June 4, 2023

சினிமா என்றாலே ஒரு ஆண் ஒரு பெண்ணை விரட்டி விரட்டி காதலிப்பது தொடங்கி அரசியல் குழப்பம், தீயவர்களோடு மோதுவது, புரட்சி வசனங்கள் பேசி மக்களை கவர்வது போன்றவைகளை அழகான மனிதர்கள், அறைகுறை ஆடைகள், ஆடம்பரம், ரம்மியமான இயற்கைக்காட்சிகளுடன் காட்டும் போக்கே அதிகம். இச்சூழலில் புத்தம் புது கதையை முழுக்க, முழுக்க வித்தியாசமான பாணியில் நிஜமாகவே பிரமாண்டமாக கொடுத்து அசத்தும் டைரக்டர்களில் தனி இடம் பிடித்துக் கொண்டிருக்கும் ராஜமெளலியின் புது படம் ஆர் ஆர் ஆர். அதாவது ரத்தம், ரணம், ரெளத்திரம் என்ற டைட்டிலில் இந்த சினிமா ரிலீஸாகி இருக்கிறது. மிகச் சிலருக்கு மட்டும் வழக்கம் போல் பிடிக்காத இப்படம் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு இடத்தை கண்டிப்பாக பிடிக்கும்.

கதை என்னவென்றால் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்கையை தழுவியது என்று சொன்னார்கள்.. ஆனால் படத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேல்குடி பெண் ஒருவருக்கு பழங்குடி இன சிறுமியான மல்லி, அழகாக பாட்டுப்பாடிக்கொண்டே கையில் வண்ணம் தீட்டி விட, அடடே இந்த அழகு மல்லி இனி இங்கிலாந்து அடிமை எனக் கூறி கையோடு அரண்மனைக்கு அழைத்துச் சென்று விடுகிறார். அந்த சிறுமி மல்லிவை மீட்க பழங்குடி காப்பானாக பீம் ( ஜூனியர் என்.டி.ஆர்) திட்டம் தீட்டி ஆங்கிலேயர்களை சந்திக்க போகிறான். இதனையடுத்து பீம் வருகையை நிறுத்தி அவரை அரெஸ்ட் செய்யும் பொறுப்பு, பிரிட்டிஷ் போலீஸ் படையில் ஸ்பெஷல் போலீஸ்ஆபீசராக மாறத்துடிக்கும் ராமராஜூடம் கொடுக்கப்படுகிறது . ஆனால் அந்த ராமராஜூவும் பீமுவும் எதிர்பாராத விதமாக திக் ஃபிரண்ட்ஸ் ஆகி விடுகிறார்கள். அந்த நட்பு என்னானது?, இருவரும் போன பாதையில் வெற்றி அடைந்தார்களா? மல்லி மீட்கப்பட்டாளா? போன்ற கேள்விகளுக்கான விடைதான் ஆர் ஆர் ஆர் ..

படத்தில் ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பழங்குடியினர் கதாபாத்திரத்திற்கு ஜூனியர் என்டிஆர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சாதுவான ராம்சரணை ‘பையா பையா’ என அழைப்பதாகட்டும், மல்லிகாவிடம் பாசத்தில் உருகுவதாகட்டும், நேர்மையின் நெஞ்சுறுதியை காட்சிக்கு காட்சி பார்வையாளர் களுக்கு கடத்துவதாகட்டும் என அனைத்திலும் முழு மதிப்பெண் வாங்கி அப்ளாஸ் வாங்குகிறார். குறிப்பாக தண்டனை பெறும் காட்சியில் மனதை உழுக்க வைக்கிறார். அதுபோல் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருக்கிறார் ராம் சரண். காதல், தந்தைக்கு கொடுத்த சத்தியம், லட்சியம் என்று நடிப்பில் பளிச்சிடுகிறார்.. இரண்டு சூப்பர் ஹீரோக்களில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற கேள்விக்கே இடம் கொடுக்காதவாறு ராம்சரண் நெருப்பு என்றும் ஜூனியர் என்டிஆர் நீர் என்றும் புரிய வைத்து இருவரின் கேரக்டரையும் ரேஸில் மாறி மாறி முன்னுக்கு வந்து, இறுதியில் ஒன்று சேர்ந்து இறுதிக் கோட்டை தொடும் போக்கு அபாரம். இண்டர்வெல்லுக்கு பிறகு வரும் அஜய் தேவ்கன் போராளியாக மனதில் நிற்கிறார். ஸ்ரேயாவிற்கு பெரியதாக வேலை இல்லை. ஆலியா பட், ராம் சரண் காதலியாக வந்து கவர்ந்து இருக்கிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் சமுத்திரக்கனி.

சுதந்திரத்திற்கு முன்பான பீரியட் படம் என்பதால் முழுக்க முழுக்க ஆர்ட் டைரக்டரின் கைவண்ணத்திலேயே பெரும்பாலான படப்பிடிப்பு நடந்துள்ளது, ஆனால் எந்த காட்சியிலுமே எதுவும் செட் என்றே தோன்றவில்லை . அந்தளவிற்கு கலை இயக்குனர் சாபுசிரிலின் பங்களிப்பு அமைந்துள்ளது. அதேபோல் கேமரா, சண்டைக் காட்சிகள், நடனம் என அனைவருமே தங்களது அதிகபட்ச உழைப்பையே கொடுத்துள்ளனர். VFX குழுவும் கிராபிக்ஸ் பணிகளை சிறப்பாக செய்து படத்தை மெருகேற்றி இருக்கிறார்கள். MM கீரவாணியின் இசையில் பாடல்கள் ஹிட்டடித்த நிலையில், பின்னணி இசையிலும் குறையில்லை.

பாகுபலி 1 & 2 படத்தின் ஹிட் மற்றும் பிரம்மாண்டத்திற்கு பிறகு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி. அதே அளவு பிரமிப்பூட்டும் ஆக்ஷன் காட்சிகள் கொடுத்து படத்தை வழங்கி இருக்கிறார். இரண்டு மெகா ஸ்டார்களுக்கிடையே ஏகப்பட்ட கதாபாத்திரங்களை நடமாட விட்டு திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ரொம்ப சிம்பிளான கதைக் கருவை வைத்து அதில் சுதந்திர போராட்டத்தை எல்லாம் திரைக்கதையாக அமைத்து புல்லரிக்கும்படியாக கொடுத்து அசத்தி இருக்கிறார். அதே சமயம் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக நெருடவில்லை. படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம் என்று சில நொடிகள் மட்டும் ஃபீல் பண்ண வைத்ததும் உண்மை.

மொத்தத்தில் ஆர் ஆர் ஆர் – அட்டகாசமான பக்கா சினிமா

மார்க் 4 / 5