டகால்டி – விமர்சனம்

டகால்டி – விமர்சனம்

ஒரு சினிமா எடுக்கக் கதை வேண்டும்.. அந்தக் கதை குடும்பச்சூழலில் இருக்க வேண்டுமெனில் சகலருக்கும் புரிந்த உறவு முறைகளில் கோர்த்தெடுத்து உருவாக்க வேண்டும். பழி வாங்கும் கதையெனில் பின்னணியை வலுவாக யோசிக்க வேண்டும்.. காதல் கதையெனில் ரொமான்ஸ் வழிய வழிய யோசித்திருக்க வேண்டும். சண்டைக் காட்சிகள் நிரம்பிய படமென்று நினைக்க வைக்க வலுவானக் காரணிகளோடு ஆக்ரோசமாய் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் சந்தானம் நடிக்கும் படத்துக்கான கதைக்கு கொஞ்சமும் மெனக்கெட வேண்டாம் என்று யாரோ சொன்னதன் விளைவுதான் டகால்டி திரைப்படம்! ஆனாலும் மோடி மஸ்தான் வித்தைக் காட்டுவது போல் என்னவோ டாகால்டி செய்து இரண்டரை மணி நேரத்தை காணாமல் போகச் செய்து விட்டார் சந்தானம்.

இந்த டகால்டி படத்தின் கதை என்னவென்றால் சந்தானம் & யோகிபாபு இருவரும் மும்பையில் போதைப் பொருள் கடத்தல் செய்து பிழைப்பை தள்ளி வருகின்றனர். அதே மும்பையை சேர்ந்த பெரும் – மெண்டலான பணக்காரர் விஜய் சாம்ராட் (தருண் அரோரா) தன் இஷ்டத்துக்கு ஒரு பெண்ணின் ஓவியத்தை வரைந்து அப்பெண்ணை கண்டுபிடிக்க ரூ. 10 கோடி வரை சன்மானம் என்று அறிவிக்கிறார் . அந்த பெண்ணை கண்டுபிடிக்கும் வேலையை உள்ளூர் ரவுடியான பாய்(ராதா ரவி)யிடம் இருந்து ஒரு இக்கட்டிலிருந்து தபிக்க சந்தானம் ஒப்புக் கொள்கிறார். அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் திருச்செந்தூரில் இருப்பது தெரியவர, அங்கே போய் ஏமாற்றி அவளைக் சிலபல சாகசங்கள் செய்து, சாம்ராட்டிடம் ஒப்படைக்கிறான். அதில் கிடைத்த பத்துக் கோடி பணத்தில் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு, குடித்து கும்மாளமிட்ட பிறகு, மனம் திருந்தி அந்தப் பெண்ணைக் காப்பாற்றி கணவனாகிறார் சந்தானம் – அம்புட்டுத்தான்.

நாயகனாக வரும் சந்தானம், இந்த டகால்டி படத்துக்கு தேவையானதை தனக்கே உரிய பாணியில் வழங்கி இருக்கிறார். டைமிங் காமெடி, ஒன் லைன் காமெடி ‘நீ எல்லாம்  இவ்ளோ பெரிய நடிகனா ஆவேன்னு எதிர்பார்க்கலைடா’ என்று யோகி பாபுவை கலாய்ப்பது, ‘என் எய்மே அஜித் அல்லது விஜய்யை வச்சு படம் பண்ணி பெரிய டைரக்டர் ஆகறதுதான்’ என்று பிஞ்சு முகத்தை வைத்துக் கொண்டு சொல்லும் ஹீரோயினிடம், ‘அப்ப சிறுத்தை சிவா, அட்லீலாம் என்ன பண்ணுவாங்க?’ என்று பதில் எதிர்பாராத கேள்வியை எழுப்புவதும் ‘ஏழரை மணிக்கு வரலைன்னா, ஏழு நாற்பதுக்கு வருவேன்..’ எனக் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் கலகலப்பூட்ட முயன்றுதான் இருக்கிறார். முழு படத்தையும் தாங்கி செல்லும் பொறுப்பு இருப்பதால் பல நேரங்களில் கண்ணால் பேசி கதையை நகர்த்துவெல்லாம் வேற லெவல். இவருடன் கூட்டணி அமைத்திருக்கும் யோகிபாபுவின் காமெடி சந்தானம் என்னும் எரிமலையில் நீர்த்து போய் விடுகிறது.

ஹீரோயின் ரித்திகா சென், லூசு பொண்ணு கேரக்டரில் திருச்செந்தூரில் சினிமா கனவில் இருப்பது, மும்பையில் ஷாருக்கானுக்கு கதை சொல்ல போறோம் என்ற பொய்யை உண்மையென நம்பி கனவு காண்பது, தான் மாட்டிக்கொண்டது தெரிந்து கலங்குவது என கொடுத்த ரோலுக்கு பங்கமில் லாமல் பொருந்தி போகிறார்.

போதைக் கடத்தல், சைக்கோ வில்லன், ஆக்‌ஷன் ட்ராக் என்றெல்லாம் கதைக்களத்தை யோசித்த இயக்குனர் விஜய் ஆனந்த், இந்த சந்தானம் நடிக்கும் கதைக்கு தேவையான காமெடி ட்ராக்-கை சட்டை செய்யாமல் விட்டு விட்டதுதான் சோகம். தீபக்குமாரின் ஒளிப்பதிவு நன்று. விஜய் நரேன் இசை மோசமில்லை..

மொத்தத்தில் ‘டகால்டி’  – ஜஸ்ட் டைம் பாஸ் ஃபிலிம்!

மார்க் 3 / 5

Related Posts