செய்தியைக் கேட்க / Listen to News
இந்திய சமூக அமைப்பில் பெண்களின் நிலை மற்றும் அவர்களின் உரிமை குறித்த விவாதங்களில் மனுஸ்மிருதி எப்போதும் ஒரு முக்கிய புள்ளியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல சமூக, அரசியல் தலைவர்கள் மனுஸ்மிருதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் கருத்தியல் பின்னணியாக மனுஸ்மிருதியின் தத்துவங்களே இருக்கின்றன என்றும், பெண்களின் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் எதிரான அந்தப் பிற்போக்கு எண்ணங்களை நாம் முற்றிலும் எதிர்த்து தகர்க்க வேண்டும் என்றும் அவர்கள் முன்வைக்கும் வாதம் இந்திய அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மனுஸ்மிருதி தொடர்பான விவாதம் என்பது நவீன இந்தியா எந்த திசையை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற கருத்தியல் போரைக் காட்டுகிறது. ஒருபுறம், பிறப்பின் அடிப்படையில் உரிமைகளைப் பிரித்த பண்டைய சட்டங்கள்; மறுபுறம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பு சட்டம். நவீன ஜனநாயக இந்தியாவில், மனுஸ்மிருதிக்கு எந்த சட்டப் பூர்வமான அதிகாரமும் இல்லை என்பதை சட்ட வல்லுநர்கள் தெளிவுபடுத்துகின்றனர். இருப்பினும், சமூக அமைப்பிலும், கருத்தியல் தளத்திலும் அதன் நிழல் இன்னும் தொடர்வதால், இந்த விவாதம் இந்திய அரசியலிலும் சமூகவியலிலும் இன்றும் ஒரு மிக முக்கியமான விவாதப் பொருளாக நீடிக்கிறது.
மனுஸ்மிருதியின் தோற்றமும் அதன் சட்ட அந்தஸ்தும்
மனுஸ்மிருதி அல்லது மனு தர்மசாஸ்திரம் என்பது பண்டைய சமூக நெறிமுறைகள், குற்றவியல் மற்றும் குடிமையியல் சட்டங்கள், அரசரின் கடமைகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு தொகுப்பாகும். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இது கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் தொகுக்கப்பட்டிருக்கலாம். பண்டைய காலத்தில் இது இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு அரசியலமைப்பு சட்டமாகவோ அல்லது அரசு உத்தரவாகவோ செயல்படவில்லை. மாறாக, பிராந்தியத்திற்குப் பிராந்தியம் வழக்கத்தில் இருந்த உள்ளூர் ஆசாரங்கள் மற்றும் மரபுகளே மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தீர்மானித்தன.
பிரிட்டிஷ் ஆட்சியும் மனுஸ்மிருதியின் புதிய பரிமாணமும்
மனுஸ்மிருதிக்கு இந்திய வரலாற்றில் ஒரு மையப்படுத்தப்பட்ட சட்டப் புத்தகம் போன்ற அந்தஸ்து கிடைத்ததற்கு பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியே முதன்மை காரணமாகும். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்தியர்களை அவர்களின் சொந்த சட்டங்களின்படியே நிர்வகிக்க விரும்பிய வில்லியம் ஜோன்ஸ் போன்ற ஆங்கிலேய அதிகாரிகள், இந்து சட்டங்களைத் தொகுக்க முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் சமஸ்கிருத பண்டிதர்களை அணுகியபோது, அவர்களுக்கு மனுஸ்மிருதி அறிமுகப்படுத்தப்பட்டது. 1794 இல் வில்லியம் ஜோன்ஸ் மனுஸ்மிருதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதன் மூலம், அதுவரை வெவ்வேறு சமூகங்களில் நிலவிய பல்வகைப்பட்ட வழக்காறுகளை விடுத்து, மனுஸ்மிருதியை ஒட்டுமொத்த இந்துக்களுக்குமான பொதுவான சட்ட மூலமாக ஆங்கிலேயர்கள் கருதத் தொடங்கினர். இந்த நடவடிக்கை மனுஸ்மிருதியின் செல்வாக்கை இந்திய சமூகத்தில் பன்மடங்கு உயர்த்தியது.
நவீன இந்தியாவின் எதிர்ப்பும் அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்பும்
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்திய சீர்திருத்தவாதிகள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான தலைவர்கள் மனுஸ்மிருதியில் உள்ள சாதிய படிநிலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான நெறிமுறைகளை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். குறிப்பாக, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் வர்ணாசிரம தர்மத்தையும், சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளையும் மனுஸ்மிருதி நியாயப்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
தந்தை பெரியார் தமிழ்நாட்டில் மனுஸ்மிருதிக்கு எதிராக வலுவான பிரச்சாரங்களை மேற்கொண்டார். இந்தியாவில் 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் நடந்த மகத் போராட்டத்தின் போது, மனுஸ்மிருதி பிரதி பகிரங்கமாக எரிக்கப்பட்டது. இது இந்திய சமூக சீர்திருத்த வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. சமூக சமத்துவமின்மையின் குறியீடாக மனுஸ்மிருதியைப் பார்த்த அம்பேத்கர், நவீன இந்தியாவின் சட்டமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்.
