தமிழ் குரல் / AI Voice
1947-ம் ஆண்டு தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியில் புன்னையாடி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார் ராஜகோபால். வழக்கம் போல பெரிய பண பலமோ, மக்கள் செல்வாக்கோ அதிகம் இல்லாத சாதாரண விவசாயக் குடும்பம். பெரிய அளவில் படிப்போ பட்டங்களோ கிடையாது.ஆனால் கடுமையாக உழைக்கத் தெரியும். ஒவ்வொரு நாளும் மணிக் கணக்கு பார்க்காமல் கடிகாரத்தோடு போட்டி போட்டு உழைப்பாராம். இயல்பாகவே வியாபாரம் அவர் ரத்தத்திலும் அறிவிலும் இருந்ததாம். எனவே 1973-ல் பிழைப்புக்காக சென்னைக்கு டிக்கெட் எடுத்துவிட்டார். நாமாக இருந்தால் “பெரிய படிப்பு ஒன்றும் இல்லை… எனவே எப்படியாவது ஒரு வேலைக்கு போய் சம்பாதிப்போம்” என்று தானே நினைப்போம்.
அந்த முதல் படியில் இருந்தே நம் ராஜகோபால் அண்ணாச்சி, வெகு ஜன மக்களில் இருந்து மாறுபட்டுவிட்டார். வந்தவர் எங்கும் வேலைக்குப் போகவில்லை. கையில் இருந்த காசை வைத்து, அடித்துப் பிடித்து, சொந்தமாக ஒரு மளிகை கடை போட்டு விட்டார். அன்றில் இருந்தே அண்ணாச்சி முதலாளி தான் .1973 முதல் 1981 வரை ராஜகோபால் அண்ணாச்சி, இந்தியாவில் மளிகைக் கடை வைத்திருக்கும் லட்சம் வியாபாரிகளில் ஒருவர். சென்னை கே கே நகர் பகுதியில் கடை ஓகேவாக ஓடிக் கொண்டு இருந்தது. அந்த காலங்களில், சென்னை சிங்காரச் சென்னை ஆக உருமாறிக் கொண்டு இருந்தது. அந்த உருமாற்றம் மற்றும் வளர்ச்சி தான் நம் அண்ணாச்சிக்கு அடுத்த வியாபாரத்தைக் காட்டியது.

சென்னை அரசியல் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் ஒரு வளர்ந்து கொண்டிருந்த நகரம் என்பதால், பல மாவட்ட மற்றும் மாநில மக்கள் வந்து போகும் இடமாக இருந்தது. எத்தனையோ பேர் “சென்னைக்கு வந்தா எங்கங்க நல்ல சோறு தண்ணி கிடைக்கும்” என முனுமுனுப்பதை வெளிப்படையாக நம் ராஜகோபால் அண்ணாச்சியே கேட்டு இருக்கிறாராம்.அட ஆமால்ல…! நாமளே ஒரு சின்ன ஹோட்டல் போட்டா என்ன..? நல்ல வாழை இலையில், தரமான அரிசிச் சோறு, நல்ல மனமான சாம்பார், செறிக்கும் ரசம், தரமான தயிர், இஞ்சி பச்சை மிளகாய் தட்டிப் போட்ட மோர், அருமையாக ஒரு கூட்டு, ஒரு பொறியல், பிரமாதமாக ஒரு பாயசம் போட்டால் நன்றாக ஓடும் போல் இருக்கிறதே என ஐடியா பொறி தட்டியது
உடனே தன் ஜோசியரிடம் பிசினஸ் ஆலோசனை கேட்டிருக்கிறார் நம் புன்னையாடி ராஜகோபால் அண்ணாச்சி. நெருப்பு சம்பந்தப்பட்ட துறையில் வியாபாரம் தொடங்கினால் ஜெக ஜோதியாக வருவீர்கள் எனச் சொல்லி இருக்கிறார். அப்புறம் என்ன ஜோசியரே சொல்லிட்டாரே, அடுத்த வேலையப் பார்ப்போம் என ஹோட்டல் தொடங்கும் வேலையில் மும்முரமாக இறங்கிவிட்டாராம்.தன் மளிகைக் கடை போட்ட கே கே நகரிலேயே ஒரு ஹோட்டலையும் போட்டார். அது தான் இன்றைய Saravana Bhavan. நட்டம் கே கே நகரில் கடை போட்டால் எல்லாம் முடிந்ததா..? வரும் வாடிக்கையாளர்கள் “சாம்பார்ன்னா இதான்யா சாம்பார்” என பாராட்டினால் போதுமா..? அசல் பிரச்னையே அப்போது தான் ஆரம்பம். ஆரம்பத்திலேயே உயர் தர எண்ணெய், நல்ல காய்கறிகள், பக்குவமாக அரைத்த மாவில் இட்லி தோசை என தரத்தில் சமரசம் இல்லாமல் சாப்பாடு போடுகிறார் நம் Saravana Bhavan அண்ணாச்சி. கடுமையான நட்டம். 1981-லேயே மாதம் 10,000 நட்டம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆனாலும் சென்னையில் நல்ல உணவகங்கள் இல்லாத வெற்றிடத்தை புரிந்து கொண்ட நம் ராஜகோபால் கே கே நகரில் மட்டும் கடை நடத்தினால் பத்தாது என்பதையும் வெகு சில வருடங்களில் புரிந்து கொண்டார். அடுத்த சில ஆண்டுகளிலேயே, சென்னையின் சில முக்கிய இடங்களில் கடையைப் போட்டார். படு ஜோராக கல்லா கட்டினார்.சரவண பவனில் 1980 மற்றும் 1990-களில் சரவண பவனில் சாப்பிட்டவர்கள் (குறிப்பாக தமிழர்கள் + தென் இந்தியர்கள்) “பொங்கல் என்ன டேஸ்ங்குற” “தோச பாவுண்டுந்திரா” (தோசை சூப்பர்) “மீல்ஸ் அடி பொலியடா” (மீல்ஸ் சூப்பர்) “இட்லி தும்பா சென்னாகிதே” (இட்லி நல்ல இருக்கு) என பரவத் தொடங்கியது.
