ஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அசத்தல் வெற்றி!

ஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அசத்தல் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் இன்றுமுதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களுக்குள் ‘உள்ளூர்-வெளியூர்’ அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.  இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 12.5 கோடி ரூபாயும், 3-வது மற்றும் 4-வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா 8.75 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சஸ் மோதின.  இப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா – இவின் லீவிஸ் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் ரோகித் ஷர்மா கொஞ்சம் திணறினார். இவின் லீவிஸ் ரன் எதுவும் எடுக்காமல் சஹார் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து, ரோகித் ஷர்மாவும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கிஷான் – சூர்யகுமார் ஜோடி இணைந்தது. இந்த இணை சென்னை அணியின் பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்கத் தொடங்கியது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் மும்பை அணியின் ரன் உயர்வுக்கு பெரிதும் உதவினர். கிஷான் 40 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிர் பந்துவீச்சிலும், சூர்யகுமார் 43 ரன்கள் எடுத்து வாட்சன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து, மற்றொரு இணை சென்னை அணிக்கு நெருக்கடியை தந்தது. ஹர்திக் பாண்டியா – க்ருனால் பாண்டியா இணை அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை குவித்தது. ஹர்திக் பாண்டியா 22 ரன்களுடனும், க்ருனால் பாண்டியா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் வாட்சன் 2 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் மற்றும் தீபக் சஹார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன் – அம்பத்தி ராயுடு களமிறங்கினர். தொடக்கம் முதலே சென்னை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷேன் வாட்சன் 16 ரன்களும், ராயுடு 22 ரன்களும், ரெய்னா 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனியும் ரசிகர்களை ஏமாற்றினார். அவர் 5 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

சென்னை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன. ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பிராவோவின் ஆட்டம் சென்னை அணி ரசிகர்களுக்கு ஓரளவு தைரியத்தைக் கொடுத்தது. எனினும், ஒரு கட்டத்தில் 118 ரன்களுக்கு 8  விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறிக் கொண்டிருந்தது.

ஆனால், அதிரடியாக மட்டையைச் சுழற்றிய பிராவோவின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி நிலைகுலைந்து போனது. 7 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசிய பிராவோ வெறும்  30 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார். அவரது அதிரடி ஆட்டத்தின் உதவியால்  9.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 1 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘த்ரில்’ வெற்றி பெற்றது. பிராவோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் 2018 தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்கி சி.எஸ்.கே அணி பெற்றிருப்பது சகல தரப்பிலும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே  . சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வருகிற 10-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது என்பதும் இப்போட்டிக்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.