சுதேசிக்கு மாறிய மத்திய அரசு! ‘டிஜிட்டல் இறையாண்மை’க்காக அனைத்து அதிகாரிகளுக்கும் ‘Zoho Office Suite’ கட்டாயம்!
மத்திய அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் கீழ் டிஜிட்டல் இறையாண்மையை வலுப்படுத்தும் நோக்கில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மத்திய கல்வி அமைச்சகம் எடுத்துள்ளது. இனி, கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து அதிகாரிகளும் அலுவல் ரீதியான அனைத்துப் பணிகளுக்கும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ‘ஸோஹோ அலுவலகத் தொகுப்பை’ (Zoho Office Suite) கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறையின் சார்பில், 2025 அக்டோபர் 3-ஆம் தேதி அன்று அலுவலகக் குறிப்பாணை (Office Memorandum) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய வளர்ச்சியும், சுயசார்பு தொழில்நுட்பமும்
இந்தியாவை ஒரு சேவைப் பொருளாதாரமாக மாற்றுவது மற்றும் தொழில்நுட்பம், வன்பொருள், மென்பொருள் தீர்வுகளில் சுயசார்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது என்ற மத்திய அரசின் இலக்கின் நேரடி நடவடிக்கையாக இந்தக் கட்டளை பார்க்கப்படுகிறது.
அலுவலகக் குறிப்பாணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“ஸோஹோவின் உள்நாட்டு அலுவலக உற்பத்தித் திறனுக்கான கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் சுதேசி இயக்கத்தில் ஒரு வலுவான அடியெடுத்து வைக்கிறோம். இது உள்நாட்டு கண்டுபிடிப்புகளுடன் இந்தியா தலைமை தாங்க, டிஜிட்டல் இறையாண்மையை வலுப்படுத்த மற்றும் சுயசார்பு எதிர்காலத்திற்காக நம் தரவைப் பாதுகாக்க உதவுகிறது.”
இந்தியத் தயாரிப்பான ஒரு மென்பொருளை அரசுத் துறை முழுவதும் கட்டாயமாக்குவது, உலகளாவிய மென்பொருள் ஜாம்பவான்களுக்கு மத்தியில் இந்திய நிறுவனத்தின் ஆற்றலை நிலைநிறுத்துவதோடு, முக்கிய அரசுத் தரவுகளின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்வதற்கான ஒரு தெளிவான செய்தியாகவும் உள்ளது.
அதிகாரிகளுக்கான கட்டாய வழிமுறைகள்
கல்வி அமைச்சகத்தின் இந்த முடிவை அமல்படுத்துவதற்காக, அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் பின்வரும் நான்கு முக்கிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன:
- என்ஐசி மின்னஞ்சல் அணுகல்: அதிகாரிகள் தங்கள் தேசிய தகவல் மையத்தின் (NIC) மின்னஞ்சல் கணக்குகள் வழியாகவே ஸோஹோ அலுவலகத் தொகுப்புக் கருவிகளை நேரடியாக அணுக முடியும்.
- கட்டாயப் பயன்பாடு: இனிமேல், அனைத்து அலுவல் சார்ந்த ஆவணங்கள், விரிதாள் கணக்குகள் (spreadsheets), மற்றும் விளக்கவுரைகள் (presentations) அனைத்தும் கட்டாயமாக ஸோஹோ அலுவலகத் தொகுப்பைப் பயன்படுத்தி மட்டுமே உருவாக்கப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும் மற்றும் பகிரப்பட வேண்டும்.
- பயிற்சி மற்றும் பரிச்சயம்: அதிகாரிகள் அனைவரும் ஸோஹோ தொகுப்பின் அம்சங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடு குறித்துத் தங்களைத் தாங்களே பரிச்சயம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தொழில்நுட்ப ஆதரவு: இந்த மென்பொருள் பயன்பாட்டிற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழிகாட்டுதலையும் கல்வி அமைச்சகத்தின் CMIS/NIC பிரிவு நேரடியாக வழங்கும்.
இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்நுட்பத் தீர்வுகளின் மீது வைக்கப்படும் அரசின் அசைக்க முடியாத நம்பிக்கையை இந்தக் குறிப்பாணை தெளிவுபடுத்தியுள்ளது. ஸோஹோ அலுவலகத் தொகுப்பைக் கட்டாயமாக்குவதன் மூலம், கல்வி அமைச்சகம் டிஜிட்டல் நிர்வாகத்தில் புதிய சகாப்தத்தை நோக்கிச் சென்றுள்ளது. அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்


