யாரிந்த புது பெரியண்ணா “ட்ரம்ப்”?

யாரிந்த புது பெரியண்ணா “ட்ரம்ப்”?

அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டு முறை இருந்து வரும் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவு அடைவதையொட்டி அந்த நாட்டின் புதிய அதிபரை (45-வது ஜனாதிபதி) தேர்ந்தெடுப்பதற்காக நடந்த இந்த தேர்தலில், அவரது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் இடையே கடும்போட்டி நிலவியது.
இருவரும் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தும், 3 முறை நேருக்கு நேர் விவாதம் செய்தும் அனல் பறந்த பிரசாரத்தில் ஈடுபட்டனர்.மொத்தமுள்ள 538 தொகுதிகளில் 270-ல் வெற்றி பெறுபவர்கள் தான் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்கள்.

donalt nov 9

அந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருதரப்பினரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். ஆனால், சில மணி நேரங்களில் நிலைமை முற்றிலும் மாறியது. பல்வேறு மாகாணங்களில் டிரம்ப் தொடர்ச்சியாக முன்னிலை வகித்து அதிபராகி விட்டார். இத்தனைக்கும் தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஹிலாரிக்கு சாதகமாகவே இருந்தன. ஒருசில நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் மட்டுமே டிரம்ப் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தன. இந்த கணிப்புகளை பொய்யாக்கி, டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அது சரி யாரிந்த புது பெரியண்ணா “ட்ரம்ப்”?

ஜெர்மானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். ரியல் எஸ்டேட்,ஹோட்டல்கள், சூதாட்டவிடுதிகள், கோல்ஃப் மைதானங்கள் என பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ட்ரம்ப் குழுமத்தின் தலைவர், தொலைக்காட்சித் தொடர்களில் பங்கேற்றவர், 1987ம் ஆண்டுவரை ஜனநாயக கட்சியின் ஆதரவாளராய் இருந்தவர், அதிரடியான பேச்சுகளுக்கு சொந்தக்காரர், மூன்று திருமணங்களை செய்தவர், ஆரஞ்சு வண்ண தலையர், பணத்திமிர் கொண்டவர், ஏற்கனவே கடந்த 2000 த்தில் ஜூனியர் புஷ்ஷுடன் அதிபர் வேட்பாளராக மல்லுக்கட்டியவர் என ஏகப்பட்ட புகழுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர்தான் டொனல்ட் ட்ரம்ப்.

அதிரடியான, வெளிப்படையான மேடைபேச்சுக்கள்தான் டொனால்ட் ட்ரம்ப்பை மற்றவர்களிடம் இருந்து தனியே அடையாளம் காட்டியது. இன்னார்தான் என்றில்லாமல் எல்லோரையும் தன் பேச்சில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். சொந்த கட்சியினரைக் கூட விட்டுவைப்பதில்லை. ஆரம்பத்தில் இத்தகைய ஆரவார பேச்சுக்கள் கேலியும், கிண்டலும் செய்யப்பட்டாலும் கூட, தற்போது மனிதர் ஏதோ சொல்ல வருகிறார் என அமெரிக்க நடுத்தர வர்க்கத்தினர் கவனிக்க ஆரம்பித்த்தார்கள்

என்னிடத்தில் நிறைய பணம் இருக்கிறது. அதை வைத்தே தேர்தல் செலவுகளை சமாளிப்பேன். எனக்கு யார் பணமும் தேவை இல்லை. அதனால் நான் யாருக்காகவும் என் கொள்கைகளை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. யாரிடமும் விலை போக வேண்டிய அவசியமும் இல்லை என்று ட்ரம்ப் கொக்கரித்த போது மற்ற வேட்பாளர்களால் அமைதியாக வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது.

தற்போதைய ஒபாமா ஆட்சியில் அமெரிக்காவின் மதிப்பும் மரியாதையும் உலக அரங்கில் அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது. உலக அரங்கில் நமக்கென இருந்த கௌரவத்தை இந்த எட்டு ஆண்டுகளில் இழந்து விட்டோம். இழந்த பெருமைகளை மீட்டெடுத்து மீண்டும் வளமான,வலுவான அமெரிக்கா உருவாக்குவதே தன்னுடைய குறிக்கோள் என்பதுதான் இந்த தேர்தலில் ட்ரம்ப் முன் வைத்த ஒற்றை செய்தி. இதைச் சுற்றியே அவருடைய மற்ற கொள்கை வடிவங்கள் முன்வைக்கப் பட்டன.

சிக்கன நடவடிக்கை என்கிற பெயரில் அமெரிக்கர்களின் வேலைகள், மெக்ஸிகோ, சைனா, இந்தியாவிற்கு செல்வதைத் தடுத்து, மீண்டும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்கிற பேச்சுக்கு எல்லா தரப்பிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. நம் நாட்டில் மக்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கையில், இங்கிருந்து வெளிநாட்டிற்கு வேலைகளை தூக்கிக் கொடுத்த ஒபாமா அரசும், ஹிலாரியும் வெட்கப்பட வேண்டும் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விளாசி தள்ளினார்.

