எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகளை பயன்படுத்த தடை! – மத்திய அரசு அதிரடி!

எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகளை பயன்படுத்த தடை! – மத்திய அரசு அதிரடி!

இந்தாண்டு பருவமழை வழக்கத்தை விடக் குறைவாக பெய்ததால் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதன் விலை உயரத் தொடங்கியுள்ளது. .. சில்லறை விற்பனையில் 2023 ஜனவரி 1ஆம் தேதியன்று ஒரு கிலோ சர்க்கரையின் விலை ரூ.41.45 ஆக இருந்தது. அதன் விலை ஜூலை 1ஆம் தேதி ஒரு கிலோவுக்கு ரூ.42.98 ஆக உயர்ந்துள்ளது. இப்போது சராசரியாக ரூ.43.42க்கு விற்கப்படுகிறது. அத்துடன் கரும்பு உற்பத்தி குறைந்துள்ளதால், சர்க்கரை ஆலை உரிமையாளர்களும் கவலையடைந்துள்ளனர். கரும்பு பற்றாக்குறையால் சர்க்கரை ஆலைகளின் உற்பத்தி குறைந்துள்ளது. கணக்கீடுகளின்படி, சர்க்கரை உற்பத்தி 3.3 சதவீதம் குறைந்துள்ளது. இச் சூழ்நிலையில் எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகளை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் உத்தரவில், சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புச் சாற்றையோ, கூழையோ எத்தனால் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘எத்தனால்’ தயாரிப்பில் முதலீடு செய்த நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா.இம்முறை, கரும்பு விளையும் முக்கியப் பகுதிகளில் வழக்கத்தைவிடக் குறைவான மழைப்பொழிவு பதிவானதால் சர்க்கரை உற்பத்தி குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எத்தனால் தயாரிப்பதற்கு கரும்பை பயன்படுத்த தடை விதித்துள்ளது மத்திய அரசு. அதன்படி, எத்தனால் விநியோக ஆண்டு (ESY) 2023-24இல் எத்தனால் உற்பத்திக்கு கரும்பு சாறு அல்லது சர்க்கரை பாகை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தடையை விதித்து நுகர்வோர் விவகார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சர்க்கரை நிறுவனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கத்தில் மத்திய அரசின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக எரிபொருளுடன் கலப்பதற்கு போதுமான எத்தனால் இருப்புக்கள் கிடைப்பது குறித்து இந்த நடவடிக்கை கவலை அளிக்கிறது.

மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க முயற்சியின் முக்கியமான அம்சமான எரிபொருளுடன் கலப்பதற்கு எத்தனால் இருப்புக்கள் போதுமான அளவு கிடைக்குமா என்ற அச்சத்தை எழுப்புகிறது. நடப்பு பருவத்துக்கான உயிரி எரிபொருளை உற்பத்தி செய்ய கரும்பு சாற்றை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!