‘பிரதர்’ படம் கிளீன் ஃபேமிலி எண்டர்டெய்னர்!

‘பிரதர்’ படம் கிளீன் ஃபேமிலி எண்டர்டெய்னர்!

யக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார் , சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ் . பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால், மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை ஆசிஷ் ஜோசப் கையாள , கலை இயக்கத்தை ஆர் .கிஷோர் மேற் கொண்டிருக்கிறார். அக்கா-தம்பி சகோதர பாசத்தை மையப்படுத்தி உணர்வுப்பூர்வமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் என்டர் டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் இயக்குநர் எம். ராஜேஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, நட்டி என்கிற நட்ராஜ், விடிவி கணேஷ், நடிகை பூமிகா சாவ்லா, ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம், படத்தொகுப்பாளர் ஆசிஷ் ஜோசப், கலை இயக்குநர் ஆர் .கிஷோர், சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் படத் தொகுப்பாளர் ஆசிஷ் ஜோசப் பேசுகையில், ”இயக்குநர் ராஜேஷ் உடன் இணைந்து பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் காட்சிகளின் நீளம் நான்கரை மணி நேரமாக இருந்தது. அதனை இரண்டரை மணி நேரமாக தொகுப்பது என்பது சவாலாக இருந்தது.‌ இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் படத்தை தொகுத்திருக்கிறோம் . திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

கலை இயக்குநர் ஆர். கிஷோர் பேசுகையில், ”இயக்குநர் ராஜேஷ் உடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கு சவாலானதாக இருந்தது.‌ படப்பிடிப்புக்கு முன்னரே நிறைய முன்-தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். அதிலும் குறிப்பாக அரங்குகள், வண்ணங்கள் என பலவற்றிலும் யோசித்து பணியாற்றினோம். உடன் பணியாற்றிய மூத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். நான் வளரும் தொழில்நுட்பக் கலைஞர் என்பதால் அனைவரும் தங்களின் பங்களிப்பை வழங்கி எனக்கு ஆதரவளித்தனர். இதற்காக படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம் பேசுகையில், ”இயக்குநர் ராஜேஷின் படங்களில் சண்டை காட்சிகள் இருக்காது. அவர் முதன் முதலாக இயக்கியிருக்கும் ஆக்ஷன் ஸ்கிரிப்ட் இது. இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ நானும் நடிகர் ஜெயம் ரவியும் ஒய் எம் சி எ மைதானத்தில் பயிற்சி பெறும் போதே அறிமுகமாகி இருக்கிறோம். நல்ல நண்பர். நான் திரைப்படங்களில் உதவி சண்டை கலைஞராக பணியாற்றும் போதே அவரைத் தெரியும்.‌ அவருக்காக இந்த படத்தில் சண்டைக் காட்சியை அமைப்பதற்கு வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம் பேசுகையில், ”இயக்குநர் ராஜேஷின் திரைப்படங்கள் பெரும்பாலும் உரையாடலை மையப்படுத்தியதாக இருக்கும். ஆனால் பிரதர் படத்தின் கதையைக் கேட்கும் போது அவர் விஷுவலுக்கும், டயலாக்கிற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பது புரிந்தது.‌ இந்தக் கதை சென்னையிலும், ஊட்டியிலும் நடைபெறுவது போல் எழுதப்பட்டிருக்கிறது.‌ அதற்காக நானும் இயக்குநரும் நன்றாக புரிந்து கொண்டு உழைத்திருக்கிறோம்.ஸ்கிரீன் சீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. ஏற்கனவே அவர்களின் தயாரிப்பில் உருவான ‘அகிலன்’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இந்தத் திரைப்படத்தை பார்க்கும் போது பூமிகாவை போல் வரும் சகோதரி இல்லையே என்ற ஏக்கம் சகோதரிகளுடன் பிறக்காதவர்களுக்கு ஏற்படும். சகோதரியுடன் பிறந்தவர்களுக்கு ஒரு முறை சகோதரியை காண வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதற்கு ஏற்ற வகையில் இயக்குநர் ராஜேஷ் படத்தை உணர்வுபூர்வமாகவும் உருவாக்கி இருக்கிறார்,” என்றார்.

நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன் பேசுகையில், ”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. இன்றைய சூழலில் அரசியல் படங்கள், நகைச்சுவை படங்கள் என பல படங்கள் வந்திருக்கிறது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் ஃபேமிலியை பற்றி பேசும் படங்கள் மிக குறைவாகத்தான் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் அந்தக் குறையை தீர்க்கும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். நடிகர் ஜெயம் ரவி பட்டாசை போல் வெடித்திருக்கிறார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தின் கதாபாத்திரத்திற்கும், இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் கார்த்திக் எனும் கதாபாத்திரத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனால் இந்த தீபாவளிக்கு சரவெடியாக ஜெயம் ரவியின் நடிப்பு இருக்கும். இந்தப் படத்தில் விடிவி கணேஷ் படபடவென பொரிந்து தள்ளுவார். இந்த தீபாவளிக்கு ரசிகர்களின் கொண்டாட்டம் இவராகத்தான் இருக்கும்.நீண்ட நாள் கழித்து திரையரங்குகளில் ஒரு படத்தை பார்த்துவிட்டு ஃபீல் குட் உணர்வுடன் வீடு திரும்பும் ஒரு படமாக இந்த பிரதர் படம் இருக்கும்,” என்றார்.

நடிகர் விடிவி கணேஷ் பேசுகையில், ”இயக்குநர் ராஜேஷ் காமெடி படங்களை இயக்குவதில் வல்லவர். அவர் எப்படி இது போன்ற ஃபேமிலி படத்தை இயக்க உள்ளார் என எதிர்பார்த்தேன். என்னை சந்தித்து பேசும்போது என் கதாபாத்திரத்திற்கான விஷயங்களைப் பற்றி மட்டும் சொன்னார். அவர் ஏற்கனவே நல்ல படங்களை இயக்கிய இயக்குநர் என்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்து நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். அதே தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர் கதை கேட்டு தான் படத்தை தயாரிக்க ஒப்புக் கொள்வார் என எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால் அவர் மீதும் நம்பிக்கை வைத்தேன். இவர்களையெல்லாம் கடந்து எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ ஜெயம் ரவியின் படம் இது. நல்ல ஹைட் .நல்ல கலர். திறமையான நடிகர். அவருக்கு நடிப்பை விட டைரக்ஷன் நாலெட்ஜ் அதிகம். எனக்குத் தெரிந்து சிம்புவிற்கு அடுத்து இது போன்ற நாலெட்ஜ் உள்ளவர் ஜெயம் ரவி மட்டும்தான். இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஹிட்டான பாடல்கள் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கிவிட்டார். அதன் பிறகு இயக்குநர் என்னிடம் பேசும்போது படத்தின் பின்னணி இசையும் பிரமாதமாக வந்திருக்கிறது என்றார். ஒரு வகையில் இது ஹாரிஸ் ஜெயராஜின் கம் பேக் படமாக இருக்கும்.பொதுவாக வீட்டைப் பற்றிய நினைப்பே தற்போது இல்லாது இருப்பவர்களுக்கு இந்த திரைப்படம் குடும்பத்தை பற்றிய எண்ணத்தை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு இயக்குநர் ராஜேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் மீது தயாரிப்பாளர் வைத்திருக்கும் நம்பிக்கையை ரசிகர்களாகிய நீங்களும் கை கொடுத்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை பூமிகா சாவ்லா பேசுகையில்,”இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. இந்த படத்தில் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது. நடிகர் ரவி அற்புதமான மனிதர், திறமையான நடிகர். பிரியங்கா அருள் மோகன் க்யூட்டான பொண்ணு.‌ இந்த திரைப்படம் அக்காவிற்கும் தம்பிக்கும் இடையேயான உறவை பேசுகிறது. இந்த படத்தை திருவிழா நாளில் திரையரங்கத்திற்கு சென்று ரசித்து கொண்டாடுங்கள்,” என்றார்.