இதைப் போலவே அமெரிக்க நிறுவனங்கள் செலவை காரணம் காட்டி உள்நாட்டில் தயாரிக்காமல்,வெளிநாட்டில் தயாரித்த பொருட்களை இங்கு கொண்டு வரும் பொழுது அதற்கு அதிகமான வரியை விதிப்பேன் என்று உலகளாவிய அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் வயிற்றிலும் புளியை கரைத்தார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் தேவையில்லை. இது அன்றைய புஷ் அரசின் தவறான நடவடிக்கை. இதை அன்றிலிருந்து நான் சொல்லிக் கொண்டு வருகிறேன் என தன் சொந்த கட்சி தாக்கிப் பேசியது பலருக்கும் பிடித்துப் போனது. தீவிரவாதத்தை தயவுதாட்சண்யமின்றி அடியோடு ஒழிப்பேன். முஸ்லீம் நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு இனி இந்த நாட்டில் இடமில்லை. அகதிகள் என்ற போர்வையில் ஐசிஸ் தீவிரவாதிகள் நம் நாட்டிற்குள் ஊடுருவதை ஒபாமா அரசாங்கம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால்தான், இன்று நம் நாட்டில் இருந்து கொண்டே நம் மக்களை தீவிரவாதிகள் கொன்று குவிக்கிறார்கள் என்பதைப் போன்ற பேச்சுக்கள், இந்த குறைகளை களைய ட்ரம்ப்தான் சரியான ஆளாக இருப்பார் என பலரையும் நினைக்கத் தூண்டியது. இதன் எதிரொலியாகத்தான் பல மாநில ப்ரைமரி தேர்தலில் ட்ரம்ப் முன்னிலை பெற்றார்.

மெக்ஸிகோவிலிருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்புவேன். அவர்களால் போதைப்பொருட்களும் அதன் தொடர்பான குற்றங்களும் அதிகரித்து விட்டது. இரு நாடுகளுக்கிடையே பெரிய சுவர் ஒன்று கட்டுவேன் என்று ட்ரம்ப் பேசியதற்கு எதிர்வினையாக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப், நாட்டில் பாலங்களை கட்டுவதைப் பற்றி யோசிக்காமல் இரு நாடுகளுக்கிடையே சுவரை கட்டுவேன் என்று சொல்பவர் ஒரு கிறிஸ்தவராக இருக்க முடியாது என்று சொல்ல, போப்பையும் ட்ரம்ப் விட்டு வைக்கவில்லை. போப்பையே எதிர்த்துப் பேசி விட்டாரே. இனி இவர் அவ்வளவு தான் என்றார்கள். ஆனாலும், அதற்குப் பின்னர் நடந்த ப்ரைமரியில் ட்ரம்ப் முன்னிலையிலேயே இருந்தார்.

‘சூப்பர் டியூஸ்டே’ தேர்தலுக்கு முன் வேட்பாளர்களிடையே நடைபெறும் விவாதங்களில் ஆளாளுக்கு அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று சொல்லியும், சக வேட்பாளர்களை வம்புக்கு இழுத்தும் தங்கள் வார்த்தை ஜாலங்களினால் கலகலப்பூட்டினர். க்றிஸ் கிறிஸ்டி தனக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்று தெரிந்து ஒரு கட்டத்தில் விலகிக் கொண்டார். மருத்துவத்துறையை சார்ந்த பென் கார்சன் தீவிர கிறிஸ்தவ ஆதரவாளர். ஆரம்பத்தில் அவரிடமிருந்த உற்சாகம் சில ப்ரைமரிகளில் காணாமல் போயின. மக்களும் அவரை எளிதில் மறக்க, ட்ரம்ப்புக்கு தன் ஆதரவை தெரிவித்துக் கொண்டு வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகிக் கொண்டார். எளிதில் கோபப்படுபவர் என அறியப்பட்டிருந்த ஜெப் புஷ்சும் ட்ரம்ப்பின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. பலத்த தோல்வியுடன் க்ரூஸ்-ஐ ஆதரிக்கிறேன் என்று அவரும் தேர்தலில் இருந்து விலகிக் கொண்டார். மார்கோ ரூபியோவிற்கும் ட்ரம்ப்புக்கும் நடந்த வாரத்தை விவாதங்களில் ரூபியோவிற்கு இன்னும் அரசியல் ஞானம் வரவில்லை என்று அவருடைய சொந்த மாகாணத்திலேயே அவரை வெற்றி கண்ட ட்ரம்ப் சொல்லாமல் அவரையும் விரட்டி அடித்தார்.

மேலும் முத்தாய்ப்பாக , இன்று காலை முதல் வெளியான முடிவுகளில் டொனால்ட் டிரம்ப் அனைத்து கருத்துக் கணிப்புகளையும் முறியடித்து தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். விஸ்கோன்சின் மாகாணத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார். சற்று முன்னர் வெளியான தகவலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 48.5 சதவிகித வாக்குகள் பெற்று 276 இடங்களிலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் 47.2 சதவிகித வாக்குகள் பெற்று 218 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இந்த வெற்றியை அடுத்து நியூயார்க்கில் தனது ஆதரவாளர்களிடையே டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் , “அமெரிக்காவின் அதிபராக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனது வளர்ச்சிக்குக் காரணமான பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நாட்டிற்கு நீண்டகாலம் சேவையாற்றிய ஹிலாரிக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன். 8 மாத பயணத்தின் இறுதியாக மிகச்சிறந்த வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். ஹிலாரியும் வெற்றி பெறுவதற்காக கடுமையாகப் போராடினார்.

இனி வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்டு செயல்படவேண்டும். ஒற்றுமையாக செயல்பட்டால் நமது கனவுகளை செயல்படுத்தலாம்.நான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் அதிபராக பணியாற்றுவேன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும். அமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டம் உள்ளது. அமெரிக்காவை நண்பனாக நினைக்கும், அமெரிக்காவுடன் நட்பு கொள்ள விரும்பும் நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்துவோம்” என்று அவர் பேசினார்.