ஆக ஊரில் இருந்து யாராவது சென்னைக்கு வந்தால், ஒரு வேளை சாப்பாட்டை சரவண பவனில் சாப்பிடுவது என கங்கனம் கட்டிக் கொண்டு வரும் அளவுக்கு மக்கள் வயிற்றில் இடம் பிடித்தது சரவண பவன். அதோடு கடைகளின் எண்ணிக்கையும் பரவியது. சரவண பவன் தோசையும் சாம்பாரும் மெல்ல தென் இந்தியப் புகழ் அடையத் தொடங்கியது. நம் தமிழர்கள், எப்போதும் புதுமை விரும்பிகள் தானே..! எத்தனை நாளுக்குத் தான் அதே இட்லி, தோசை, மீல்ஸ் வைத்து ஓட்டுவது என யோசித்தார் அண்ணாச்சி. அதென்ன நார்த் இண்டியன் உணவு என விசாரித்தார். மெல்ல நான், பன்னீர் பட்டர் மசாலா என வட இந்திய உணவுகள் தொடங்கி, சைனீஸ் வரை தன் மெனு கார்டில் சேர்த்தார். ஆனால் அப்போதும் சரவண பவனின் இட்லி, தோசை, சாம்பார் தான் ராஜாவாக இருந்தது.

1990-களில் தமிழகம் முழுக்க கிளை பரப்பிவிட்டு, அடுத்து என்ன என்று யோசித்த போது தான் வெளிநாடுகளில் கடை போடுவதைப் பற்றி யோசிக்கிறார். 1992- 93 காலங்களில் அண்ணாச்சி சிங்கப்பூருக்குச் சென்று இருந்த போது, மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்கள், எப்படி அசுரத் தனமாக கிளை விரித்து வியாபாரம் செய்கிறார்கள் என பார்வை இட வாய்ப்பு கிடைத்தது. ஐடியா..!2000 வாக்கில் துபாயில், ஹோட்டல் சரவண பவன் கால் பதித்தது. இன்று வரை லண்டன், பாரிஸ், நியூ யார்க் என உலக நாடுகளில் 43 முக்கிய நகரங்களில் கடை போட்டு தன் சுவையால் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது Saravana Bhavan. பொதுவாகவே இந்திய சமையல், அதிகம் ஆட்களை நம்பியே சமைக்கப்படுவை. எனவே சமையல்காரர்களை இங்கிருந்து பல நாடுகளுக்கு அனுப்பி வியாபாரம் பார்த்தார் அண்ணாச்சி.
சமையல் கலைஞர்களை, இங்கிருந்து அனுப்பிய அண்ணாச்சி, புத்திசாலித்தனமாக, வெளிநாடுகளில் நடத்த வேண்டிய கடைகளை பெரும்பாலும் ஃப்ரான்சைஸ் விட்டு விட்டார். ஆக நிர்வாகம், அந்த நாட்டு அரசாங்கத்திடம் அனுமதி வாங்குவது, வரி செலுத்துவது எல்லாம் அவர்கள் தலைவலி ஆனது. ஃப்ரான்சைஸ் கொடுப்பதால், அண்ணாச்சிக்கு வந்து சேர வேண்டிய லாபம் தானே வந்தது. வெளிநாடுகளில் வியாபாரம் நடத்தும் ரிஸ்கை அவர் எடுத்துக் கொள்ளவில்லை.
அப்படி Saravana Bhavan தொடங்கப்பட்டு நல்ல பெயர், தன் துறையில் புகழின் உச்சம், சக போட்டியாளரின் பாராட்டு, தொழிலாளர்களின் விசுவாசம், ஊர்மக்களின் அன்பு, செழிப்பான வாழ்கை, அளவுக்கு அதிகமான காசு பணம்… என எல்லாம் மிகச் சிறப்பாக ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தாலும், தன் வீழ்ச்சிக்கு தானே குழி தோண்டிக் கொண்டார் ராஜகோபால் அண்ணாச்சி என்பது தனிக் கதை!
எனி வே விஷ் அண்ணாச்சி
நிலவளம் ரெங்கராஜன்
