திரைப்படங்கள் காலத்தைத்தானே காட்டுகின்றன?

திரைப்படங்கள் காலத்தைத்தானே காட்டுகின்றன?

கதைகள், கவிதைகள், ஓவியங்கள், சிற்பங்கள், இசைப் பாடல்கள் இவைபோல திரைப்படங்களும் காலத்தைப் பிரதிபலிப்பவையே. கன்னத்தில் மரு இருந்தால் கண்ணாடி மருவையே காட்டும். மருவை மறைத்துக் காட்டும் தன்மை கண்ணாடிக்கு இல்லை.

அதுபோன்றே நுண்கலைகளும் பிறந்த காலத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் தகைமையுடையவை. காலத்தின் போக்கு ஒன்றாகவும், கலைகளின் போக்கு வேறொன்றாகவும் இருக்க முடியாது. காலத்தைத் தாண்டிப் பாயும் ஆற்றல் கலைகளுக்கு இல்லை.

காலம் நல்லதாகவும் இருப்பதுண்டு; கெட்டதாகவும் இருப்பதுண்டு.

காலத்தின் கருத்து என்பது அவ்வக் காலகட்டங்களில் வாழும் மனிதர்களின் மொத்தக் கருத்துதான். மனிதர்களை, சூழல், அவர்கள்மீது செலுத்தப்படும் ஆளுமை, அவர்களின் தேவைக்கேற்ப எழும் இயக்கங்கள் இவையே உருவாக்குகின்றன. இவற்றை திரைப்படம் உள்ளிட்ட ஏனைய கலைகளும் பிரதிபலிக்கின்றன. “அரிச்சந்திரா’, “ஸ்ரீவள்ளி’, “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’ என்னும் காலவரிசைப் படங்களில், விடுதலைக்குப் பிந்திய தமிழ்நாட்டைப் புரட்டிப் போட்ட படம் “பராசக்தி’.

மக்கள் ஊடகத்தைக் கையில் லாகவமாக எடுக்க முடிந்த திறப்பாட்டால் ஈ.வே.கி.சம்பத்தும் நெடுஞ்செழியனும் பிடித்திருக்க வேண்டிய இடத்தை கருணாநிதி பிடித்தார்

அந்தப் படத்தில் கருணாநிதியின் உரையாடல்கள் வீறிடும் இடங்கள் பல.

“யார், அம்பாளா பேசுவது?’ என பூசாரி திகைக்க, “அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள், அறிவு கெட்டவனே!’ என்று கருணாநிதியின் தமிழில் சிவாஜி கணேசன் விடையிறுத்தது அன்றைய இளைஞர்களிடம் தைத்தது.

சனாதனிகள் கொதித்தெழுந்துவிடாதவாறு அவர்களின் முனை ஏற்கனவே ஒடிக்கப்பட்டு பெரியாரால் புதிய உலகம் படைக்கப்பட்டிருந்தது. அவர் பக்குவப்படுத்தியிருந்த களம், “வாழ்கவே வளமார் திராவிட நாடு வாழ்கவே!’ என்னும் பாட்டோடு “பராசக்தி’ முளைக்கக் காரணமானது.

பெரியார் உருவாக்கிய கடவுள் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இவை தமிழனைச் சூத்திர நிலையிலிருந்து விடுவிக்கப் பிறந்தவை. நானூறு ஐநூறு ஆயிரம் ஆண்டுகளாக இந்தச் சூத்திரத் தாழ்வு நிலை பார்ப்பனரல்லாதாரின்மீது திணிக்கப்பட்டதை பெரியார் முப்பது ஆண்டுகளில் உடைத்து நொறுக்கிவிட்டார். தன் காலத்திலேயே தன்னுடைய போராட்டம் வெற்றி பெற்றதைப் பார்த்துக் களித்த ஒரே தலைவர் அவர்தான்.

