சாலைகளில் 30 நிமிடங்களுக்கு இலவச ‘வைபை’ வசதி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சாலைகளில் 30 நிமிடங்களுக்கு இலவச ‘வைபை’ வசதி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 49 ஸ்மார்ட் கம்பங்களில் இருந்து பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவச ‘வைபை’(wi-fi) வசதி பெறலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் இலவச வைபை வசதி பெறுவதற்கு தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்து ஓ.டி.பி. மூலம் இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தில் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள திட்டப்பணிகளை ஒருங்கிணைத்து நிர்வாக செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய இடங்களை கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை குறித்த தகவல் கருவிகள் மூலம் அறிதல், மழை அளவை கண்டறிதல், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் நீர் அளவை கண்டறிதல், திடக்கழிவு அகற்றும் பணிகளை கண்காணிக்க கேமரா நிறுவுதல் மற்றும் அதனை சார்ந்த தகவல்கள் பெறப்பட்டு, அதன்மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாக நகரின் பல்வேறு இடங்களில் 49 ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த கம்பங்களில் உள்ள ‘வைபை’ தொடர்பை பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் இலவச வைபை வசதி பெறுவதற்கு தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்து ஓ.டி.பி. மூலம் இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

பொதுமக்கள், இலவச வைபை இணைப்பு அமைக்கப்பட்டுள்ள 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

error: Content is protected !!