக்குச்சி டைரக்டர் கின்ஸ்லின்.

அதாவது கால் டேக்சி டிரைவராக இருந்த அப்பா திடீரென காலமாகி விட,. குடியிருந்த வீட்டை ஒத்தி வைத்து காசு வாங்கி விட்டு தம்பி எங்கோ ஓடி விட, நோய்வாய்ப்பட்ட அம்மாவை காத்தப்படி வாழ வேண்டிய நோக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ், அப்பாவின் கால் டாக்ஸி டிரைவர் ஜாப்பை தன் கையில் எடுத்துக் கொள்கிறார்.. இப்படியான சூழலில், எக்ஸ் எம்எல்ஏ ஒருவரை கொல்ல சதித்திட்டம் தீட்டும் கூலிப்படை கும்பலின் கார் வழியில் விபத்துக்குள்ளாகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் அவர்கள் வாடகைக் கார் ஒன்றை புக் செய்கிறார்கள். அந்தக் காரை ஓட்டி வரும் ஜமுனாவுக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்) இந்த கொலையாளிகள் மீது டவுட்வருகிறது. அதனால் ஆரம்பத்தில் மறுக்கும் ஜமுனா, வேறு வழியில்லாமல் அவர்களை காரில் ஏற்றிக்கொள்கிறார். இதை அடுத்து, அந்தக் கூலிப்படையை போலீஸ் துரத்தியதால் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள்தானிது என்று தெரிய வர, அடுத்து நடந்தது என்ன? முன்னாள் எம்எல்ஏ கொல்லப்பட்டாரா? அதன் பின்னணி என்ன? – இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் ‘டிரைவர் ஜமுனா’.

பெண்களை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதாநாயகிகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். தந்தையை இழந்த ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் மூத்த மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். படத்தின் முக்கால்வாசி காட்சிகள் கால்டாக்ஸியிலேயே இடம் பெற்றதால், கார் ஓட்டிக் கொண்டே வில்லன்களை சமாளிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். விரைவாக கார் ஓட்டும் காட்சிகளில் கதையின் நாயகி என்பதை நிரூபித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். குறிப்பாக ஒரு டீயை குடித்து காலி டம்ளரை வெறித்துப் பார்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த உடல்மொழி, அப்படியே வலுவிழந்து கூலிப்படையினரிடம் சிக்கி செய்வதறியாமல் திகைக்கும் முகபாவனை, அம்மாவை எண்ணி உருகுவது என தேர்ந்த நடிப்பில் மிளிர்கிறார். கார் ஸடண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கும் அவரது மெனக்கெடல் கவனிக்க வைக்கிறது. ஆனால், தொடக்கம் முதலே இதில் ஆக்சன் அவதாராம் எடுக்கப் போகிறோம் என்ற பதட்டத்தால் முகத்தில் படர்ந்திருக்கும் இறுக்கம், படத்தின் எல்லா காட்சிகளிலும் மெடிண்டெயின் செய்திருப்பது ஓவர் டோஸாகி நெகட்டிவ் ரியாக்டை தந்து விட்டதென்னவோ நிஜம்

புது வித நோயால் பாதிக்கப்பட்டுள்ளது போல் வரும் நடிகை ஸ்ரீரஞ்சனி தன் கேரக்டரின் வலுவைப் புரிந்து ஸ்கோர் செய்கிறார். கூடவே , ‘ஆடுகளம்’ நரேன், ஸ்டாண்டப் காமெடியன் அபிஷேக் குமார், இளையபாண்டி ‘பிக்பாஸ்’ பாஸ் மணிகண்டன் தேவையான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை படத்தின் கதை ஓட்டத்திற்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. படம் பார்ப்பவர்களுக்கு ஓரளவு பதட்டம் ஏற்படுகிறது என்றால் அதற்கு ஜிப்ரானின் பின்னணி இசை பெரும் பங்காற்றி இருக்கிறது. கோகுல் பினாய் ஒளிப்பதிவில் காரினுள் எடுக்கப்பட்ட காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. அதேபோல் கார் ஸ்டண்ட் காட்சிகளும் சிறப்பு.

கிடைத்த சில மணித்துளிகளில் பெண்ணியம், அரசியல் சூழ்ச்சி, வாரிசு அரசியலின் போக்கு, குடும்ப பாசம், கர்மா ,திகில் என ஏகப்பட்ட விஷயங்களை இணைத்து கொடுத்துள்ள இப்படத்துக்குத் தேவையான விறுவிறுப்பை மட்டும் கொஞ்சம் மிஸ் செய்து விட்டார் டைரக்டர்..

ஆனாலும் இந்த டிரைவர் ஜமுனா பாஸ் மார்க் வாங்கி விட்டாள்

மார்க் 3/5

error: Content is protected !!