ஆன்லைன் டெலிவரி என்ற டிஜிட்டல் வழிப்பறி!-ஸ்விக்கி, ஜொமோட்டோவின் லாப வெறி!

ஆன்லைன் டெலிவரி என்ற டிஜிட்டல் வழிப்பறி!-ஸ்விக்கி, ஜொமோட்டோவின் லாப வெறி!

தொழில்நுட்பம் என்பது மக்களின் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, அவர்களின் அறியாமையை மூலதனமாக்கிச் சுரண்டக் கூடாது. ஆனால், இன்று ஆன்லைன் உணவு விநியோகச் சந்தையைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்கள், ‘பிளாட்பார்ம் பீஸ்’ (Platform Fee) என்ற பெயரில் நடத்தி வரும் கட்டணக் கொள்ளை நுகர்வோர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ரூபாய் ‘தர்மம்’.. 15 ரூபாய் ‘தண்டம்’!

ஞாபகம் இருக்கிறதா? ஆரம்பத்தில் இந்தக் கட்டணம் வெறும் 2 ரூபாயாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவும் எப்படி? கொரோனா காலத்தின் இக்கட்டான சூழலில், “நிவாரண நிதியுதவி” (Covid Relief Fund) என்ற பெயரில், வாடிக்கையாளர்களிடம் ஒரு சிறிய தொகையைப் பெற்று சேவை செய்யப்போவதாகத் தான் இவை தொடங்கின. அன்று மனிதாபிமான அடிப்படையில் மக்கள் கொடுத்த அந்த 2 ரூபாய், இன்று அந்த நிறுவனங்களுக்குப் ‘பசியாக’ மாறிவிட்டது. மெல்ல மெல்ல 5, 10 என உயர்ந்து, இன்று எந்தவித முன்னறிவிப்புமின்றி 15 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தி, சாமானிய மக்களின் பாக்கெட்டில் கைவைக்கின்றன இந்த நிறுவனங்கள்.

ஏமாற்றப்படும் நுகர்வோர்:‘மெம்பர்ஷிப்’ எடுத்தும் பலனில்லை!

ஒரு ஹோட்டலில் இருந்து உணவை ஆர்டர் செய்யும் போது, உணவின் விலை, ஜிஎஸ்டி, பேக்கிங் சார்ஜ் மற்றும் டெலிவரி கட்டணம் என ஏற்கனவே ஒரு நீண்ட பட்டியலுக்கு மக்கள் பணம் செலுத்துகிறார்கள். இதில் ‘பிளாட்பார்ம் பீஸ்’ என்பது, அந்தச் செயலியைத் திறந்து பார்த்ததற்கே நாம் கொடுக்கும் தண்டம் போலிருக்கிறது. நிறுவனங்கள் தங்களின் நஷ்டத்தைச் சரிசெய்யவும், பங்குச்சந்தையில் லாபத்தைக் காட்டவும் நுகர்வோரை வஞ்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? நூறு ரூபாய்க்கு உணவு வாங்கினால், அதில் சரிபாதித் தொகை வரி மற்றும் இதர கட்டணங்களுக்கே சென்றுவிடுகிறது. ‘மெம்பர்ஷிப்’ வைத்திருப்பவர்களுக்கும் இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு இல்லை என்பது, இவர்களின் லாப வெறியை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது.

நிறுவனங்கள் தங்களின் நஷ்டத்தைக் குறைக்கவும், பங்குச்சந்தையில் லாபத்தைக் காட்டவும் சாமானிய மக்களின் தலையில் சுமையை ஏற்றுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான ஆர்டர்கள் நடக்கும் நிலையில், ஆர்டருக்கு 15 ரூபாய் என்பது கோடிக்கணக்கான ரூபாயை நுகர்வோரிடமிருந்து பிடுங்கும் ஒரு மறைமுக உத்தியாகும். ‘மெம்பர்ஷிப்’ வைத்திருப்பவர்களுக்குக் கூட இதில் விலக்கு அளிக்கப்படாதது, அந்த நிறுவனங்களின் பேராசையை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது.

அரசின் மௌனம் ஆபத்தானது!

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் இத்தகைய தன்னிச்சையான கட்டண உயர்வுகளை வேடிக்கை பார்க்கக் கூடாது. டிஜிட்டல் இந்தியா என்ற போர்வையில் நடக்கும் இந்தத் திட்டமிட்ட வழிப்பறிக்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களின் பசியை வியாபாரமாக்கும் இந்த நிறுவனங்களின் அராஜகம் இனியும் தொடரக்கூடாது. இல்லையெனில், நுகர்வோர் இந்த நிறுவனங்களைப் புறக்கணிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

பிருத்விராஜ்

Related Posts

error: Content is protected !!