தேவகவுடா பேரனின் ஆபாச வீடியோக்கள் சர்ச்சை! வழக்குப் பதிவு!

தேவகவுடா பேரனின் ஆபாச வீடியோக்கள் சர்ச்சை! வழக்குப் பதிவு!

முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், பாஜக கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் புகாரில் சிக்கிய நிலையில் அவர் மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியானதை அடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும், மஜத 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கர்நாடக மாநிலத்தில் முதல்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹாசன் தொகுதியின் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடும் நிலையில், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 300-க்கும் அதிகமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அதுவும் ஹாசன் தொகுதி வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதிக்கு முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் அத்தொகுதி முழுவதும் வாட்ஸ் அப்களில் வலம் வந்தன. இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையில், மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, அந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் எக்ஸ் பக்கத்தில், ‘பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வீடியோ கிளிப்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, கர்நாடக மாநில மகளிர் ஆணையம், வியாழக்கிழமை, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜேடிஎஸ் கட்சியின் ஹாசன் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. அவர் பெங்களூரில் இருந்து ஜெர்மனுக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படும் நிலையில் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டு ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Related Posts