அதே காலகட்டத்தில் கருணாநிதி எழுதிய “மந்திரிகுமாரி’ படத்தில் இராசாசியைப் போன்ற வடிவத்தில் ஒரு பார்ப்பன குருவாக நம்பியாரை நடிக்க வைத்து, நாட்டைக் கொள்ளையடிப்பவன் ராஜகுருவின் மகன் என்று கதையை உருவாக்கி எந்த எதிர்ப்புமின்றி கருணாநிதி வெற்றியடையக் காரணமாக இருந்தது, பெரியார் காலத்தை அதற்கேற்பச் சமைத்திருந்தது மட்டுமல்ல, அதிகார பீடத்திலிருந்த இராசாசி தன்னை இழிவுபடுத்தியமைக்காக அதிகாரச் சவுக்கைக் கருணாநிதிமீது வீசாததும்தான்.

தன்னை தான் மட்டுமே இழிவுபடுத்திக்கொள்ள முடியும் என்னும் உயர் அறிவு படைத்தவர் இராசாசி. சூத்திரநிலை விடுவிப்பிற்காகப் பெரியார் தோற்றுவித்த பார்ப்பன எதிர்ப்பு, காலத்தின் வெடிப்பு என்ற அடிப்படையில் அது வெற்றி முகட்டைத் தொடாமல் நிற்காது என்பதை சவரக் கத்தியைவிடக் கூர்மையான அறிவு படைத்த இராசாசி அறிவார்.

தருமத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த மாமனிதர் இராசாசி, குல்லுகப்பட்டர் ஆக்கப்பட்டது பொறுக்கமுடியாத கொடுமை. ஆனால் சுழித்தடித்து ஆர்க்கின்ற இயக்கங்களின் போக்கு அதுதான். இன்றும் கருணாநிதி இருக்கிறார். அவரிடம் அதே பேனாவும் இருக்கிறது. அவரால் இன்னொரு “பராசக்தி’யையும் இன்னொரு “மந்திரிகுமாரி’யையும் இன்றும் படைக்க முடியும். ஆனால் காலம் ஏற்காது. காரணம், காலத்தின் தேவை அவை அல்ல என்பதுதான். தமிழகம் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டுவிட்டது. அந்தச் சாதனை கருணாநிதியுடையதுதான்.

அண்மையில் “சூது கவ்வும்’ என்னும் படம் வெளிவந்து மிகவும் வெற்றிகரமாக ஓடி முடிந்தது. நட்சத்திர மதிப்பற்ற அந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முதன்மையான காரணம் காலத்தை அப்படியே பிரதிபலித்ததுதான்.

ஆள் கடத்தும் தொழிலை அளவோடு செய்து மிக எளிதாகப் பணம் திரட்டும் இளைஞர்களின் குழு, பேராசைப்பட்டு மந்திரியின் மகனைக் கடத்த, அதனால் போலீசில் மாட்டிக்கொண்டு உதைபட்டு, நைந்து நார் நாராகி, நொந்துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு திருந்திவிட்டார்கள் என்று கதை செல்லவில்லை. இனி மாட்டிக்கொள்ளாமல், தங்களின் சக்திக்கு ஏற்றவாறு அடக்கமான நடுத்தரக் குடும்பங்களில் ஆள் கடத்துவதாகத் தீர்மானிக்கின்றனர். அதுவே கதையின் உச்சநிலை.

இன்னொரு பக்கம், நேரிய ஒருவன் மந்திரி பதவியை விட்டு இறக்கப்பட்டு, அதே மந்திரியின் மகன் எல்லா தில்லுமுல்லும் செய்கின்றவன் என்று அறிந்தே அவனை மந்திரியாக்குகிறார் முதல்வர். நேரிய ஒருவன் உதவாக்கரை என ஒதுக்கப்படுகிறான். கதை உணர்த்தும் செய்தி அயோக்கியத்தனமே வெல்லும், வெல்ல முடியும் என்பது.

