ஈ . வெ . ரா. பெரியார்❤ பிறந்த நாள் இன்று =செப் -17

வெண்தாடி வேந்தர்
பகுத்தறிவுப் பகலவன்
வைக்கம் வீரர்
ஈரோட்டுச் சிங்கம்
சுய மரியாதை சுடர்
பெண்ணினப் போர் முரசு
புத்துலகத் தொலை நோக்காளர்
தெற்காசியாவின் சாக்ரடீஸ் – போன்ற அடைமொழிகளுக்கு சொந்தக்காரரான பெரியார் ஒரு சுய சிந்தனையாளர். சலிப்பு, ஓய்வு இவை இரண்டும் தற்கொலைக்குச் சமம் என்று பிரகடனம் செய்தவர்.
பெரியார் தனது இறுதிக் காலம் வரை தனது லட்சியப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினார். நிற்காத பயணம்! ஓயாத பேச்சு! சளைக்காத உழைப்பு! அவர் இந்த பூமியில் வாழ்நாள் முழுதும் பயணம் செய்த மொத்தத் தொலைவு 8,20,200 மைல்கள். இது இந்தப் பரந்த பூமிக் கோளத்தை மூன்று முறை சுற்றி வருவதற்கொப்பாகும்!
அவர் பேசிய கூட்டங்கள் 21,400. உயிர் விடுவதற்கு முதல் நாள் வரை பேசினார்! எழுச்சியுகம் காண்பதற்கு எழுந்து வாரீர்! என இளைஞர்களை அழைத்தார்!
* யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.
* ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.
* வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் மனைவிக்கு வேறு சட்டம் இருக்கிறது.
* என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர், அதில் உண்மையில்லை. நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்படக் காணோமே என ஏங்குபவன் நான்.
* சிந்திப்பவன் மனிதன்; சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை.
* மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான்.
பெரியார் ஒரு சுய சிந்தனையாளர். சலிப்பு, ஓய்வு இவை இரண்டும் தற்கொலைக்குச் சமம் என்று பிரகடனம் செய்தவர்.
அவரைப்போலவே அவரது பேச்சும், எழுத்தும் எளிமையானவை, வலிமையானவை. தனது இறுதிக்காலம் வரை மானுட மேம்பாட்டை மட்டுமே மையப்படுத்தி இயங்கியவர். அவரது பிறந்த நாளான இன்று பெரியார் என்ற பெருங்கடலிலிருந்து சில துளிகள்:
“நான் ஒரு சுதந்திர மனிதன்; சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப்போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளை தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கின்றேன்”. (புரட்சி 17-12-1933).
“நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்! நான் சொல்லுவது கடவுள் வாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகிவிடு வீர்கள் என்ற வேதம், சாஸ்திரம், புராணம் போல நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்வது உங்கள் அறிவு, ஆராய்ச்சி, புத்தி, அனுபவம் இவைக ளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒத்துவந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள்.” (குடியரசு 11.9.1927)
“சிலரின் அருவருப்புக்கோ, கோபத்திற்கோ பயந்து நான் திட்டத்தை மாற்றிக் கொள்ளும் சுபாவம் உடையவன் அல்ல; அவ்விதம் செய்வது பயத்தாலும், சுயநலத்தாலுமே யாகும்… …. … ஒவ்வொரு இடங்களிலும் சுய மரியாதை உணர்ச்சி உண்டாக பாடுபடுங்கள்; உங்களை பல ஆயிரக்கணக்கான வருடங் கள் மிதித்து அடிமைப்படுத்தி வாழும் பழக்கத்தை- உங்கள் மயிர்க்காம்புகளிலெல்லாம் கூடி தடுப்பேறிய மானமற்ற வாழ்க்கை நிரம் பிய உணர்ச்சியை – உடனே உதறித்தள்ளுங்கள்.” (வைக்கம் வீரர் சொற்பொழிவு 1923).
”பிச்சைக் கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்டவிரோத காரியமாக கருதப்பட வேண்டும். அப்படியானால் தான் மனிதன் சுயமரியாதையோடு வாழமுடியும்.” (குடி அரசு நாளிதழ் 21.04.1945) ‘
‘பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள் அவன் தனது லட்சியத்திற்கு கொடுக்கும் விலை” (விடுதலை நாளிதழ் 20.09.1962) சுயமரியாதை சுடர் ”சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதை பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம் தான்.” (குடி அரசு 17.11.1940)
”நாம் அரசியல் துறையில் முன்னேறி மாற்றம் பெற்றிருக்கிறோமே தவிர, சமுதாய துறையில் இன்னமும் பிற்போக்கான நிலையில் தான் இருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும்.” (விடுதலை 26.08.1967)
குடி அரசு ”மதத்தை வைத்துக்கொண்டு சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று புறப்பட்ட ஒருவர் கூட இதுவரை ஒரு சிறிய வெற்றியை கூட பெற முடியவில்லை.” (குடி அரசு 07.04.1929)
”ஒரு சமூகம் என்றிருந்தால் அச்சமூகத்தில் ஏழைகள் இல்லாமலும், மனசாட்சியை விற்றுப் பிழைப்பவர்கள் இல்லாமலும் செய்வது தான் சரியான சமூக சீர்த்திருத்தப் பணியாகும்.” (குடி அரசு 30.01.1927)
”பொதுக்காரியத்தில் ஈடுபடுகிறவர் எவராவது தன் கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரத்திற்காக பொதுக் காரியத்தைப் பயன்படுத்திக் கொள்பவரேயாவார்.” (அறிவுப் பேழை ; 1976)
”வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, தந்திரசாலியாகவோ, அயோக்கியனாகவோ, இல்லாதவன் இந்த உலகத்தில் வாழ்வதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது. இவைகளை சீர்த்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா..?” (குடி அரசு 04.05.1930)
நிலவளம் ரெங்கராஜன்