நீரிழிவு – இது மற்றோரு ஆரம்பம்!

நீரிழிவு – இது மற்றோரு ஆரம்பம்!

கிளினிக்கில் ,ஐம்பது வயது நிரம்பிய பெண்மணியும் அவரது இணையரும் என்னை சந்தித்தனர். “முதல் சந்திப்பு”. அவரது ரத்தப் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு “கட்டுப்பாடற்ற நீரிழிவு” இருப்பது தெரிந்தது. ஹெச்பிஏஒன்-சி (HbA1C) சுருக்கமாக ஏ ஒன் சி என்று அழைக்கப்படுகிறது. இது கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக ஒருவரின் ரத்தத்தில் நிலவிய க்ளூகோஸ் அளவுகளின் சராசரியைக் காட்டுகிறது.10.6 இருந்தது. இதற்கு முன் இவருக்கு இத்தகைய ரத்தப் பரிசோதனை செய்து பார்த்ததே இல்லை என்றும் குறை மாவு உணவு முறை கடைபிடிக்கும் இவரது வெளிநாட்டு வாழ் சகோதரரின் அறிவுரையின் பேரில் – இவரும் இவரது கணவரும் முழு ரத்தப் பரிசோதனை செய்து என்னைச் சந்திக்க வந்திருந்தனர்.அவருக்குரிய உணவு முறை குறித்து கேட்டபோது தீவிர பேலியோ தற்போதைக்கு வேண்டாம் என்றும் குறை மாவு உணவுமுறையில் தினமும் கொஞ்சமாக சோறு இருக்குமாறு உணவு முறை பரிந்துரைக்குமாறு கேட்டார். எப்போதும் பரிந்துரைப்பவரின் பங்கை விட கடைபிடிப்பவரின் பங்கு வாழ்வியல் மாற்றங்களில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.எனவே கடைபிடிக்க இருப்பவர் எத்தகைய மாற்றத்தை விரும்புகிறார் என்பதை அவரது விருப்பப்படியே தேர்வு செய்ய விட்டுவிடுவதும் பிறகு அதற்குரிய உணவு முறையை பரிந்துரை செய்வதும் சரியாக இருக்கிறது. தினமும் மாவுச்சத்து 50 முதல் 100 கிராமுக்கு மிகாமலும் , புரதச்சத்து ஒவ்வொரு கிலோ எடைக்கும் ஒரு கிராம் என்ற அளவிலும் , மீதம் உள்ள கலோரிகளை ஆரோக்கியமான கொழுப்புச் சத்தின் மூலமும் கிடைக்குமாறு உணவு முறையை மாற்றி அமைத்தேன்.

மாடல் உணவு முறை

காலை

இனிப்பு சிறிதும் சேர்க்காத டீ (100 மில்லி சுண்ட வைத்த முழுக் கொழுப்பு பால் அதனுடன் எந்த வகை இனிப்புக்கும் அனுமதி இல்லை)

காலை உணவு

80 கிராம் சுண்டல் அல்லது 80 கிராம் நிலக்கடலை அல்லது 80 கிராம் பாதாம்

11 மணிக்கு

ஸ்நாக்ஸ் – 100 கிராம் கொய்யா”காய்” ( பழம் அனுமதி இல்லை) ,அல்லது லெமன் டீ ( இனிப்பு மற்றும் பால் இல்லாமல் ) அல்லது 200 மில்லி உப்பிட்ட லெமன் சாறு

மதியம்

100 கிராம் கஞ்சி வடித்த சோறு +150 கிராம் காய்கறிகள் +2 முழு முட்டைகள் ( அவரவர் விருப்பம் போல செய்து சாப்பிடலாம்)

மாலை

100 மில்லி முழுக்கொழுப்புப் பால் டீ ( இனிப்பு எந்த வடிவத்திலும் சேர்த்தாலாகாது) இதனுடன் 100 கிராம் வெள்ளரிக்காய் அல்லது 100 கிராம் தேங்காய்

இரவு

எட்டு மணிக்குள் 2 தோசைகள் அல்லது 2 சப்பாத்திகள் அல்லது 3 இட்லிகள் . இவற்றுடன் வாரம் மூன்று நாட்கள் – 150 கிராம் கோழி அல்லது மீன் அல்லது மட்டன் அல்லது பனீர் அல்லது டோஃபு உட்கொள்ள வேண்டும்.