இத்துடன் படம் முடிகிறது. இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதற்குக் காரணம் காலத்தின் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்திருப்பதுதான். காந்தி உருவாக்கிய இந்தியாவில், “தியாகபூமி’ படம் வெளிவந்தது. பெரியார் உருவாக்கிய தமிழ்நாடு “பராசக்தி’யை வெற்றி முகட்டில் ஏற்றியது. “சூது கவ்வும்’ வெற்றிக்கு கதைக்களமும் இயக்குநரின் கதை சொல்லும் திறனும் காரணம் என்பது ஒருபுறமிருந்தாலும், இத்தகைய காலச் சூழலின் பின்னணி என்ன? காலம் தன்னுடைய சுழற்சியை தானே உருவாக்கிக்கொள்ளுமா அல்லது அதன் செல்நெறி (பதஉசஈ) செல்வாக்கும் செயல்திறனும் மிக்க ஒரு மனிதனாலோ, ஒரு கூட்டத்தாலோ உருவாக்கப்படுகிறதா என்னும் கேள்விகளும் மறுபுறம் எழுகின்றன.

இந்தப் படத்தின் வெற்றி ஏற்கத்தக்க வெற்றிதான். இயக்குநர் நாட்டின் நடப்புகளையும் நடைமுறைகளையும் வைத்துத்தான் படம் எடுத்திருக்கிறார். ஆனால், சென்ற தலைமுறையில் காணப்படாத இந்தச் சீரழிவு நடைமுறைகளுக்கு யார் அல்லது எது காரணம்?

இத்தகைய நடைமுறைகள்தாம் சமுதாயத்தில் நிலவுகின்றன என்பதை படம் பார்ப்பவர்கள் அறிந்திருப்பதால்தான் அந்தப் படம் அவர்களின் நெஞ்சைக் கவ்வுகிறது. நாட்டின் போக்கு கண்டு கொதிப்புற்ற அவர்களின் மனங்களுக்கு இத்தகைய ஊடக வெளிப்பாடு ஆறுதலளிக்கிறது. அதுவே படத்தின் வெற்றிக்குக் காரணம்.

பொய் சொல்பவன்கூட தன்னிடம் யாரும் பொய் சொல்வதை விரும்புவதில்லை. திருடுபவன்கூடத் தன் வீடு திருடப்படுவதை ஏற்பதில்லை. காசு வாங்கும் அரசியல்வாதியோ, அதிகாரியோ கூட தன்னிடம் யாரும் காசுக்காகத் தலையைச் சொறிந்தால் சீறுகிறான்.

ஒரு முழு அயோக்கியன்கூடத் தன்னுடைய அயோக்கியத்தனத்தை முற்றிலுமாக மறைத்துச் செய்வதற்குக் காரணம், போலீசில் மாட்டிக்கொண்டு விடுவோம் என்ற அச்சத்தினால் அல்ல. போலீசில்தான் எல்லாவற்றிற்கும் தரவாரியாகக் கட்டணங்கள் உண்டே.

பெயர் கெட்டுவிடக் கூடாதே என்னும் பதைப்பினாலும் அல்ல. நல்லவன் பெயரையும் கெடுப்பதற்கு நான்குபேர் இருப்பார்கள். மேலும் புகழ் என்பதும் விலைக்கு உட்பட்டதுதான். முழுப்பக்க விளம்பரங்களாலும் வரைகலைப் பதாகைகளாலும் புகழை வாங்கிக்கொள்ள முடியும்.

ஆனால் ஒவ்வொருவனும் தப்பை மறைத்துச் செய்வதற்குக் காரணம், தான் ஒரு பெரிய அயோக்கியன் என்பது வெளிப்பட்டுவிட்டால், தன்னிடம் யாரும் ஏமாறமாட்டார்களே என்னும் கவலைதான். பாலில் வெளிப்படையாகத் தண்ணீர் ஊற்றுபவனிடம் எவன் பால் வாங்குவான்?

எந்தச் சமுதாயத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள்; கெட்டவர்களும் இருப்பார்கள். அதேபோல குறைந்த எண்ணிக்கையில் சிலராவது எந்த நன்மையும் கிடைக்காவிட்டாலும் தீர்மானமாக நல்லவர்களாக இருப்பார்கள். இந்தியக் குற்றவியல் சட்டத்தைக் கிழித்தெறிந்துவிட்டாலும் இவர்களால் தப்பே செய்யமுடியாது.

