நியூ டைப் கொரோனா வைரஸூக்கு பயப்பட வேண்டாமாம்!

நியூ டைப் கொரோனா வைரஸூக்கு பயப்பட வேண்டாமாம்!

உலக அளவில் தற்போது பரவி வரும் ஜேஎன்.1 கொரோனா வைரஸால் பாதிப்புகள் அதிகமாக இருக்காது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் நம் நாடெங்கும் பரவி வரும் அதனை கட்டுப்படுத்த மற்றும் எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு கூட்டத்தை நடத்தியது.

இரண்டு ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டது. ஓராண்டாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் இப்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கேரளாவில் ஜேஎன்.1 என்ற புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், இந்த வகை கொரோனா பரவிய நிலையில், தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஜேஎன்.1 வகை கொரோனா வைரஸ் என்பது உருமாறிய பிரோலா (BA.2.86) வகையை சேர்ந்தது ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய வகை கொரோனா தனித்துவமாகவும் வேறுபாட்டுடனும் செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வகை கொரோனா வைரஸ் மூலம் கூடுதல் ஆபத்துகள் ஏற்படாது என்றும், பனிக்காலம் என்பதால் சுவாசப் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் இருக்கும் தடுப்பூசிகள் JN.1 வைரஸால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் அல்லது இறப்புகளை தடுக்க போதுமானதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தொற்று பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதன் பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்தியாவில் கடந்த சில நாள்களாக “ஜே.என்.1” என்ற புதிய வகை கொரோனா திரிபு பரவி வருகிறது. இந்த கொரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் தற்போது வரை மொத்தம் 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,311 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 292 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு அதிகாரிகளுடன் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. சிங்கப்பூரில் டிசம்பர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை 56,043 பேர் இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!