இவருக்கு வைத்த கண்டிஷன்கள்

– இனிப்பு சுவை தரும் எதையும் சாப்பிடக்கூடாது. பழங்கள் உட்பட எந்த இனிப்பு சுவை தரும் உணவுப்பொருட்களுக்கும் அனுமதி இல்லை.

– வெளிப்பண்டங்கள் / அடுக்ககத் தீனிகளுக்கு ஸ்ட்ரிக்ட் “நோ”

– காலை மற்றும் இரவு உணவை இடம்மாற்றிக் கொள்ளும் “உரிமை” கடைபிடிப்பவருக்கு உண்டு.

– பரிந்துரைக்கப்பட்ட உணவு முறையுடன் தினமும் ஒரு மணிநேர நடைப்பயிற்சி அவசியம்

– பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறையுடன் தினமும் எட்டு மணிநேரம் உறக்கமும் முக்கியம் – மன அமைதியும் முக்கியம்

– பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நிறுத்தும் உரிமை பரிந்துரைப்பாளருக்கு மட்டுமே உண்டு.

இவற்றை பரிந்துரைத்து விட்டு கடைபிடிக்க இருக்கும் சகோதரியை மூன்று மாதங்களுக்குப் பிறகு புதிய ரத்தப் பரிசோதனையுடன் சந்திக்குமாறு கூறினேன். அப்போது சகோதரி என்னிடம் கேட்டார் . “கட்டாயம் மூன்று மாதங்களுக்குப் பிறகு சந்திக்க வேண்டுமா?”

“ஆமாம்… இப்போ நீங்க சரியாக படிக்காத நல்ல மதிப்பெண் வாங்காத ஒரு மாணவனாக என்னை நினைச்சுக்கோங்க.. சரியா..?”

“சரி சார்.. நினைச்சுக்குறேன்..”

“இப்போ நீங்க தான் டீச்சர்னு நினைச்சுக்கோங்க.. உங்க கிட்ட எங்க அப்பா அம்மா டியூசன்/ ஸ்பெசல் க்ளாஸ் அனுப்புறாங்கனு நினைச்சுக்கோங்க”

“ஓகே சார்..”

“நீங்க ட்யூசன் சேர்ந்த பிறகு நல்லா படிக்க ஆரம்பிச்சுட்டீங்கனு எப்டி உங்க பெற்றோர்களுக்கு தெரியும்?”

“பரீட்சைல நல்ல மார்க் வாங்குறத வச்சுதான் தெரியும் சார்”

“ரைட்டு… அதே மாதிரி தான் இப்போ கால் பரீட்சைல கம்மி மார்க் வாங்கிருக்கீங்க. அடுத்து மூன்று மாசம் கழிச்சு ரத்தப் பரிசோதனை செய்யப் போறீங்கள்ள.. அது அரைப்பரீட்சை அதுல நல்ல மார்க் வாங்கிக் காண்பிங்க.. அப்பதான் ட்யூசன் நல்லா வேலை செஞ்சிருக்குனு அர்த்தம்”

“ஓ… ஓகே சார்…”

“அடுத்து இன்னொன்னும் சொல்றேன்…”

“சொல்லுங்க சார்”

“பரீட்சை மூணு மாசத்துக்கு ஒரு தடவ எழுதணும்.. அடுத்து ஸ்பெசல் கிளாஸ்கள் ( மருந்துகள்) வேணுமா வேணாமா குறைக்கணுமா என்பதை ட்யூசன் மாஸ்டர்கிட்ட ஆலோசிக்காம செய்யக்கூடாது. பரீட்சைல நல்ல மார்க் வாங்கும் வரை ,ட்யூசனும் முக்கியம். ஸ்பெசல் கிளாஸ்களும் முக்கியம். டியூசனுக்கு வராம டிமிக்கி கொடுத்தா அடுத்து வரப்போற பரீட்சைல மார்க் கண்டிப்பா குறையும்.இதெல்லாம் மனசுல வச்சுக்கணும்.. ஓகே”

“ஓகே ஓகே சார் . நல்லா புரிஞ்சுது”

நீரிழிவு என்பது முடிவல்ல… அது நம்மை நாமே உணர்ந்து , கற்று நம்மை மாற்றிக் கொள்ள வாழ்க்கை கொடுக்கும் சந்தர்ப்பம்…!இது மற்றொரு “ஆரம்பம்”…!

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

Related Posts