வங்கி ஊழியா்கள் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம்! ஏன்?

வங்கி ஊழியா்கள் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம்! ஏன்?

பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 4 நாட்களுக்கு பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் ஆக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி மார்ச் 15, 16–ந்தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, “பெரு முதலாளிகளின் தனியார் வங்கிகளை ஊக்கப்படுத்தி, முதன்மை நிலைக்குக் கொண்டு வருவதற்காக, சிறப்பாகச் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு மிகுந்த முனைப்புடன் சீர்குலைத்து வருகிறது. ஏற்கனவே ஐடிபிஐ வங்கிப் பங்குகளை விற்றுத் தனியார் மயமாக்கப்பட்டு விட்டது. 14 பொதுத்துறை வங்கிகளை இணைத்ததன் மூலம் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கப் போவதாக மத்திய அரசு கூறுகிறது.

இதுவரையில் வரி வசூல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட அரசுத் துறைகளின் பணப் பரிவர்த்தனை பொதுத்துறை வங்கிகள் மூலமே நடைபெற்று வந்தது. தற்போது மத்திய அரசு தனியார் வங்கிகளையும் இதில் அனுமதித்துள்ளது. சம வாய்ப்பு வழங்குவதாக நியாயம் பேசுகிறது.ஆனால் மத்திய அரசு பெருமையடித்துக் கொள்ளும் ஜன்தன் வங்கி கணக்குகளை 12 கோடிப் பேருக்குத் திறந்தது பொதுத்துறை வங்கிகள்தான். தனியார் வங்கிகள் ஒரு கோடிப் பேருக்கே வழங்கின. விவசாயக் கடன், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்குக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றைப் பொதுத்துறை வங்கிகள்தான் வழங்குகின்றன. கிராமங்களில் வங்கிக் கிளைகள் திறந்திருப்பதும் பொதுத்துறை வங்கிகளே. இவையனைத்தும் தனியார் மயப்படுத்தி னால் அழிந்து போகும்.

நம்பிக்கையோடு பொதுத்துறை வங்கிகளில் சாதாரண மக்கள் வைத்துள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு மாற்றுவதே தனியார் மயமாகும். இவற்றுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் மார்ச் 15, 16 தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். தமது நலன்களை முன்னிறுத்தாமல் மக்கள் நலனையும், நாட்டு நலனையும் காப்பதற்காக வேலை நிறுத்தம் செய்கிறார்கள் வங்கி ஊழியர்கள்.” என்று தெரிவித்தார்கள்

அந்த வகையில் இன்று 2-வது சனிக்கிழமை, நாளை ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்த 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் நடக்க உள்ளதால், இன்று முதல் 16–ந்தேதி வரை 4 நாட்கள் பொதுத் துறை வங்கிகள் செயல்படாது. இதனால், பணம், காசோலை பரி வர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்து விதமான வங்கிச் சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது

error: Content is protected !!