இயக்குநர் எம். ராஜேஷ் பேசுகையில், ”மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தீபாவளி திருநாளில் என்னுடைய திரைப்படம் வெளியாகிறது. என்னுடைய இயக்கத்தில் உருவான படம் திரையரங்கத்தில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு என்னுடைய படம் திரையரங்கில் வெளியாகிறது.‌ கொண்டாட்டத்திற்குரிய திரைப்படம் திருவிழா நாளில் வெளியாகிறது.‌ இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.‌ இதற்காக ஜெயம் ரவிக்கு நன்றி சொல்கிறேன். இதற்கு முன் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என பேசினோம். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தப் படத்தின் திரைக்கதையை நான் அவரிடம் சொன்னபோது அவர் முழுவதும் கேட்டுவிட்டு ஓகே சொன்னார். அப்போதிலிருந்து இப்போது வரை நடிகர் என்பதை கடந்து உதவி செய்வதுடன் முழுமையான ஒத்துழைப்பையும் அளித்து வருகிறார். இந்தப் படத்திற்காக நடிகராக மட்டுமில்லாமல் அவருக்குத் தோன்றும் எண்ணங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார். படத்தை விளம்பரப்படுத்துவதற்கும் நிறைய ஆலோசனைகளை வழங்கினார். அவர் இல்லாமல் இந்த திரைப்படம் இல்லை. இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌இதில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுடைய திறமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.இது ஒரு கிளீன் ஃபேமிலி எண்டர்டெய்னர். இந்த படத்தை சென்சார் குழுவினர் பார்த்தபோது ஒரு கட் கூட கொடுக்காமல் கிளீன் யூ சர்டிபிகேட்டை கொடுத்தார்கள். இதுவே எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.தீபாவளியன்று குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடும் திரைப்படமாக ‘பிரதர்’ இருக்கும்,’ என்றார்.

நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், ”பிரதர் திரைப்படம் நல்லதொரு டீசன்டான மூவி.‌ லீனியர் நரேஷனில் அழகான படமாகவும் குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி அடையும் வகையிலும் பிரதர் உருவாகி இருக்கிறது. ஒரு தீபாவளி படத்திற்கு என்னென்ன டிக் மார்க் வேண்டுமோ, அவை எல்லாம் ஒன்றாக சேர்ந்திருக்கும் படம் தான் பிரதர். இந்தப் படத்தை உருவாக்கும் போதும் நாங்கள் அனைவரும் சந்தோஷமாகவே பணியாற்றினோம். இந்தப் படத்தில் படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இருந்தோம்.

என்னுடைய ரசிகர்கள் நான் நடனம் ஆட வில்லை என வருத்தப்பட்டார்கள். மேலும்‌ நான் ஏ சர்டிபிகேட் படங்களில் மட்டும் தான் நடிக்கிறேன் என்றும் வருத்தப் பட்டார்கள். அவர்களுக்காகவும் இந்த படத்தில் நடனமாடி இருக்கிறேன். யூ சான்றிதழ் பெற்ற படம். இது. எதிர்காலத்தில் டான்ஸ் இருக்கிற படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மக்கா மிஷி’ பாடல் ஹிட் ஆகியிருக்கிறது. ஆனால் இந்த படத்தில் அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே ஒரு எமோஷனலான பாட்டு இருக்கிறது. இந்தப் பாட்டு .. படம் வெளியான பிறகு ஹிட் ஆகும். இந்தப் படம் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று ஜாலியாக ரசிக்கக் கூடிய படம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்,” என்றார்.

error: Content is protected !!