விடுதலை செய்யுங்கள்… அல்லது நீண்டகால பரோல் விடுங்கள்.!

இன்று கடலூர் சிறைச்சாலையில் இரண்டு தண்டனைக் கைதிகளுக்கு நோய்த் தொற்று, திருச்சியில் ஒரு கைதிக்கு என்ற செய்தி கசிந்துள்ளது. ஆனால், மதுரையில் இரண்டு கைதிகள், பாளையங்கோட்டையில் இரண்டு கைதிகள், சேலம் சிறையில் ஒரு கைதி, கோவை சிறையில் மூன்று கைதிகளுக்கு என கொரோனா நோய்த் தொற்று பரவியுள்ள விவரம் மறைக்கப் பட்டுள்ளது என்கிறார்கள்.
தவிர வேலூர் மற்றும் புழல் சிறைச்சாலை நிலவரங்கள் ஏதும் வெளியே தெரியவில்லை. அதுவும் மறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வடசென்னை பக்கம் இந்த நோய்த்தொற்று அதிகம். அங்கிருந்து புழல் சிறைச்சாலை அருகே உள்ள பகுதிகளுக்கு எட்டி, சிறைச்சாலைக்கு உள்ளேயும் சென்றடைந்து விட்டது. இன்றைய தேதியில் சுமார் 300 கைதிகளுக்காவது கொரோனா நோய்த்தொற்று இருக்கும் என்கிறார்கள். மூன்று கைதிகள் இறந்துள்ளார்கள். அது சாதாரண மரணம் என்றளவில் கணக்கு?.சென்னை புழல் சிறையில் இருந்துதான் தமிழகத்தின் மற்ற சிறைச்சாலைக்கு பரவி உள்ளது என்கிற விவரம் இப்போது கசிந்துள்ளது.
சிறைச்சாலை தண்டனைக் கைதிகளுக்கு ஏதாவது பயிற்சி அளிப்பது வழக்கம். அப்படி ஒரு பயிற்சிக்காக மற்ற சிறைச்சாலைகளில் இருந்து தலா ஐந்து பேர் புழல் சிறைக்கு வந்து உள்ளார்கள். ஒரு வாரம் பயிற்சி முடிந்து சென்றவர்களை, தனிமைபடுத்தி வைக்காமல், ஒரு நாள் முழுதும் பொதுத் தொகுதியில் மற்ற கைதிகளோடு சாதாரணமாகவே அடைத்து வைத்துள்ளார்கள்.
அடுத்த நாள்தான் தனிமை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். கைதிகள் எதிர்ப்பு தெரிவிக்க-மருத்துவர்கள் வந்து சோதித்தபோதுதான் புழல் சிறைக்குச் சென்று வந்த கைதிகளில் ஓரிருவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கோவை, சேலம் ஆகிய சிறையில் இருந்து சென்ற ஐந்து பேரில் இருவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். மதுரையிலும் இரண்டு பேர் நேற்று அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். மற்றவர்களை சிறைக்குள்ளேயே தனிமைபடுத்தி வைத்துள்ளார்கள்.
வழிக்காவலுக்குச் செல்லும் போலீஸார்கூட உடன் செல்ல மறுத்து நிற்கிறார்கள். கைதிகளை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, அப்படியே வீட்டிற்கு சென்றுவிடுங்கள். 15 நாள் வீட்டிலேயே தனிமையில் இருந்துவிட்டு பணிக்கு வந்தால் போதும் என கேட்டுக்கொண்ட பிறகு சில காவலர்கள் முன்வந்துள்ளார்கள்.உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளபடி ஐம்பது சதவீத கைதிகளைத்தான் அடைத்து வைத்திருக்க வேண்டும். மற்றவர்களை தற்காலிகமாக விடுவித்து வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள் எனக்கூறியுள்ளது அரசு. அந்த உத்தரவை அதிகாரிகள் அலட்சியம் செய்தார்களா? அல்லது அரசே கண்டுகொள்ளாமல் விட்டதா? தெரியிவில்லை.
50 சதவீத கைதிகளை வைத்திருக்க வேண்டும் என்றதை மீறி 160 சதவீத கைதிகளை அடைத்து வைத்துள்ளார்கள். ஒவ்வொரு மத்தியச் சிறைச்சாலை நிலவரமும் அதுதான் என்கிறார் கள்.வழக்கமாக நீதிபதிகள் உள்ளே சென்று ஆய்வு செய்வது வழக்கம். கொரோனா நோய்த் தொற்றை காரணம் காட்டி கடந்த இரண்டு மாதங்களாக எல்லா சந்திப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைக் காரணம் காட்டி, வழக்கமாக பார்வையிடச் செல்லும் நீதிபதிகளும் செல்ல முடியவில்லை. இது அதிகாரிகளுக்கு சாதகமாகப் போய்விட்டது.
சிறைக் கைதிகளின் உணவில் இப்போதுதான் (ஓரிரு நாட்களாக) தினசரி ஒரு முட்டை என சேர்க்கப்பட்டுள்ளதாம். அவ்வப்போது கபசுரக்குடிநீர் தருகிறார்கள். தவிர்த்து பிரத்யேகமான கவனிப்பு ஏதுமில்லை. இந்த போக்கு நீடித்தால் இன்னும் பத்து பதினைந்து நாட்களில் சிறைச் சாலைகளில் உள்ள கைதிகளின் நிலை மோசமாக மாறும் என்கிறார்கள். இனி மேலும் தாமதம் கூடாது. எந்தெந்த சிறையில் எத்தனை கைகிதகள் என்ற விவரத்தை அரசு ‘வெள்ளை அறிக்கையாக’ வெளியிட வேண்டும். நீதிபதிகளும் உயர்மட்ட மருத்துவக் குழுவும் சிறைக்குள் சென்று உடனடி ஆய்வை மேற்கொள்ள வேண்டும். உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்.
பாதிக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை, வேண்டிய நிபந்தனைகளோடு இருநபர் ஜாமீனில் வெளியிடலாம். குறிப்பாக பத்து பதினைந்து வருடங்களுக்கு மேல் நீண்டகாலமாக சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளை வெளியிட வேண்டும். நீண்ட கால சிறை, சரியான-சத்தான உணவின்மைக் காரணமாக அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. எனவே ராஜிவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான எழுவரும், இதர கைதிகளும் உடனடியாக நீண்ட கால பரோலில் விடுவிக்க வேண்டும். ஏற்கனவே சிறைவாசி இரா.பொ. இரவிச்சந்திரனின் தாய் இராஜேஸ்வரி அம்மா அவர்கள், பிப்ரவரி மாத இறுதியிலிருந்தே அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்கள்.
விடுதலை செய்யுங்கள். அல்லது நீண்டகால பரோல் விடுங்கள். நிபந்தனைகளை ஏற்கவும், இருநபர் சொந்த ஜாமீன் கொடுக்கவும் தயார் என்றிருக்கின்றார். அற்புதம் அம்மாவும் அவர்களை விடுதலை செய்ய தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளார்.இனியாவது அரசு இதற்கு செவி சாய்க்க வேண்டும். பிற அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு வலியுறுத்த வேண்டும். தவிர…
உயர்மட்டக்குழு ஒன்று சிறைச்சாலைக்குள் சென்று அவசர ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அரசு சொல்வதை மட்டுமே நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்காமல், சிறைச்சாலைக்குள் சென்று கைதிகளின் நிலையை-நோய்த் தொற்று விகிதத்தை நேரில் விசாரித்து வேண்டிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.