கேப்டன் – விமர்சனம்

யக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர். பிரசன்னாவின் நாணயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் மனிதனின் மூளையில் முழுக்க முழுக்க மிருக வெறியை மட்டும் தூண்டும் விதமாக ஒரு நோயையும் ஜாம்பியையும் மையமாக வைத்து ‘மிருதன்’, உயிரற்று இருக்கும் பொம்மையில் உடல் நுழையும் சிந்தனையுடன் ‘டெடி’,விண்வெளியை அடிப்படையாக கொண்டு ‘டிக் டிக் டிக்’ என்று கோலிவுட்டிற்கே முற்றிலும் புதிதான களத்துடன் யோசித்து படம் வழங்கியவர் . அப்பேர்பட்டர் டைரக்‌ஷனில் ஏலியன் சர்வைவல் + மிலிட்டரி பேக்ரவுண்டுடன் திரில்லர் டைப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படமே கேப்டன்.

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலப் பகுதி ஒன்றில் ராணுவத்தில் கேப்டன் ஆக இருப்பவர் ஆர்யா. அவரது தலைமையில் உள்ள குழுவினர் மிகவும் திறமைசாலிகள். அப்படிப்பட்ட டீமிடம் செக்டர் 42 எனப்படும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் என்ன நடக்கிறது என்பதை கண்டு பிடிக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், அங்கே போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை என்பது தான். அப்படி அங்கு என்ன இருக்கிறது என்பதை கண்டறிய செல்லும் ஆர்யாவின் டீம் மின்டோஸ் எனப்படும் ஒரு அதிசய மிருகம் அப்பகுதிக்கு வருபவர்களை தாக்கி கொல்கிறது என்பதை தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஆர்யாவை அந்த மின்டாஸ் தாக்க வரும்போது அதனுடன் சண்டையிட்டு அடித்து சாய்த்து ஆராய்ச்சிக்காக கொண்டு வருகிறார். அதை டாக்டர் சிம்ரன் ஆராய்ச்சி செய்து சில தகவல்களை சொல்வதுடன் இந்த ஒரு மின்டோஸ் மட்டுமல்ல ஏராளமான மின்டோஸ்கள் இருப்பதாகவும், அந்த கூட்டத்துக்கு ஒரு தலைமை மிருகம் இருக்கும் என்பதையும் சொல்கிறார். உடனே தனி ஆளாக களமிறங்கி போராடி மின்டோஸின் தலைமை மிருகத்தை ஆர்யா எப்படி அழிக்கிறார் என்பதை படபடப்புடன் விளக்க முயல்வதே இந்த கேப்டன் கதை..!

டீம் கேப்டனாக வரும் ஆர்யா கிடைத்த ரோலுக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறார். கேப்டன் என்பதால் தனது டீமிடம் தொண்டை கிழிய கத்தி அலப்பறை எல்லாம் செய்யாமல் மென்மையாக பேசி உத்தரவுகள் பிறப்பித்து சாகசங்கள் செய்திருப்பது ரசிக்க வைக்கிறது.

கூட்டாளிகளாக வரும் கோகுல், ஹரிஸ், உத்தமன், காவ்யா உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை நிறைவாக செய்துள்ளனர். ராணுவ கேம்ப்பில் டாக்டராக வரும் சிம்ரன் நெகடிவ் பாத்திரத்தில் மிளிர்கிறார். தனது திட்டம் நிறைவேற்றுவதற்காக தந்திரமாக காய் நகர்த்துவதும் அதை கண்டுபிடிக்கும் ஆர்யா சாதுர்யமாக செயல்பட்டு சிம்ரனின் திட்டத்தை முடியடிப்பதும் டுவிஸ்ட்.

ஆர்யாவை காதலிக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு அவ்வளவாக வேலை இல்லை. தொடக்கத்தில் சில காட்சிகளும் கிளைமாக்சில் சில காட்சிகளும் வந்து செல்கிறார்.

இந்தப் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகள் முழுக்க முழுக்க சென்னையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. நம்மாட்களின் கை வண்ணத்தில் உருவான வினோத மிருகத்தின் தோற்றம், வடிவமெல்லாம் மிரட்டல் ரகம்தான்.. ஆனாலும் பல கிராபிக்ஸ் காட்சிகள் ஆர்வமின்மையை ஏற்படுத்தி இருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். .!

இசை மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்திருக் கிறார் டி.இமான். கூடவே கைலா பாடல், அக்ரினை நான் பாடல்கள் கொஞ்ச நேரம் நினைவில் நிற்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.யுவா கேமரா ஒர்க் சபாஷ் சொல்ல வைத்திருக்கிறது.

மொத்தத்தில் தமிழில் ஏலியன் வகையறா படம் ஒன்று எண்ட்ரியாகி இருக்கிறது – குறைகள் இருந்தாலும் ரசிக்க நிறைய விஷயங்கள் கொண்ட ஒரு படமிது

மார்க் 3/5

 

error: Content is protected !!