பீகார் – நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் கெலிப்பு!

பீகார் – நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் கெலிப்பு!

ஆறாவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிதிஷ்குமார் அம்மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று பெரும்பான்மையை நிரூபித்து விட்டார். விழாயக்கிழமை முதல்வராக நிதிஷ்குமாரும் துணை முதல்வராக பாரதிய ஜனதா மாநில தலைவர் சுஷில்குமார் மோடியும் பதவியேற்று கொண்டனர். பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கேசரிநாத் திரிபாதி இரண்டு நாட்களுக்குள் அவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக பீகார் சட்டப்பேரவையின் சிறப்புக் கூடத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் படி, இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

முன்னதாக பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மெகா கூட்டணி ஆட்சியமைத்து இருந்தது. முதல்வராக ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமாரும், துணை முதல்-அமைச்சராக ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பதவி வகித்து வந்தனர்.

இந்த ஆட்சி சுமார் 2 ஆண்டுகளை எட்டியிருந்த நிலையில் மெகா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. ரயில்வே ஓட்டல்களுக்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. இதையடுத்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் விரும்பியது. ஆனால், ராஷ்டிரிய ஜனதா தளம் மறுத்துவிட்டது.

இதனால் அதிருப்தியடைந்த நிதிஷ் குமார் தனது முதல்-மந்திரி பதவியை நேற்று முன்தினம் இரவு திடீரென ராஜினாமா செய்தார். மாநில பொறுப்பு கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதிரடி திருப்பமாக நிதிஷ் குமாருக்கு பாஜக ஆதரவு அளிக்க முன்வந்தது. இதையடுத்து நிதிஷ் குமார் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை பெற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், மாநிலத்தில் அரசை அமைக்குமாறு நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று காலை பீகார் முதல் அமைச்சராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக பாஜகவைச்சேர்ந்த சுஷில் குமாரும் பதவி ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..