சிலர் எவ்வளவு இழிவுக்கு உள்ளானாலும், தண்டனைக்கு உள்ளானாலும் தீர்மானமாகக் கெட்டவர்களாகவே இருப்பார்கள். வீதிக்கொரு காவல் நிலையம் வைத்தாலும் இவர்கள் அஞ்சவும் மாட்டார்கள் திருந்தவும் மாட்டார்கள்.

இடையில் இருப்பவர்கள் ஊசலாடுபவர்கள். நல்லதற்குக் காலம் என்றால் நல்லதன்பக்கம் சாய்வார்கள். கெட்டதற்குத்தான் காலம் என்றால் கெட்டதன்பக்கம் சாய்ந்துவிடுவார்கள்.

கெட்டதற்குத்தான் காலம் என்று “சூது கவ்வும்’ படம் தீர்மானமாகச் சொல்லி வெற்றியும் பெற்றிருப்பதற்குக் காரணம், காலம் தீர்மானமாகக் கெட்டிருப்பதுதான். சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஊசலாட்ட மனத்தினர், தீமையை வாழ்க்கை முறையாகத் தேர்வு செய்துகொள்வதற்கான காரணம், வெற்றியைத் தீமைதான் ஈட்டித்தருகிறது என்னும் நிகழ்கால நடப்பு உண்மைதான்.

“தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’ என்பதனை அந்தப் படத்தின் இயக்குநர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். சூது எவ்வாறு கவ்வும் என்பதை வெற்றிகரமாக வெளிப்படுத்தியும் இருக்கிறார். “தருமம் மறுபடியும் வெல்லும்’ என்னும் கோட்பாட்டுக்குள் அவர் வரவில்லை. அதற்குக் காரணம், அது இன்றைய நடைமுறையில் உண்மையாக இல்லை. அவர் வாழும் காலம் அந்த நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தவில்லை. இது இயக்குநரின் குற்றமில்லை; காலத்தின் குற்றம்.

1920இலிருந்து 1970வரை இந்தியாவின் பொற்காலம். ஐந்நூறு ஆயிரம் ஆண்டுகளாகத் தூசி மண்டி, அழுக்கடைந்து நாறிப் போய்க் கிடந்த இந்திய சமுதாயத்தை மோகன்தாஸ் காந்தி தூசு தட்டி, அழுக்ககற்றி, துர்நாற்றத்தைப் போக்கி, நறுமணம் கமழத் தக்கதாக மாற்றினார்.

பொய்ம்மையின் வீறு குறைந்தது. ஏமாற்றும், சூதும், வஞ்சகமும் பெருமளவுக்கு வழக்கொழிந்தன. 1970க்கு முன் “சூது கவ்வும்’, “நாகராஜ சோழன் எம்.எல்.ஏ.’ போன்ற படங்களின் கதைக் கருக்கள் யாருக்கும் தோன்றியே இருக்க முடியாது.

1970க்குப் பிந்தைய ஆட்சிமுறை தமிழ்நாட்டில் அதுவரை காணப்படாத ஆட்சி முறை. அரசியல் என்பது மேல்நிலை ஆட்சியாளரிலிருந்து ஊராட்சிவரை அவரவரின் தகுதிக்கும் இடத்திற்கும் ஏற்ப அவரவர் பைகளை நிரப்பிக் கொள்வதற்குத்தான் என்னும் நடைமுறை கருணாநிதியால் கடைப்பிடிக்கப்பட்டு நிலைப்படுத்தப்பட்டு விட்டது.

“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்பதால் ஆட்சியாளர்களைத் தொடர்ந்து அந்த நடைமுறை படிப்படியாகச் சமுதாயத்திலும் படிந்துவிட்டது.