ராகுல் காந்தி முன்வைக்கும் முதன்மையான குற்றச்சாட்டுகள்
இச்சூழலில் ராகுல் காந்தி மற்றும் மனுஸ்மிருதியை எதிர்க்கும் தரப்பினர் முன்வைக்கும் முக்கியமான கருத்து, மனுஸ்மிருதி என்பது ஒரு தனி மனிதரின் சுதந்திரத்தையோ அல்லது பெண் உரிமையையோ மதிக்கும் நூல் அல்ல என்பதாகும். பெண்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகள்: மனுஸ்மிருதியில் பெண்களை எப்போதும் ஒரு ஆணின் கட்டுப்பாட்டிலேயே வைக்க வேண்டும் என்ற கருத்து வெளிப்படையாகப் பேசப்படுகிறது. சிறுவயதில் தந்தையின் பாதுகாப்பிலும், திருமணத்திற்குப் பின் கணவனின் பாதுகாப்பிலும், முதிய வயதில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண் இருக்க வேண்டும் என்றும், பெண் ஒருபோதும் சுதந்திரத்திற்கு உரியவள் அல்ல என்றும் மனுஸ்மிருதி கூறுகிறது. இந்த எண்ணம் நவீன ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது.
சமூகத்தை வர்ண அடிப்படையில் பிரிப்பது மட்டுமின்றி, பெண்களுக்கான கல்வி, சொத்துரிமை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரங்களை மனுஸ்மிருதி மறுக்கிறது. பெண்களை வெறும் குடும்ப அமைப்பிற்குள்ளும், ஆண்களுக்குப் பணிவிடை செய்யும் நிலைக்குள்ளும் மட்டுமே கட்டுப்படுத்த அது முயல்கிறது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் மனுஸ்மிருதி இடையேயான தொடர்பு குறித்த விமர்சனம்
குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியில் மனுஸ்மிருதியின் தாக்கம் இருப்பதாக ராகுல் காந்தி கடுமையாகக் குற்றம் சாட்டுகிறார். முன்னதாக 1949-இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதி முடிக்கப்பட்ட போது, ஆர்.எஸ்.எஸ்-இன் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ (Organizer), இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பண்டைய இந்திய சட்டங்களான மனுஸ்மிருதியின் அம்சங்கள் சேர்க்கப்படவில்லை என்று அதிருப்தி வெளியிட்டதை வரலாற்றுச் சான்றாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதை சுட்டிக்காட்டி ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புகள் பேசும் ‘பாரம்பரிய குடும்பக் கோட்பாடுகள்’ மற்றும் ‘சமூக ஒழுக்கம்’ என்பவை உண்மையில் மனுஸ்மிருதி உருவாக்கிய தந்தைவழிச் சமூகக் கட்டுப்பாடுகளின் நவீன வடிவமே என்பது ராகுல் காந்தியின் முக்கிய வாதம். மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி உள்ள பத்தி ஒன்றை அவமானகரமானது என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, “பெண்கள் யாருக்கும் அடிபணிந்தவர்களாக இருக்க முடியாது.” என்றார்.மேலும் பேசிய ராகுல் காந்தி, “இதில் ஒரு பிரச்னை உள்ளது, அது மிகப்பெரிய பிரச்னை. நான் எப்போது ஆண்களிடம் பேசினாலும் பெண்கள் மகள், மனைவி அல்லது தாய் என்கிற மூன்று கட்டங்களிலே வைக்கப்படுகின்றனர்.”ஒரு தாயாக, மனைவியாக மற்றும் மகளாகப் பார்க்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறும் ராகுல் காந்தி, ஆனால் அது மட்டுமே ஒரே அடையாளமாக இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.ஆனால், “அது சிறுவயதில் பெண்கள் தந்தைக்கு அடிபணிந்தவராகவும், இளமைப் பருவத்தில் கணவருக்கு அடிபணிந்தவராகவும், கணவன் இல்லாதபோது மகன்களுக்கு அடிபணிந்தவராகவும் இருக்க வேண்டும் என்கிறது. ஒரு பெண் எப்போதுமே சுதந்திரமாக இருக்க முடியாது.” எனத் தெரிவித்தார். அத்துடன் இது நேரடியாக மனுஸ்மிருதியில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறிய ராகுல் காந்தி இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கவே கூடாது என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்காலத் தேவையும் அரசியல் பரிமாணமும்
இன்றைய காலகட்டத்தில் மனுஸ்மிருதியை எதிர்ப்பது என்பது வெறும் ஒரு புத்தகத்தை எதிர்ப்பது மட்டுமல்ல; அது பெண் அடக்குமுறைக்கு எதிரான ஒரு கருத்தியல் போராட்டம். பெண்களை மீண்டும் பழைய அடிமைத்தனத்திற்குள்ளும், சமையலறை எல்லைக்குள்ளும் சுருக்க நினைக்கும் எந்தவொரு தத்துவத்தையும் முறியடிக்க வேண்டியது ஜனநாயகத்தின் கடமையாகும்.
எனவே, ராகுல் காந்தி குறிப்பிடுவது போல, பெண்களின் கல்வி, பொருளாதாரம், அரசியல் அதிகாரம் மற்றும் சுயமரியாதையை உறுதி செய்ய வேண்டுமானால், மனுஸ்மிருதி கட்டமைத்த தந்தைவழி மனநிலையையும், அதைத் தாங்கிப்பிடிக்கும் அரசியல் சக்திகளையும் எதிர்த்து நிற்பது அவசியமாகிறது. அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள சமத்துவக் காற்றைச் சுவாசித்து, பெண்கள் தங்களின் முழு சுதந்திரத்தையும் அடைவதே இந்த விவாதத்தின் உண்மையான வெற்றியாகும்.
ரமாபிரபா
