June 1, 2023

ஹைவேஸ் போலீஸூக்கு வருசத்துக்கு 48 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுக்கும் ட்ரக் டிரைவர்கள்!!

நம் இந்தியாவில் வார நாட்களில் அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதைப் பிடித்து வழக்கு போடுவது நாளொன்று 650 என்று ஒரு புள்ளி விபரம் சொல்லுகிறது. ஆனால் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தினமும் அதிகரித்து கொண்டே போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலை யில் லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நெடுஞ்சாலை, போலீஸ், ஆர்டிஓ உள்ளிட்ட துறை அதிகாரிகள், ரவுடிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.48 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுப்பதாக தன்னார்வ நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாது உள்ளது. லாரி ஓட்டுநர்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாததால் அவர்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கியமான உள்நாட்டு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து வலையமைப்பாக, நாடு முழுவதும் சரக்குகளை நகர்த்தியபடி சுமார் 67 சதவீத சரக்கு போக்கு வரத்து சாலைகளில் உள்ளன. இந்தியாவில் லாரி ஓட்டுநர்களின் பற்றாக்குறையும் அதிகமாக உள்ளதால், இந்த தொழில் நாளுக்கு நாள் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. இந்தியாவில் சுமார் 20 லட்சம் லாரி ஓட்டுநர்கள் உள்ளனர். லாரிகளுக்கும் டிரைவர்களுக்கும் உள்ள பற்றாக்குறை இடைவெளி அதிகமாக உள்ளது. அதாவது, இந்தியாவின் லாரிகளில் ஏறத்தாழ 25% முதல் 30% வரை எந்த நேரத்திலும் சும்மா கிடக்கிறது. அது, ஓட்டுநர் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களை மையப்படுத்தி உள்ளது.

சேவ் லைப் பவுண்டேஷன்’ (எஸ்.எல்.எப்) என்ற சாலை பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் விபரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, லாரி ஓட்டுநர் கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் 2019ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, பல்வேறு காரணங்களுக் காக ரூ.47,852.28 கோடி லஞ்சம் கொடுக்கின்றனர். ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வில், 2006-07ம் ஆண்டில் ரூ.22,048.20 கோடி லஞ்சம் கொடுப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்தது. தற்போது இருமடங்குக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

அந்த லஞ்ச பணத்தை மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை மற்றும் ஆர்டிஓக்கள் மற்றும் வரி வசூலிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் உள்ளூர் ரவுடிகள் மற்றும் பிற குற்றவியல் பிரிவுகளை சேர்ந்தவர் களும் கொடுக்க லஞ்சம் தர வேண்டும். இந்த லஞ்சமாக கொடுக்கும் பணத்தின் தொகையை வழக்கமாக லாரியின் உரிமையாளர் அல்லது லாரி மூலம் பொருட்களை அனுப்பும் நபர் ஏற்க வேண்டும். அது ஊழலின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.

லாரி ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு சுமார் 12 மணி நேரம் வாகனம் ஓட்ட வேண்டும். சுமார் 50 சதவீத ஓட்டுநர்கள் சோர்வாக இருந்தாலும் அல்லது தூக்கத்தில் இருந்தாலும் தொடர்ந்து வாகனம் ஓட்டுகிறார்கள். கணக்கெடுக்கப்பட்ட ஒவ்வொரு 5 டிரைவர்களில் ஒருவர் லாரி ஓட்டும் போது தூக்கத்தைத் தவிர்க்க ஒருவித மருந்துகளைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டனர். இதுபோன்ற ஓட்டுநர்கள் அதிக எண்ணிக்கையில் கொல்கத்தாவில் உள்ளனர். அதேபோல், கான்பூர் மற்றும் டெல்லி பகுதிகளில் உள்ள லாரி ஓட்டுநர்கள் அதிகமாக ஒருவித மருந்து அல்லது போதை வஸ்துவை பயன்படுத்துகின்றனர்.

மார்க்கெட்டிங் மற்றும் டெவலப்மென்ட் ரிசர்ச் அசோசியேட்ஸ் (எம்.டி.ஆர்.ஏ) சார்பில், 10 முக்கிய நகரங்களில் 1,217 டிரைவர்கள் மற்றும் 101 உரிமையாளர்களிடம் எடுக்கப்பட்ட புள்ளி விபர கணக்கெடுப்பின் இத்தகவல்கள் வெளியிடப்படுகின்றன. எங்களது ஆய்வில் பதிலளித்தவர்களில் 10 பேரில் ஒன்பது பேர் (93 சதவீதம்) தங்களுக்கு அரசின் சமூக பாதுகாப்பு சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், சுகாதார காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவை கிடைப்பதில்லை என்றனர். இவர்களில் பாதிபேர் (53 சதவீதம் பேர்) மாதத்திற்கு 10,000 முதல் 20,000 ரூபாய் வரை சம்பாதிப்பதாக தெரிவித்தனர்.

லாரி டிரைவர்கள் கனரக வாகன தொழில் துறையின் முதுகெலும்பாக உள்ளனர். நீண்ட தூரத்திற்கு பொருட்களை சீராக கொண்டு செல்வதை உறுதி செய்வதில் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆனால் லாரித் தொழில் முறைசாராமல் இருப்பதால் லாரி ஓட்டுனர்கள் வெகுவாக பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர். கணக்கெடுப்பில் 84 சதவீதம் பேர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களுக்கு லாரி ஓட்டுவதை ஒரு தொழிலாக அங்கீகரிக்க மறுப்பதாக தெரிவித்தனர். சாலையில் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் மூன்றில் இரண்டு பங்கு ஓட்டுநர்கள் இந்தத் தொழில் மீது அதிருப்தி கொள்கின்றனர். 10 பேரில் 6 பேர் (62 சதவீதம்) சாலைகளில் வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பற்ற நிலையை உணர்வதாக தெரிவிக்கின்றனர்.

மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகளின்படி, மொத்த விபத்துக்களில் 12.3 சதவீதம் லாரி களால் ஏற்படுவதாக கூறுகிறது. மேலும், லாரி விபத்துக்களில் 2018ம் ஆண்டில் மட்டும் 15,150 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள் முதுகுவலி, மூட்டு தசை வலி மற்றும் இரைப்பை, குடல் பிரச்னைகள் போன்ற உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர்.

95 பேர் சாலையோர உணவை கட்டாயம் சாப்பிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். மூன்றில் இரண்டு ஓட்டுநர்கள், தங்கள் பணிகள் கூடுதலாக சுமத்தப்படுவதாகக் கூறினர். இதனால் அதிவேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாக தெரிவித்தனர். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்னர் எந்தவொரு முறையான பயிற்சியும் பெறவில்லை என்றதும் குறிப்பிடத்தக்கது.