June 7, 2023

ந்த சமூகத்திலுள்ள சகல் துறைகளிலும் சினிமா மட்டுமே குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று பாண்ட் பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு சொல்லலாம். எதிலும் வளர்ச்சி இருந்தால் தான் நகர முடியும், வெற்றியடைய முடியும் என்பதால் ஒரு கோட்டைப் போட்டு அதைத் தாண்டிக் கொண்டே தன்னுடைய எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே இருக்கிறது சினிமா.,.ஆனாலும் பலருக்கு ஒரு நல்ல சினிமா என்பது நாலு விஷயங்களைக் கொண்டிருக்க வேண்டும். மனதைத் தொட வேண்டும், சிரிக்க வைக்க வேண்டும், சிந்திக்க வைக்க வேண்டும், பொழுதும் போக்க வேண்டும் என்று கருதுவோர் அதிகம்.. அவர்களை திருப்திப்படுத்த உருவாகி இருக்கும் படமே ‘கோப்ரா’. ஆனால் இன்றளவும் பலருக்கும் பிடித்தமான மேத்தமேட்டிக்ஸ், சயன்ஸ், ஏகப்பட்ட தோற்றங்கள், ஆள் மாறாட்டம், கார்ப்பரேட் பாலிடிக்ஸ் என எக்கச்சக்க விஷயங்களை கலந்துக் கட்டி திகட்ட வைத்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

கதை என்னவென்றால் இந்தியாவில் ஒரு ஸ்டேட் சி.எம் கொல்லப்படுகிறார். கூடவே பல்வேறு நாடுகளில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்படும் நிலையில், அதனை விசாரிக்க இன்டர்போல் ஆபிஸர் இர்ஃபான் பதான்(முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்) களமிறக்கப்படுகிறா..அவரது விசாரணையில், கோப்ரா என்பவர்தான் அந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் இருப்பதாகத் தெரிய வருகிறது.அத்துடன் கொலைசெய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் ரிஷி என்ற தொழிலதிபருடன் தொடர்பு இருப்பதும் இக் கொலைகள் எல்லாமே கணிதத்தை அடிப்படையாக வைத்து நடக்கின்றன என்பதையும் கண்டறிந்து, ஆக.,, கணிதத்தில் மாஸ்டர் ஒருவரால்தான்இதெல்லாம் நடக்கிறது என்றும் கண்டறிகிறார்கள்.. முடிவில், ஒரு சாதாரண கணக்கு வாத்தியாராக வாழ்ந்து கொண்டிருக்கும் விக்ரம் இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் இருப்பது தெரிய வருகிறது. ஆர்டினரி மேக்ஸ் டீச்சர் இது போன்று இண்டர்நேஷனல் லெவலில் ஏன் கொலைகளை செய்கிறார் என்பதுதான் கோப்ரா கதை.

ஆரம்பக் காட்சியிலேயே அடையாளம் தெரியாத அளவிற்கு அசத்தலாய் அறிமுகமாகிறார் விக்ரம். அந்த அசத்தல் ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சரியத்துடன் நகர்கிறது. குறிப்பாக இடைவேளைக்குப் பின்னர் போலீஸ் விசாரிக்கும் காட்சியில் விக்ரம், ஆனந்தராஜ் கூட்டணியின் நடிப்பு தியேட்டர் முழுவதையும் கரவொலி எழுப்ப வைக்கிறது. ‘அந்நியன்’ படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ் ஏட்டிக்குப் போட்டியாக நடித்த அந்தக் காட்சி போல இந்தக் காட்சியில் விக்ரம், ஆனந்தராஜ் ரசிக்க வைத்துள்ளார்கள். படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ் இரண்டு வேடங்களில் விக்ரம் நடித்திருப்பதெல்லாம் வேற லெவல். சில வேஷங்கள் சின்ன பிள்ளைத்தனமாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பு மற்றும் மாடுலேசன் திறமையால் வாயை பிளக்க வைக்கிறார்.

இன்டர்போல் ஆபீசராக களமிறக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதன்முதலாக பெரிய திரையில் தோன்றுகிறார். சில இடங்களில் அவருடைய டப்பிங் சரியாக பொருந்தவில்லை என்றாலும் அவரின் நடிப்பு சூப்பர். இனி பாலிவுட்டில் பிசியான ஆக்டரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. . நடிகை ஸ்ரீநிதி, கதாபாத்திரத்தின் ஆழமான காதல் தன்மையை புரிந்து கொண்டு நடித்திருப்பது சிறப்பு. வில்லனாக வரக்கூடிய ரோஷன் மேத்யூ வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்திருந்தாலும் பின்னணி இசை வழக்கமான ரஹ்மானின் இசை இல்லாமல் புதுவிதமாக உள்ளது. ஒவ்வொரு காட்சியையும் அழகாக உயர்த்தியுள்ளது. புவன் ஸ்ரீநிவாசன், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் பளிங்கு கண்ணாடி போல அவ்வளவு கிளாரிட்டி, உயர்தரத்தில் காட்சிகளை மெருகேற்றியுள்ளனர்

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் என கவனம் ஈர்த்த திரைப்படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து தனக்காக இல்லாவிடாலும் தன்னை முழுக்க நம்பிய விக்ரமுக்காவது ஸ்கீரின் பிளேயில் இன்னும் அக்கறைக் காட்டி இருக்கலாம்..குறிப்பாக படத்தின் நீளத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.  என்றாலும் விக்ரமின் அபார உழைப்பிற்க்காவே பார்க்க வேண்டிய லிஸ்டில் இணைந்து விட்டது இந்த கோப்ரா.

மார்க் 3.25/5