இலங்கையின் இந்த நெருக்கடியில் ஆதரவுக் கரம் நீட்டியே ஆக வேண்டும்!

இலங்கையின் இந்த நெருக்கடியில் ஆதரவுக் கரம் நீட்டியே ஆக வேண்டும்!

லங்கை ஒரு இயற்கை வளங்கள் நிறைந்த நாடு, இலங்கையின் பிற நிலப்பகுதிகள் குறித்தும் அறிந்து கொள்ளவியலாத அளவில் கடந்த 40 ஆண்டுகளில் ஒரு அழுத்தம் நிலைகொண்டிருந்தது. தமிழீழத்திற்காக நடந்த நீண்ட போர்ச்சூழல் மலையகத் தமிழர் வாழ்வியல், கிழக்கு மாகாண இஸ்லாமியத் தமிழர் வாழ்வியல் குறித்தும் கூட நாம் தெரிந்து கொள்ள முடியாதபடி ஒரு உணர்வுப்பூர்வமான நிலையிலேயே நம்மை வைத்திருந்தது. பிறகு நாம் சிங்களர்களின் வாழ்வியல் குறித்து அறிந்து கொள்ள முடியாமல் போனது இயல்பானது தான்.

மலையகத் தமிழர்களின் வாழ்வியல் குறித்தாவது குறைந்தபட்ச ஊடக வெளிச்சம் இருந்து வந்ததைப் பார்க்க முடிந்திருக்கிறது, படைப்புகள் மூலமாக, எதிர்ப்புக் குரலின் வழியாக அவர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்கள். ஈழத்திற்கான போராட்டத்தில் குவிக்கப்படும் கவனத்தில் சிறிதளவாவது எமது நெடுங்கால வறுமையும், துயரும் சூழ்ந்த மலையக மக்களின் வாழ்வில் காட்டப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக அவர்கள் ஆதங்கம் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கிழக்கு மாகாணத் தமிழர்கள் (குறிப்பாக இஸ்லாமியர்கள்) இதில் எந்தக் கணக்கிலும் வராதவர்கள்.

அவர்கள் பல வழிகளிலும் ஒரு தேசத்தின் விளிம்பிற்குத் தள்ளப்படடவர்கள். அவர்கள் தங்கள் வழிபாட்டுரிமைகளையும், மதத் தனித்துவத்தையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பினார்கள். ஈழப் போராட்டத்தில் இருந்த தமிழ் இனக்குழுக்கள் இந்தத் தனித்துவ மத அடையாளங்களை அவர்கள் களைய வேண்டும் என்று விரும்பினார்கள். சிங்கள இனவாதிகள் பிற மதங்களின் மீது நல்லிணக்கத்தைப் பேணுபவர்களாக ஒரு போதும் இருக்கவில்லை. கிழக்கில் வாழும் இஸ்லாமிய மதநம்பிக்கை கொண்ட தமிழர்கள் மொழியின் மீது நன்மதிப்பும், அழியாத நேசமும் கொண்டவர்கள்.

ஆனால் சிங்களப் பேரினத்தின் அரசியல் வரலாற்றில் மானுடப் பண்பாட்டை முன்னிறுத்திய, உலக மாந்தர்களோடு அவர்களையும் இணைக்கிற பணியைச் செய்தவர்கள் இலங்கையின் இடதுசாரிகள், 80 களின் துவக்கத்தில் சிங்களத் திரைப்படங்களில் நல்லிணக்கத்தை முயற்சி செய்த இடதுசாரி இயக்குனர்கள். பிற்காலத்தில் குறிப்பாக சஞ்சீவ புஷ்பகுமார, சோமரத்னே திசநாயகே, போரின் பெயரால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தொடர்ந்து எதிர்த்து வந்த ஊடகவியலாளர்கள், அதற்காகத் தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் 20 பேர். இதில் காணாமல் போன அல்லது படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கேவின் குரல் உலக அரங்கை உலுக்கியது.

