மத்திய அரசு ஊழியர்களின் பொது வேலை நிறுத்தம் : தமிழக அரசு எச்சரிக்கை!

மத்திய அரசு ஊழியர்களின் பொது வேலை நிறுத்தம் : தமிழக அரசு எச்சரிக்கை!

த்திய அரசு ஊழியர்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 28, 29ந் தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.. இந்த நிலையில், வரும் 28, 29 தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்த செய்யப்படும் என்று அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் நேற்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொது செயலாளர் எம்.துரைபாண்டியன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது:-

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குதலைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் 28, 29ந் தேதி ஆகிய 2 நாட்கள் மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

மத்திய அரசு புதிய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களை நவீன பிச்சைகாரர்களாக மாற்றியுள்ளது. எனவே புதிய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்யவேண்டும்.

பொதுமக்களுக்குப் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளை முந்தைய அரசுகள் பொது உடைமை ஆக்கின. ஆனால் தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசாங்கம் பணமாக்கும் திட்டத்தின் மூலம் ரெயில்வே, தபால், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைத் தனியார் மயமாக்கி வருகிறது. இதனால் பிறக்கும் புதிய இந்தியா இலங்கையைப் போல மாற அதிக வாய்ப்புள்ளது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். மத்திய அரசில் உள்ள 8 லட்சத்து 75 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்த வேலை நிறுத்தத்துக்கு தி.மு.க., இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் 25 கோடிக்கும் மேல் மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு இன்னும் அதிகமானோர் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.”இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், வரும் 28, 29 தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்த செய்யப்படும் என்று அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், மார்ச் 28, 29ல் தொழிற்சங்க ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்த செய்யப்படும் என்றும் 28, 29 தேதிகளில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பற்றிய தகவல்களை துறைவாரியாக அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

error: Content is protected !!