சென்னை ஏர்போர்ட் டூ சின்னமலை மெட்ரோ ரயில் : வரும் புதன் கிழமை ஸ்டார்ட் ஆகும்?

சென்னை ஏர்போர்ட் டூ சின்னமலை மெட்ரோ ரயில் : வரும் புதன் கிழமை ஸ்டார்ட் ஆகும்?

சென்னையில் 2 வழித்தடங்களில் (வண்ணாரப்பேட்டை– விமானநிலையம், சென்டிரல்– பரங்கிமலை) மெட்ரோ ரயில்   திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29–ந்தேதி 2–வது வழித்தடத்தில் கோயம்பேடு– ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில்  போக்குவரத்து தொடங்கப்பட்டது. முதல் வழித்தடத்தில், விமான நிலையம்– சின்னமலை இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில்   இயக்குவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளன. இந்த பாதையில், விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு (ஓ.டி.ஏ.), ஆலந்தூர், கிண்டி, சின்னமலை ஆகிய 6   ரயில்  நிலையங்கள் உள்ளன. சுமார் 9 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சுதர்சன் நாயக் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய குழுவினருடன் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி உள்ளார். இந்தநிலையில் இந்தப்பாதையில் போக்குவரத்தை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

chennai metro sep 18

இதுகுறித்து மெட்ரோ  ரயில் நிறுவன வட்டாரத்தில் இருந்த வெளியான தகவலில், “விமானநிலையம்– சின்னமலை இடையே அமைக்கப்பட்டுள்ள ரெயில்பாதை பணியை பாதுகாப்பு ஆணையர் சுதர்சன் நாயக் குழுவினர் ஆய்வு செய்து பயணிகள் ரயில் இயக்குவதற்கான சான்றிதழை வழங்கி உள்ளார். முன்னதாக லக்னோவில் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிர்ணய குழுவினரும் இந்தப்பாதையில் போக்குவரத்து தொடங்குவதற்கான சான்றிதழை வழங்கி உள்ளது.

ஒரு சில பணிகளை மாற்றி அமைக்குமாறு நாயக் குழுவினர் தெரிவித்திருந்தனர். அதன்படி அந்தப்பணிகளும் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டு, தற்போது கடந்த ஒரு மாதமாக 35 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இந்தப்பாதையில் ரயில்களை இயக்கி சோதனை நடத்தி வருகிறோம். இந்தப்பாதையில் சிக்னல்களின் செயல்பாடு, தண்டவாளத்தின் உறுதி தன்மை, தகவல்தொடர்பு சாதனங்களின் செயல்பாடுகள் அனைத்தும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டமும் திட்டமிட்டப்படி நன்றாக நடந்து வருகிறது. ஓட்டுமொத்தப் பணிகள் திருப்திகரமாக இருக்கிறது.

போக்குவரத்தை தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் இன்றுடன் (நேற்று) நிறைவடைந்து உள்ளதால், விமானநிலையம்– சின்னமலை இடையே 21–ந்தேதி (புதன்கிழமை) ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் ரெயிலை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் இயக்கி தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது. இதில் மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கைய்யா நாயுடுவும் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. கோயம்பேடு– ஆலந்தூரை தொடர்ந்து 2–வது ரயில் பாதை விமானநிலையம்– சின்னமலை இடையே சேவை தொடங்க இருக்கிறது. இந்தப்பாதையில் உள்ள அனைத்து  ரயில் நிலையங்களில் ரெயில் நிற்கும் பகுதிகள் மற்றும் பயணிகளுக்கான அனைத்து விதமான வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளது.

இந்தப்பாதையில் கத்திப்பாரா மேம்பாலத்திற்கு குறுக்கே உயர்தொழில்நுட்பத்தில் ‘ஹேண்டி லிவர்’ உயர்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது அபூர்வமான வகை பாலமாகும். அதேபோல் கிண்டி ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் பாதையை கடந்து செல்லும் வகையில், ராட்சத இரும்பு பாலமும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது.இந்த 2 பாலங்களும் சவாலாக எடுத்து செய்யப்பட்டுள்ளன. இதில் மெட்ரோ  ரயிலை இயக்குவதில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு பெருமையாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து அடுத்து ஆலந்தூர்– பரங்கிமலை இடையே போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.இதனை தொடர்ந்து கோயம்பேடு– திருமங்கலம்– ஷெனாய்நகர்– நேரு பூங்கா– எழும்பூர் இடையே சுரங்கப்பாதையில் ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது”மெட்ரோ வட்டாரத்தினர் கூறினார்கள்.

Related Posts