ஆகவே, பொது சிங்கள சமூகம் மனசாட்சியுள்ள நீதியை நேசித்த மானுடர்களை உள்ளடக்கியது என்பதில் நாம் முரண்படத் தேவையில்லை. அதிகாரத்தின் பக்கமிருந்த சிங்களத் தலைவர்களில் எவருக்கும் நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கமிருக்கவில்லை. திறந்த மனதோடு தமிழர்-சிங்களர் வாழ்வியல் சமூக முரண்களைக் களையும் நோக்கம் கொண்டவர் எவரும் இல்லாமல் போனது இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட பெருந்துயரம். இலங்கையின் புவியியல் இந்தியப் பெருங்கடலில் தங்கள் மேலாண்மையை நிலைநாட்டவும், ஆசியாவின் ராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யவும் விரும்பிய வல்லாதிக்க சக்திகளான சீனா, அமெரிக்கா தவிர்த்து, இந்தியாவின் கடற்புற எல்லை நலன்கள் மற்றும் பல்வேறு அரசியல் காரணங்களால் ஒரு நெருக்கடியான அழுத்த நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

இந்த அழுத்தமானது உள்நாட்டு அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார சூழல்களில் அதிகாரத்தில் இருந்தவர்கள் அக்கறை காட்டுவதில் இருந்து தவிர்த்தது. போரை ஒரு உணர்ச்சிகரமான அதிகாரத்துக்கான கருவியாகப் பயன்படுத்திய ராஜபக்ச குடும்பம் அதன் மூலமாக அசைக்க‌ முடியாத செல்வாக்கையும் பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. ஆட்சி நிர்வாகத்தில் பெரிய அளவில் பயிற்சியும், அனுபவமும் இல்லாத ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் பலர் நாட்டின் உயர் பதவிகளில் அமர்ந்து கொட்டமடித்தார்கள்.

120 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அவர்களுக்கு ஒன்றுக்கு மூன்று செயலாளர்கள் என்று மக்களின் வரிப்பணத்தை சூறையிட்டது அரசுத்தரப்பு. சுற்றுலா, தேயிலை, கடற்போக்குவரத்து என்று வருமானமீட்டிய அனைத்துத் துறைகளும் கொரோனா பெருந்தொற்றில் முடங்கிப் போக, விவசாயத்தை நம்பி இருந்தது இலங்கை. கோத்தபாய ராஜபக்சேவின் புதிய சுதேசி விவசாயக் கோட்பாடுகள் இலங்கையின் பாரம்பரிய அரிசி விவசாயத்திற்கும் பலத்த அதிர்ச்சி அளிக்க கடைசி நம்பிக்கையும் பொய்த்துப் போனது. இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி என்பது தமிழர், சிங்களர் என்று இருதரப்பிலும் எளிய உழைக்கும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிற விஷயம், தொலைநோக்குப் பார்வையுள்ள தேசத்தின் மீது உண்மையான அக்கறையுள்ள ஒரு தலைவனுக்காக நீண்ட காலமாக அந்த தேசம் காத்திருக்கிறது.

உணர்ச்சிகரமான இனவாத அரசியல், மத அரசியல் பேசி அடிப்படை உட்கட்டுமான அமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, உள்நாட்டு உற்பத்தி, பொருளாதாரம் போன்றவற்றில் முற்றிலுமாக கவனம் செலுத்த மறந்த தேசங்களின் வரலாற்றில் நிகழ்ந்த அதே இடர்ப்பாடு தான் இலங்கையிலும் இப்போது நிகழ்ந்திருக்கிறது. இலங்கையோடு மிக நெருக்கமான வரலாற்றுத் தொடர்பு கொண்ட தமிழ் சமூகம் இந்த நெருக்கடியை உற்று நோக்குகிறது, வழக்கம் போல உணர்ச்சிகர மேடை முழக்கவாதிகள் “பார்த்தாயா, தமிழர்களை அடித்தாய் அல்லவா, பட்டினி கிடந்து செத்துப் போ” என்று வன்மத்தைக் கக்குவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், மேம்பட்ட நாகரீகத்தின் குரலாக இலங்கையின் இந்த நெருக்கடியில் ஆதரவுக் கரம் நீட்டுபவர்களாக நாம் இருந்தாக வேண்டும்.பசியும், வறுமையும் எதிரிகளின் குழந்தைகளை வதைப்பதையும் நாம் எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அல்ல, இம்முறையும் நாம் அப்படியே இருப்போம்.

கை.அறிவழகன்

Related Posts