June 2, 2023

விவசாயி முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு ’காவிரி காப்பாளன்’ பட்டம்!

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார். பின்னர் சட்டமன்றத்தில் இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது. இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் அவரை சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித் தனர். இந்த நிலையில் சிறப்பு வேளாண் மண்டலம் என அறிவித்த முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த பல்வேறு தமிழக விவசாயிகள் சங்கங்கள் முடிவெடுத்து அதை முறைப்படி அறிவித்தன. அதன்படி நேற்று திருவாரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளன்’ என்ற பட்டம் விவசாய சங்க பிரதி நிதிகள் சார்பில் வழங்கப்பட்டது. சட்டப்பூர்வமாக ஒருவரின் நலத்திற்கு பொறுப்பு ஏற்பவர் காப்பாளன். காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நலன் ஏற்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் சட்டம் கொண்டு வந்ததால் ‘காவிரி காப்பாளன்’ பட்டம் வழங்குவதாக காவிரி ரங்கநாதன் கூறினார். மேலும் முதல்-அமைச்சருக்கு வெள்ளியால் ஆன ஏர் கலப்பை, வாள், நெல்லினால் ஆன கோபுரம், நெல் மாலை ஆகியவை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

இந்த விழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பேசிய போது, “கோடி கோடியாக பணம் இருந்தாலும் மனநிறைவோடு வாழ முடியாது. ஆனால் மனநிறைவோடு வாழ்பவன் விவசாயி ஒருவன் மட்டும்தான். விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். உணவை உற்பத்தி செய்யக் கூடியவன் விவசாயி. பணத்தை நம்மால் பார்க்கத்தான் முடியும். எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் அவன் உண்பது விவசாயி உற்பத்தி செய்யும் உணவைத்தான். அத்தனை பெருமை விவசாய பெருமக்களையே சேரும். வருண பகவானுக்கு மட்டுமே பயப்படக் கூடியவன் விவசாயி. நான் ஒரு விவசாய முதலமைச்சர். ஆனாலும் அத்தனை பேரையும் முதலமைச்சராகவே பார்க்கிறேன். அந்த உணர்வு எனக்குண்டு. முதலமைச்சர் பதவி வரும். போகும். ஆளுகின்றவர்களுக்கு விவசாயம் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்று எனக்கு முன்னால் பேசியவர்கள் சொன்னார்கள். உண்மைதான். நமது நாட்டில் 100-க்கு 60 சதவீதம் பேர் விவசாயிகள். உழவுத்தொழில் கடினமான தொழில். அதை செய்து பார்த்தால்தான் அதன் கடினம் நமக்கு புரியும். இரவு, பகல் பாராமல் உழைக்கின்றவன் விவசாயி. மற்றவர்கள் எல்லாம் 9 மணிக்கு வேலைக்குப் போய் விட்டு மாலை 5 மணிக்கு வீடு திரும்பி விடுவார்கள். ஆனால் விவசாயி அப்படியல்ல. அவனுக்கு நேரம் காலம் கிடையாது. கண்ணை இமை காப்பது போல பயிரை காப்பவன் விவசாயி.

ஒரு முதலமைச்சராக இருப்பவர் அனைத்து தரப்பு மக்களையும் பார்க்க வேண்டும். குறிப்பாக விவசாயிகளை பற்றி சிந்திக்க வேண்டும். எந்தெந்த வகையில் விவசாயியின் வருமானத்தை பெருக்க வேண்டும் என்று ஒரு முதல்வர் சிந்திக்க வேண்டும். விவசாயிகளின் நன்மை கருதியே கொண்டு வரப்பட்டதுதான் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல மசோதா. விவசாயி மட்டும்தான் சொந்தக் காலில் நிற்க முடியும். அப்படிப்பட்ட அவர்களுக்காக கொண்டு வரப்பட்டதே இந்த மசோதா. நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் இவர் எப்படி ஆட்சி செய்வார் என்று ஏளனம் செய்தார்கள். இந்த அரசு 10 நாள் நீடிக்கும். ஒரு மாதம் நீடிக்கும். 3 மாதம்தான் நீடிக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் 3 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது இந்த அரசு. விவசாயிகளின் நன்மைக்காக தொடர்ந்து இந்த அரசு பாடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பேசிய அவர், டெல்டா மாவட்டங்களில் ரூ. 15 கோடி மதிப்பில் வேளாண் மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும், நீடாமங்கலத்தில் நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என்றும் கும்பகோணத்தில் வெற்றிலைக்காக ஒரு மையம் அமைக்கப்படும் என்றும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த பாராட்டு விழாவையொட்டி திருவாரூர் தேரோடும் 4 வீதிகள் மற்றும் பனகல் சாலை, பைபாஸ் சாலை, தஞ்சை சாலை, நாகை சாலை உட்பட நகர் முழுவதும் விவசாயிகள் சார்பில் பச்சைக்கொடி மற்றும் தோரணங்கள் அ.தி.மு.க.வினர் சார்பில் கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள் போன்றவை சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக காரில் வந்து கொண்டிருந்தபோது, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி என்ற இடத்தில் விவசாயத் தொழிலாளர்கள் வயலில் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த முதல்வர், காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி வெறும் காலுடன் வரப்பில் நடந்து சென்று நடவு வயலைப் பார்வையிட்டார்.

அங்கு நடவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாய தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய முதல்வர், நாற்றை வாங்கிக் கொண்டு வயலில் இறங்கி நடவுப் பணி யில் ஈடுபட்டார்.