காந்திக்கு விடுதலையும், பெரியாருக்குச் சுயமரியாதையும், அண்ணாவுக்குத் தமிழும் இளையோரை ஈர்ப்பதற்குப் போதுமானவையாக இருந்தன. ஈர்க்கப்பட்ட பெருவாரியான இளைஞர்களால் அந்தக் கொள்கைகள் இயக்கங்களாகக் கட்டுமானம் பெற்றன. அந்த இளைஞர்கள் தங்கள் பைகளில் இருந்த காசுகளை அந்த இயக்கங்களின் வெற்றிக்கு அள்ளி இறைத்தனர். சமுதாயம் மலர்ச்சி பெறுவதற்கு நம்முடைய உழைப்பும் காசும் காரணம் என்னும் எண்ணம் அவர்களுக்கு அளப்பரிய களிப்பைத் தந்தது. அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

கருணாநிதி ஆட்சிபீடம் ஏறிய பிறகு, அதிகாரத்தின் முதல்நோக்கம் ஆள்பவர்களின் சொந்த நலமும் ஏற்றமுமே என்னும் புதுநெறி வகுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. ஆளப்படுபவர்களின் நலமும் தேவைப்படும்போது கருத்தில் கொள்ளப்பட்டது.

கட்சிக்காரர்கள் தங்களின் இடம் மற்றும் நிலைகளுக்கு ஏற்ப சுரண்டிக் கொள்வது ஊக்குவிக்கப்பட்டது. புதியவர்களை ஈர்ப்பதற்கு புதிய கொள்கைகள் வேண்டாமா? “சேரவாரும் செகத்தீரே, செல்வம் சேர்க்க வழி இது காண்!’ என்று அதிகார அரசியலுக்கு புதுமையான விளக்கம் முன்வைக்கப்பட்டது.இழப்பதற்கு எதுவும் இல்லை, அடைவதற்கு எல்லாம் இருக்கிறது என்றால் எவன்தான் சேரமாட்டான். இந்தப் புதுநெறி தமிழ்நாடு முழுவதும் ஒரு புத்தலையை ஏற்படுத்தியது.

1969இல் கருணாநிதி ஆட்சிக் கட்டில் ஏறியதிலிருந்து நிகழ்காலம்வரை ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டு காலத் தமிழ்நாட்டின் அரசியல் என்பது, ஊழல் காரணமாகக் கருணாநிதியை எதிர்க்கும் அரசியல்தானே? அவர் ஏறிவிட்டால் இறக்குவதற்குப் போராட்டம். இறங்கிவிட்டால் மீண்டும் ஏறிவிடாமல் இருப்பதற்குப் போராட்டம்.

மந்திரியாக்குவதற்குக் கக்கனைப் போல் ஓர் “அந்தணர்’ காமராசருக்குத்தான் கிடைப்பாரா? கருணாநிதிக்குக் கிடைக்கமாட்டாரா? பொதுவாழ்வுக்குப் புதுநெறி வகுத்த கருணாநிதி அந்தக் கொள்கை நிறைவேற்றத்திற்குத் தக ஆ.இராசாவைக் கண்டடைந்தார்.

ஒருவனை மந்திரி ஆக்குவதற்கு என்ன தகுதி வேண்டும் என்று ஒரு செல்நெறியை உருவாக்கி, அரை நூற்றாண்டு காலம் கருணாநிதி மக்களை அதில் பழக்கப்படுத்தியதால்தானே “சூது கவ்வும்’ படத்திற்கு அப்படி ஒரு வெற்றிகரமான மந்திரி பாத்திரப்படைப்பு கிடைத்தது.

“சூது கவ்வும்’ படத்திற்கான கதைக்களம் கருணாநிதி உருவாக்கிய தமிழ்நாடு. கருணாநிதி தான் உருவாக்கிய செல்நெறியைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ளும்படி செய்து அரசியல் என்பது இப்படித்தான் என்று மக்களை முடிவுக்கு வர வைத்துவிட்ட காரணத்தால்தான், “சூது கவ்வும்’ படம் புதிய ஓட்டமுடைய புத்தலைப் படமாகக் கருதப்படுகிறது. திரைப்படங்கள் காலத்தைத்தானே காட்டுகின்றன?

பழ. கருப்பையா

error: Content is protected !!